மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன நோய், எந்த டாக்டர்? 16 - இயர்போன், இயர்பாட்ஸ் உபயோகம்... கேட்கும் திறனை பாதிக்குமா?

இயர்போன், இயர்பாட்ஸ் உபயோகம்
பிரீமியம் ஸ்டோரி
News
இயர்போன், இயர்பாட்ஸ் உபயோகம்

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

சென்ற இதழ் தொடர்ச்சி...

உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் சிகிச்சையளிக்க இன்று பிரத்யேக சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் காது, மூக்கு, தொண்டை மூன்றுக்கும் சேர்த்து ஒரே மருத்துவர்தான். இந்த மூன்றுக்குமான தொடர்பு, இந்த மூன்று உறுப்புகளையும் பாதிக்கும் பிரச்னைகள், அறிகுறிகள், தீர்வுகள் குறித்து சென்ற இதழைத் தொடர்ந்து இந்த இதழிலும் விளக்கமாகப் பேசுகிறார், சென்னை யைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.

குறட்டைக்கு சிகிச்சை தேவையா?

தூங்கும்போது குறட்டை விடுவதை பலரும் சாதாரண விஷயமாகக் கடந்து போகிறார்கள். குறட்டையில் வெறும் சத்தம் மட்டும் வந்தால் அது மற்றவர்களைத் தொந்தரவு செய்கிற ஒன்று. அந்தச் சத்தத்தை மீறி, சில நேரங்களில் மூச்சுவிடுவதே தடைப் படலாம். அந்த நிலையில் 8 மணி நேரம் தூங்கினால்கூட உடலுக்கு ஓய்வோ, தூங்கிய நிறைவோ கிடைக்காது. காலையில் தூங்கி எழுந்திருக்கும் போது ஃப்ரெஷ்ஷாக உணர மாட்டார்கள். பகல் வேளை யிலும் தூக்கம் வருவதாக உணர்வார்கள். இதே நிலை மாதக்கணக்கில் தொடர்ந்தால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு வரலாம். அதன் தொடர்ச்சியாக பக்கவாதமும், இதய நோயும் பாதிக்கவும் அதிக ரிஸ்க் உண்டு. எனவே குறட்டையை அலட்சியமாகக் கையாளாமல் இ.என்.டி மருத்துவரை அணுகி, பிரத்யேக டெஸ்ட்டுகளை செய்து சரி குணப்படுத்த வேண்டியது மிக அவசியம். மூச்சுவிடுவதில் சிரமம் இல்லாமல், மூக்கில் ஏதோ அடைப்பின் காரணமாகவும் சிலருக்கு குறட்டை வரலாம். அதை மருந்துகள் மூலமோ, சிறு அறுவை சிகிச்சை மூலமோ குணப்படுத்தலாம்.

என்ன நோய், எந்த டாக்டர்? 16 - இயர்போன், இயர்பாட்ஸ் உபயோகம்... கேட்கும் திறனை பாதிக்குமா?

பிறந்த குழந்தைக்கும் குறட்டை ஏன்?

பருமனுக்கும் குறட்டைக்கும் நிச்சயம் தொடர்புண்டு. இவர்களுக்கு மூக்கின் பின் பகுதியில் தொண்டையில் உள்ள சதைப்பகுதி அதிகமாக இருப்பதால் மூச்சு விடுவதற்கான இடம் மிகக் குறைவாக இருக்கும். இவர்கள் உடல் பருமனைக் குறைத்தாலே குறட்டை பிரச்னையிலிருந்தும் மீளலாம். அது இல்லாமல் மூக்கிலோ, தொண்டையிலோ கட்டியோ, அடைப்போ இருந் தாலும் குறட்டை வரலாம்.

நம் தொண்டைப் பகுதியில் டான்சில் இருப்பதுபோல தொண்டைக்குப் பின் பகுதியில் அடினாய்டு சுரப்பி இருக்கும். ஏழு வயது வரை இந்தச் சுரப்பி சாதாரணமாகவே சற்று பெரி தாக இருக்கும். பிறந்த குழந்தை களுக்கும் சில நேரங்களில், இந்தச் சுரப்பி பெரிதாக இருக்க லாம். அதனால் மூக்கின் பின் பகுதியை அந்தச் சுரப்பி அடைப்பதால் சரியாக மூச்சுவிட முடியாமல் குழந்தையும் குறட்டை விடலாம். சில மருந்துகள், மூக்கில் செலுத்தக்கூடிய ஸ்பிரே போன்றவற்றின் மூலம் இதைச் சரி செய்யலாம். அப்படிச் சரியாகாத பட்சத்தில் சிறிய அறுவைசிகிச்சை தேவைப்படலாம்.

இ.என்.டி பிரச்னைகளுக்கு காரணமாகுமா ஸ்ட்ரெஸ்?

ஸ்ட்ரெஸ் பல பிரச்னைகளுக்கு காரணமா வதைப்போல இ.என்.டி தொடர்பான பிரச்னைகளுக்கும் காரணமாகலாம். ஸ்ட்ரெஸ் அதிகமாகும்போது அசிடிட்டி எனப்படும் அமிலச்சுரப்பு அதிகமாகி, தொண்டையில் அமிலம் எதுக்களித்து வந்து தொண்டையை, குரலை பாதிக்கும். பொது வாகவே ஸ்ட்ரெஸ்ஸால் நோய் எதிர்ப்புத்திறன் குறையும். அதனால்தான் தேர்வு நேரத்தில் குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போவதெல்லாம் நடக்கிறது.

காது குடைவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

காதுக்குள் மெழுகுபோன்ற ஒன்று இயல் பாகவே சுரக்கும். அதிலுள்ள ஆன்டிசெப்டிக் குணங்கள், காதுக்குள் தொற்று ஏற்படாமல் தடுக்கக்கூடியவை. சிறிய அளவில் சுரக்கும் அந்த மெழுகானது தானாகவே வெளியேறி விடும்படி, காதின் அமைப்பு இருக்கும். அதை ஒன்றும் செய்யாமல் விட்டால் தானாகவே வெளியேறிவிடும். அதுவே `பட்ஸ்' வைத்தோ, `சேஃப்டி பின்' போன்ற எதை யாவது வைத்தோ குடையும் போது அது காதின் உள்ளே போய்விடும். அடிக்கடி இப்படிச் செய்வதால் உள்ளே அது அதிகம் சேர்ந்து, தானாக வெளியே வராத நிலைக்குப் போய்விடும். காது அடைத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அந்த நிலையில் மருத்துவரை அணுகி, மருந்து போட்டுதான் அதைச் சுத்தம் செய்ய வேண்டி யிருக்கும். தவிர காதின் பாதை யானது ஒரு இன்ச் அளவுக்குதான் இருக்கும். அடிக்கடி காதைக் குடைவதால், செவிப் பறை கிழிந்து, காது கேட்கும் திறனே பாதிக்கப் படலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இது பொருந்தும். மூக்குக்கும் இதே விதிதான். அடிக்கடி மூக்கைக் குடைவதால் ரத்தம் வரலாம்.

அவசரமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இ.என்.டி பிரச்னைகள்....

தொண்டைதான் சாப்பிடுவதற்கும், சுவாசிப்பதற்குமான வழி. அதில் ஏதேனும் பொருள் மாட்டிக்கொண்டால் சாப்பிடுவதும் சுவாசிப்பதும் சிரமமாகும். குழந்தைகள் விஷயத்தில் இது சகஜமாக நடக்கும். எதை யாவது விழுங்கிவிடுவார்கள். அது நுரையீரலுக் குள் போய்விடும். மூச்சும் விட முடியாது. ஆபத்தான, கூரிய பொருளாக இருக்கும் பட்சத்தில் உயிருக்கே ஆபத்தாகலாம். தொண்டை அல்லது கழுத்துப் பகுதியில் தொற்று ஏற்பட்டு, சீழ்ப்பிடித்து, மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டாலும் அவசர சிகிச்சை யாகப் பார்க்கப்பட வேண்டும். தொண்டையில் கட்டி வளர்ந்து மூச்சை அடைக்கலாம். கழுத்தில் துளையிட்டு, மூச்சு விடச் செய்யும் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகி திடீரென மூக்கிலிருந்து ரத்தம் வரலாம். தொற்றின் காரணமாகவும் வரலாம். அதுவும் எமர்ஜென்சியாக கவனிக்கப் பட வேண்டும்.

 பி.நடராஜ்
பி.நடராஜ்

குரலுக்கு ஓய்வு அவசியமா?

குரலைப் பாதுகாக்கும் வழிகள் என்று சிலவற்றைக் குறிப்பிடு வோம். தொடர்ந்து மணிக்கணக் காகப் பேசும்போது இடை யிடையே குரல்வளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். பத்து நிமிடங்களுக்கொருமுறை ஒரு வாய் தண்ணீர் குடிக்கலாம். தண்ணீர் குடிக்கும்போது எச்சிலை விழுங்குவதால் குரல் வளைக்கு ஓய்வு கிடைக்கும். தொண்டை வறண்டுபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேசும்போது ஏற்ற, இறக்கங் களுடன்தான் பேசுவோம். ஆனால், சிலர் எப்போதும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உரக்கவே பேசுவார்கள். அப்படி மணிக் கணக்கில் பேசினால் குரல்வளம் நிச்சயம் பாதிக்கப்படும். இவர்கள் குரலுக்கு ஓய்வு கொடுப்பதோடு, உணர்ச்சி வயப்படாமல் பேசவும் பழக வேண்டும். எப்போதாவது கோபத்தில் கத்துவது, சந்தோஷத்தில் குரலை உயர்த்திப் பேசுவதில் தவறில்லை. ஆனால், அதையே வழக்கமாக வைத்திருப்பதுதான் ஆபத்து. குரலுக்கு வேலை கொடுக்கும் பணிகளில் இருப்பவர்கள் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹெட் செட் உபயோகிப்பதாலோ, இயர்போன் உபயோகிப்பதாலோ கேட்கும் திறன் பாதிக்கப்படுவதில்லை. அதீத சத்தத்தை நாள்கணக்கில் கேட்கும்போது தான் கேட்கும் திறன் பாதிக்கப்படும்.  உதாரணத்துக்கு ஃபேக்டரியில் வேலை செய்வோர், ஏர்போர்ட் டில் வேலை செய்வோர், இசைக் கச்சேரி மேடைகளில் வேலை செய்வோர் போன்றோர் தினமும் அதிகபட்ச சத்தத்தைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.  அவர்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். கேட்கும் சத்தமானது அதிக டெசிபலில் இருக்கக்கூடாது. மற்றபடி போன்பேசும் போது இயர்போன் உபயோகிப்ப தால் கேட்கும் திறன் பாதிக்கப்படாது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மொபைல் போன் உபயோகிக்கிறோம். இது வரை அவற்றின் கதிரியக்கத்தால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. ஆனால், அதிக சத்தம் ஆபத்தானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எத்தனை டெசிபல் வரை நார்மல்?

சாதாரணமாக நாம் பேசுவது 40 டெசிபல். அதைத் தாண்டுவது அதிகம் என எடுத்துக் கொள்ள லாம். ஆனால், இப்படி டெசிபல் கணக்கெல்லாம் பார்த்து நம்மால் கேட்ஜெட்ஸை உபயோகப்படுத்த முடியாது. எனவே கேட்கும் ஒலியானது நமக்குத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். ஹெட்செட் போட்டுப் பேசும் போது ஒலி வெளியே கேட்கவில்லை என்றால் ஓகே. அரைமணி நேர உபயோகத்துக்குப் பிறகு நீங்கள் களைப்பாக உணர்ந்தாலே அது அதிக சத்தத்தில் இருந்ததற்கான அடையாளமாக இருக்கலாம்.

வருடாந்தர செக்கப் அவசியமா?

ரொட்டீன் செக்கப் தேவையில்லை. குழந்தைகளுக்கு அடிக்கடி தொற்று பாதித்தால் காது ஆரோக்கியத்தை செக் செய்ய வேண்டும். வயதானவர்களுக்கும் செக் செய்ய வேண்டும். அதிக சத்தத்தில் வேலை செய்வோர் வருடம் ஒருமுறை காதுகளைப் பரிசோதனை செய்ய வேண்டும் என இந்தியாவில் அரசு விதியே இருக்கிறது. பலரும் அதைச் செய்வதில்லை. ஆனால், அது மிக அவசியம். பிறந்த குழந்தைக்கு கேட்கும் திறனை டெஸ்ட் செய்வது இன்று நடைமுறையில் இருக்கிறது. ஒருவேளை பிரச்னை இருந்தால் சீக்கிரமே சரிசெய்ய வேண்டும் என்பதே நோக்கம்.

வயதானவர்களுக்குக் கேட்கும் திறன் பாதிக்கப்படுவது இயல்புதான். 60 வயதுக்குப் பிறகு இது ஆரம்பிக்கும். இது குறிப்பிட்ட வயதில் தொடங்குவதில்லை. முன்பிருந்தே மெள்ள மெள்ள ஆரம்பித்து அதை உணரும் போது முதுமையில் இருப்போம். சிலருக்கு வயதான பிறகும் கேட்கும் திறன் பாதிக்கப் படாமல் இருக்கலாம். சர்க்கரை நோயாளி களுக்கு இந்த பாதிப்பு அதிகமிருக்கும் என்பதால் ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

மற்றபடி சத்தான உணவுகள் சாப்பிட்டாலே போதுமானது.

அடுத்த இதழில் நுரையீரல் மருத்துவம்

- அலெர்ட் ஆவோம்...