என்ன நோய், எந்த டாக்டர்? 15 - காது, மூக்கு, தொண்டை... மூன்று உறுப்புகள், ஒரே மருத்துவர்... ஏன்?

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு
உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் சிகிச்சையளிக்க இன்று பிரத்யேக சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் காது, மூக்கு, தொண்டை மூன்றுக்கும் சேர்த்து ஒரே மருத்துவர்தான். இந்த மூன்றுக்குமான தொடர்பு, இந்த மூன்று உறுப்புகளையும் பாதிக்கும் பிரச்னைகள், அறிகுறிகள், தீர்வுகள் குறித்து விளக்கமாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.
காது, மூக்கு, தொண்டை...- என்ன கனெக்ஷன்?
மூக்குக்கும் தொண்டைக்குமான தொடர்பு நமக்கெல் லாம் தெரியும். மூக்கின் வழியே சுவாசிக்கும் காற்றானது தொண்டைக்குச் செல்கிறது. ஆனால், காதுக்கும் தொண்டைக்கும், மூக்குக்கும் என்ன தொடர்பு என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூக்கின் பின் பக்கம் அல்லது தொண்டைக்கு மேல்பக்கம் உள்ள இரண்டு குழாய்களுக்கும் இரண்டு பக்க காதுகளுக்கும் தொடர்புண்டு. அதனால் மூக்கிலோ, தொண்டையிலோ வரும் தொற்றானது, காதுக்கும் பரவ வாய்ப்பு உண்டு. இப்படி மூன்று உறுப்புகளும் ஒருசேர பாதிக்கப்படுவதால் காது, மூக்கு, தொண்டை என மூன்றுக்கும் சேர்த்து மருத்துவம் பார்க்கிறோம்.
காது, மூக்கு, தொண்டை... பரவலாக பாதிக்கும் பிரச்னைகள்
இந்த மூன்று உறுப்புகளையும் பாதிக்கும் பிரச்னைகளில் பிரதானமானது தொற்று. சளி பிடிப்பது, தொண்டை வலி, எரிச்சல் என எல்லாமே காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புதான். லேசான தொற்றாக இருக்கும்போது மூக்கும், தொண்டையும் மட்டும் பாதிக்கப்படும். அதுவே தொற்று சற்று அதிகமானால் காதுக்கும் பரவலாம். இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும். சாதாரண சளி, இருமல் தவிர்த்து, மூக்கிலோ, காதிலோ கட்டிகள் வரலாம். உயிருக்கே ஆபத்தான இன்ஃபெக்ஷன் வரவும் வாய்ப்புகள் உண்டு.
காதையும் மூளையையும் பிரிப்பது ஒரே ஓர் எலும்புதான். அதேபோல தொண்டையின் மேல்பகுதிக்கும் மூளைக்கும் இடையிலும் சின்ன எலும்புதான் பிரிக்கும். இந்த எலும்பு களில் இன்ஃபெக்ஷன் வந்தால் அது மூளை யின் நரம்புகளைத் தாக்கி, உயிருக்கே ஆபத்தான ‘ஸ்கல் பேஸ் ஆஸ்டியோ மைலைட்டிஸ்’ (Skull Base Osteomyelitis) எனும் பிரச்னையில் முடியலாம். இது எல்லோருக்கும் வருவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வரும். கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு, சிறுநீரக பிரச்னை, இதயநோய்கள் உள்ளவர்கள் போன்றோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப் பட்டிருந்தால், இதுபோன்ற தொற்றுகள் பேராபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
சைனஸ் மற்றும் தொண்டைச்சதை வீக்கம்... இ.என்.டி மருத்துவரா?
சாதாரணமாக சளி பிடிக்கும்போதும் இன்ஃபெக்ஷன் ஏற்படும் போதும் பொது மருத்து வரை அணுகி சிகிச்சை எடுக்கலாம். ஒருவருக்கு சராசரியாக வருடத்தில் நான்கைந்து முறை சளி பிடிப்பதும், தொண்டையில் தொற்று ஏற்படுவதும் இயல்பானதுதான். இப்படி இல்லாமல் வருடம் முழுவதும் சளி இருக்கிறது, எப்போதும் தும்மல் இருக்கிறது, மூக்கடைப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது, சளி பிடித்து சரியானாலும் மீண்டும் இரண்டு, மூன்று நாள்களில் மறுபடி சளி பிடிக்கிறது என இருந்தால் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரை அணுகி, காரணங்கள் அறிந்து சிகிச்சை எடுக்கலாம்.
சிலருக்கு ஒவ்வாமை காரணமாக இப்படி ஏற்படலாம். சிலருக்கு மூக்கில் அடைப்போ, சைனஸ் தொற்றோ இருக்கலாம். சாதாரணமாக தொற்று ஏற்படும்போது ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்து குணப்படுத்துவோம். அதுவே ஒருவருக்கு இந்தப் பிரச்னை தொடர்கதையாக இருக்கும்போது இ.என்.டி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதுதான் நிரந்தர தீர்வாக அமையும்.

தொண்டையின் இரு பக்கங்களிலும் வாய்க்குப் பின்னால் இருக்கும் நெறிக்கட்டி போன்றதுதான் டான்சில்ஸ். குழந்தைகளுக்கு 4 வயது தொடங்கி, 10, 12 வயது வரை இது பெரிதாக இருக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி இன்ஃபெக்ஷன் வரும்போது டான்சில் பகுதி யில் அது தங்கி, அதனாலும் இன்ஃபெக்ஷன் வர வாய்ப்பு உண்டு. மருந்துகள் எடுத்தாலும் இந்தத் தொற்று தொடரும்போது அறுவை சிகிச்சை செய்து அதை நீக்க வேண்டியிருக்கும்.
30-40 வருடங்களுக்கு முன்பு இப்போ துள்ளது போல மருந்துகள் இல்லாததால் நிறைய குழந்தைகளுக்கு டான்சில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இன்று நவீன மருந்துகள் வந்துவிட்டதாலும் அடிக்கடி தொற்று வருவது குறைந்திருப்பதாலும் டான்சில் அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந் திருக்கிறது. அரிதாக பெரிய வர்களில் சிலருக்கும் இந்த அறுவைசிகிச்சை தேவைப் படலாம்.
தலைச்சுற்றலுக்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஏன்?
கேட்பது, பேசுவது, வாசனையை உணர்வது என காதுகளுக்கு, நாக்குக்கு, மூக்குக்கு என பிரத்யேக இயக்கங்கள் உண்டு. காதுகளைப் பொறுத்தவரை கேட்கும் திறனுக்கான நரம்பு தவிர்த்து, உடலின் பேலன்ஸுடன் தொடர்புடைய இன்னொரு நரம்பும் இருக்கும்.
அதென்ன பேலன்ஸ்..?
பேருந்தில் பயணம் செய்கிறோம் அல்லது ராட்டினத்தில் சுற்றுகிறோம்... கண்களைத் திறந்திருக்கும்போது அதை நாம் உணர்வோம். அதே நேரம் கண்களை மூடியிருந்தாலும் நாம் எங்கிருக்கிறோம் என்பதை உணர முடிகிற தல்லவா? அந்த உணர்வுக்கு காரணமே உள் காதில் உள்ள அந்த நரம்புப் பகுதிதான். அந்த நரம்புப்பகுதி பாதிக்கப்படும்போது, நாம் உட்கார்ந்திருக்கும்போதே ராட்டினத்தில் சுற்றுகிற மாதிரியான தலைச்சுற்றலை உணர் வோம். அதனால்தான் தலைச்சுற்றல் வரும் போது முதலில் பொது மருத்துவரை அணுகி, ரத்த அழுத்தம், நீரிழிவு காரணமாக ஏற்பட்ட தலைச்சுற்றலா என்பதைத் தெரிந்துகொண்டு அப்படி இல்லாத பட்சத்தில் அடுத்தபடியாக காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற அறிவுறுத்தப் படுகிறது.
தலைவலிக்கும் இ.என்.டி மருத்துவரா?
தலைவலிக்கான காரணங்கள் பல இருக்கலாம். சிலருக்கு சைனஸ் பிரச்னை காரணமாகவும் தலைவலி வரலாம். ஆனால் அவர்களுக்கு சைனஸ் இருப்பதே தெரியாது. எனவே நாள்பட்ட தலைவலிக்கு எந்தச் சிகிச்சையும் பலனளிக்காத பட்சத்தில் இ.என்.டி மருத்துவரை அணுக வேண்டும்.
குளிர்காற்றில் காதுகளை மூட வேண்டுமா?
குளிர்காலத்தில் நாம் மூக்கின் வழியே சுவாசிக்கும் காற்றானது ரொம்பவும் குளிர்ச்சியாக இருந்து, அது மூக்கிலோ, தொண்டையிலோ தொற்றை ஏற்படுத்தினால், அதன் விளைவாக காதுகளும் பாதிக்கப்படும். குளிர்ப்பிரதேசங்களில் பயணம் செய்யும்போது மூக்கின் வழியே குளிர் காற்று உள்ளே சென்று இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தாமல் இருக்க, மூக்குப் பகுதியை மறைக்கும்படி மாஸ்க் அல்லது துணி அணிந்து கொள்ளலாம். குளிரைத் தவிர்க்க நினைப்போரும் காதுகளை மூடிக் கொள்ளலாம்.

இனிப்பு, சாக்லேட் கொடுத்தால் டான்சில் பாதிப்பு வருமா?
இனிப்புக்கும் இன்ஃபெக்ஷனுக்கும் பெரிய தொடர்பில்லை. ஆனால் நிறைய குழந்தை களுக்கு பால் அலர்ஜி இருக்கலாம். பேக்கரி உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதால் சளி பிடிக்கலாம். இனிப்பு உள்பட வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளால் இப்படி எந்தப் பிரச்னையும் வருவதில்லை. வெளியிடங்களில் வாங்கும்போது அவை எந்த அளவு சுகாதார மாகத் தயாரிக்கப்படுகின்றன, கையாளப் படுகின்றன என்பது கேள்விக்குரியதாகிறது. தொற்று ஏற்பட அதுதான் காரணம்.
ஐஸ்க்ரீமும் அதே போலத்தான். சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு, உடனே சாப்பிடுகிறபோது ஐஸ்க்ரீமால் பிரச்னை வருவதில்லை. தயாரிக்கப்பட்டு பல நாள்கள் ஆகி, இடையில் குளிர்பதனப் பெட்டி இயங்காமல் உருகி, அதில் தொற்று ஏற்பட்டு அந்த ஐஸ்க்ரீமை சாப்பிடும்போதுதான் பிரச்னை வருகிறது. ரொம்பவும் குளிர்ச்சியான ஐஸ்க்ரீமை சாப்பிடும்போது தொண்டைப்பகுதியில் ரத்த ஓட்டம் தற்காலிகமாகக் குறைகிறது. அதனால் இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற் காக ஐஸ்க்ரீமே சாப்பிடக்கூடாது என அர்த்த மில்லை. அடிக்கடி குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அதைத் தவிர்ப்பது சிறந்தது. சுத்தமாகத் தயாரிக்கப்ட்ட உணவுகளைச் சாப் பிடும்போது எந்தப் பிரச்னையும் வருவதில்லை.
சாக்லேட்டுக்கும் இன்ஃபெக்ஷனுக்கும் பெரிய தொடர்பில்லை. ஆனால், குழந்தைகள் அளவுக்கதிகமாக சாக்லேட் சாப்பிடும்போது வேறு பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம். சாக்லேட்டில் கெமிக்கல் சேர்ப்பு மிக அதிகம் என்பதால் அளவு குறைவாகச் சாப்பிடுவதுதான் நல்லது. சாக்லேட்டிலும் அலர்ஜியை ஏற்படுத் தும் காரணிகள் உள்ளதால் அடிக்கடி சாப்பிடு வதைத் தவிர்க்கலாம்.
- பிறந்த குழந்தைகளும் குறட்டை விடுவது ஏன்... இயர்போன் உபயோகித்தால் கேட்கும் திறன் பாதிக்கப்படுமா..? - அடுத்த இதழில்.....