மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன நோய்... எந்த டாக்டர்? 9 - எலும்பும், எலும்பு சார்ந்த பிரச்னைகளும்...

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு
பிரீமியம் ஸ்டோரி
News
உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு

மன உறுதி இல்லாதவர்களை முதுகெலும்பு இல்லாதவர் என உதாரணப்படுத்துவது வழக்கம். முதுகெலும்பு மட்டுமல்ல... நம் உடலின் ஒட்டுமொத்த எலும்பியல் மண்டலமுமே அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுதான். எலும்பில்லாமல் உருவமே சாத்தியமில்லை. எலும்புகளை பாதிக்கும் பிரச்னைகள், தீர்வுகள், எலும்புகளை ஆரோக் கியமாக வைத்துக்கொள்ளும் வழிகள், எந்தெந்தப் பிரச்னைகளக்கு எலும்பியல் மருத்துவரை அணுக வேண்டும்... எல்லா வற்றையும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார்.

‘`மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. நம் உடலுக்கு சப்போர்ட் கொடுப்பது, தசைகளை உறுதியாக வைத்திருப்பது, நடமாட்டம் போன்வற்றுக்கு எலும்புகள் மிக அவசியம். எலும்புகள் இல்லாமல் நம்மால் எந்த வேலையையும் செய்ய முடியாது. ஆரோக்கியத்துக்கு அவசியமான கால்சியம் சத்தை ஸ்டோர் செய்து வைப்பதும் எலும்புகள் தான்.

என்ன நோய்... எந்த டாக்டர்? 9 - எலும்பும், எலும்பு சார்ந்த பிரச்னைகளும்...

எவையெல்லாம் எலும்பு தொடர்பான பிரச்னைகள்?

மூட்டுத் தேய்மானம், மூட்டுவலி போன்றவை பிரதானமான பிரச் னைகள். இவை முதுகுத்தண்டிலும் வரலாம், முழங்காலிலும் வரலாம். அடுத்தது, கீழே விழுவதால் ஏற்படும் எலும்பு முறிவு. இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எந்த வயதினருக்கும் வரலாம். விபத்துகளில் சிக்கி முதுகுத்தண்டு வடத்தில் பாதிப்பு, கை, கால் எலும்புகளில் பாதிப்பு போன்றவையும் வரலாம். முக்கிய மான பிரச்னைகளில் ஒன்று எலும்புகளில் வரும் புற்றுநோய்.

பெண்களுக்கு வரக்கூடிய `ஆஸ்டியோ பொரோசிஸ்' பாதிப்பும் ரொம்பவும் பரவலானது. இந்த பாதிப்பின் காரணமாக அவர்களுக்கு களைப்பு, பலவீனம், எந்த வேலையையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாதது, லேசாக அடிபட்டால்கூட எலும்பு உடைவது போன்றவை இருக்கலாம்.

மூட்டு வலிக்கிறது, காரணம் தெரியவில்லை, கீழே விழுந்துவிட்டார்கள் அல்லது ஒரு வேலை செய்த பிறகு வலிக்கிறது என்றால் முதலில் அது வெறும் தசைப்பிடிப்பா அல்லது எலும்பு சம்பந்தப்பட்ட வலியா என்பதை சில டெஸ்ட்டுகளின் மூலம் மருத்துவர் உறுதிசெய்வார். அடிபட்டுவிட்டது... அதனால் வலிக்கிறது... ஆனால், பொறுத்துக் கொள்ளும்படியான வலி என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டியதில்லை. அது தாங்க முடியாத வலியாக இருக்கும் போது எலும்பு மருத்துவரை அணுக வேண்டும்.

எலும்புத் தேய்மானம் உள்ளவர் களுக்கும், வயதானவர்களுக்கும் வலிக் காக பிசியோதெரபி கொடுக்கப்பட்டும் வலி குறையவில்லை என்ற நிலையில் எலும்பு மருத்துவரை அணுகினால் அவர் பிரத்யேக சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். 50 வயதுக்கு மேலான ஒரு பெண், உடல்வலிக்கு முதலில் பொது மருத்துவரை அணுகலாம். அது ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர் சந்தேகிக்கிற நிலையில் அடுத்து எலும்பு மருத்துவரை அணுகலாம்.

கால்சியம் Vs வைட்டமின் டி

நம் உடலானது கால்சியம் சத்தை உட்கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி சத்து மிக அவசியம். வைட்டமின் டி என்பது சூரிய வெளிச்சத்தின் மூலம் மட்டுமே நமக்குக் கிடைக்கக்கூடியது.

வருடத்தின் பெரும்பாலான மாதங் களில் வெயில் இருந்தாலும் நம்மில் பலரும் வெயிலில் தலைகாட்டாமல் வாழ்கிறோம், வேலை செய்கிறோம். அதனால் இந்தக் குறைபாடு இன்று அதிகரித்து வருகிறது. நீரிழிவு பாதித்த வர்களுக்கு இந்தக் குறைபாடு அதிகமாக இருக்கிறது.

நீரிழிவு உள்ளவர்களும், நீரிழிவு இல்லாதவர்கள் அடிக்கடி உடல் களைத்துப் போகிறது என்ற நிலையிலும் வைட்டமின் டி அளவை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். எல்லோருக்கும் வைட்டமின் டி சப்ளிமென்ட் தேவை என அர்த்தமில்லை. சூரிய வெளிச்சத் திலிருந்தே இதை இயற்கையாகப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு வாய்ப்பே இல்லாதவர்களுக்கு வாரம் ஒருமுறை என குறிப்பிட்ட வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளும் சப்ளிமென்ட் பரிந்துரைக்கப்படும்.

எலும்பு ஆரோக்கியத்தை இவையெல்லாம் பாதிக்கலாம்

அதிக பருமன், எலும்பு ஆரோக்கியத்துக்கும் எதிரி. எனவே சரியான உடல் எடை பரா மரிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற உணவுப் பழக்கம் பின்பற்றப்பட வேண்டும்.

பருமனாக உள்ளவர்கள், திடீரென ஜாகிங் போன்ற பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபடும்போது மூட்டுகள் பாதிக்கப்படலாம். அதிக எடை இருப்போர், எடையைக் குறைக்கும்வரை ஜம்ப்பிங், ரன்னிங் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்,.

பாஸ்ச்சர் எனப்படும் தோற்றப்பாங்கு மிக முக்கியம். நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை பார்ப்பவர்கள், அதீதமாக செல்போன் பயன்படுத்துவோரெல்லாம் முதுகெலும்பின் அமைப்பை சரியாக வைத்துக்கொள்ளாததால் கழுத்துவலி, முதுகுவலியால் அவதிப்படு வார்கள்.

பரம்பரையாக ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு இருந்தால் அடுத்த தலைமுறையினருக்கும் அது பாதிக்கலாம். எடை கூடாமல் பார்த்துக் கொள்வது, உடலை உறுதியாக்கும் பயிற்சி களைச் செய்வது, முதுகு மற்றும் கழுத்துக்கான பயிற்சிகளைச் செய்வது போன்றவை அவசியம்.

இள வயது முதுகுவலி, மூட்டுவலி... ஏன்?

கடந்த சில வருடங்களில் வொர்க் ஃப்ரம் கலாசாரம் அதிகரித்திருக்கிறது. ஒரே இடத்தில் பல மணி நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வதும் இதற்கொரு காரணம். கட்டுப்பாடில்லாத உணவுகள், உடற்பயிற்சி இன்மை, அதிக உடல் எடை போன்றவற்றால் இந்த வலிகள் வரலாம். அதற்கு மேற்குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்கள் தான் தீர்வு,

அடுத்து, முடக்குவாதம் எனப்படும் `ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ்' பாதிப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதை ரத்தப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யலாம். அது உறுதிசெய்யப்பட்டால் `ருமட்டாலஜிஸ்ட்' எனப்படும் சிறப்பு மருத் துவர்களிடம் அனுப்புவோம். பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவரின் தொடர் கண் காணிப்பில் இருக்க வேண்டும்.

டூ வீலர் ஓட்டுவோர், வாகனங்களின் அமைப்பு, உட்கார்ந்து ஓட்டும் பொசிஷன் போன்றவற்றை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிக தூரம் வாகனம் ஓட்டுவோர், தினமும் இருவேளைகள் முதுகுப் பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். எலும்புத் தேய்மானமாகி இருந்தால் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

தோள்பட்டை வலி... எலும்பு சம்பந்தப்பட்டதா, மாரடைப்பின் அறிகுறியா?

இடதுபக்க தோள்பட்டையில் வலிக்கும் போது பலருக்கும் அது ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியாக இருக்குமோ என்ற பயம் வருகிறது. இரண்டுக்குமான வித்தியாசத்தை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.

மாடிப்படிகளில் ஏறி இறங்கிய உடனேயோ, வாக்கிங் சென்று வந்ததுமோ, ஜிம்மில் வொர்க் அவுட் செய்த உடனேயோ இடது தோள்பட்டையில் வலிக்கிறது என்றால் அது இதயம் தொடர்பானதாக இருக்கலாம் என யூகிக்கலாம். அந்த வலி ஒரு மாதத்துக்கும் மேலாக இருந்தால் இதயம் தொடர்பானதாக இருக்க வாய்ப்பில்லை. அதே நேரம் அந்த வலி, தோள்பட்டையிலிருந்து கழுத்து, கைகளுக்குப் பரவுகிறது என்றால் இதயம் தொடர்பானதா என்பதை செக் செய்து கொள்வதுதான் பாதுகாப்பானது. இதயம் தொடர்பான வலியில்லை என உறுதியானால் எலும்புக்கான எக்ஸ்ரே உள்ளிட்ட பரி சோதனைகள் செய்து சிகிச்சைகள் பரிந் துரைக்கப்படும்.

 அருண்குமார்
அருண்குமார்

எலும்புகளின் ஆரோக்கியம் அறிய...

`டெக்ஸா போன் ஸ்கேன்' மூலம் எலும்பு களில் கால்சியம் அளவு எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். ஹார்மோன் களின் அளவுகள் சாதாரணமாக இருக்கும்வரை இந்த டெஸ்ட் அவசியப்படாது. பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில்தான் எலும்புகளில் கால்சியம் அளவு குறையத் தொடங்கும். எனவே, அந்தப் பருவத்தில் இந்த ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.

இள வயதிலேயே கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நீக்கப்பட்டவர்களுக்கு சீக்கிரமே இந்தச் சோதனையைச் செய்யலாம். இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தைத் தெரிந்து கொள்ளலாம். அதற்கேற்ப மருத்துவர் பயிற்சிகள், சப்ளிமென்ட்டுகள், ஊசிகள் போன்றவற்றைப் பரிந்துரைப்பார்.

கால்சியம் சப்ளிமென்ட்டுகள் தேவையா?

எல்லோருக்கும் சப்ளிமென்ட்டுகள் தேவைப்படாது. சாதாரணமாக உணவின் மூலமே நமக்குத் தேவையான கால்சியம் சத்தைப் பெறலாம். கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள், கீரைகள், பால் மற்றும் பால் உணவுகள் போன்றவற்றில் கால்சியம் சத்து அதிகமுள்ளது. வெறும் உணவுகள் மட்டுமே உதவாது. உடற்பயிற்சிகள் செய்தால்தான் உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கால்சியம், எலும்புகளுக்குள் போய்ச் சேரும். பாலே குடிக்காத குழந்தைகள், பனீர், சீஸ் என எதுவுமே சாப்பிடாதவர்கள், கால்சியம் குறை பாட்டால் அவர்களுக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்ற நிலையில், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் கால்சியம் சப்ளிமென்ட்டு களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். வயதானவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் போன்றோருக்கு கால் சியம் சப்ளிமென்ட் பரிந்துரைக்கப்படும். எலும்பு முறிவு ஏற்பட்டு, அறுவைசிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும், தேவையின் அடிப்படையில் மருத்துவர்கள் கால்சியம் சப்ளிமென்ட் பரிந்துரைப்பார்கள். அதுவும் குறுகிய காலத்துக்கு மட்டுமே. மற்றபடி களைப்பு, சோர்வு போன்ற பிரச்னைகளுக் கெல்லாம் சப்ளிமென்ட் எடுக்கக் கூடாது.

அடுத்த இதழில் சிறுநீரக மருத்துவம்

- அலெர்ட் ஆவோம்...