Published:Updated:

ஓராண்டுக்கும் மேலாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட பெண் - பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!

எல்லி ஆடம்ஸ் ( இன்ஸ்டாகிராம் )

14 மாதங்கள் தினமும் செயற்கை குழாய் மூலம் மட்டுமே சிறுநீர் கழித்து வந்த அவருக்கு, இன்னோர் அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவப் பரிசோதனை முடிவில், அவருக்கு ஓர் அரிய வகை நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

Published:Updated:

ஓராண்டுக்கும் மேலாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட பெண் - பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!

14 மாதங்கள் தினமும் செயற்கை குழாய் மூலம் மட்டுமே சிறுநீர் கழித்து வந்த அவருக்கு, இன்னோர் அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவப் பரிசோதனை முடிவில், அவருக்கு ஓர் அரிய வகை நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

எல்லி ஆடம்ஸ் ( இன்ஸ்டாகிராம் )

இங்கிலாந்தில், ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறுநீர் கழிக்க இயலாமல் அவதிப்பட்ட பெண்ணுக்கு மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் அரிய வகை நோயால் பாதிக்கப் பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்தவர் எல்லி ஆடம்ஸ். 30 வயதாகும் எல்லியின் வாழ்க்கையில், 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியும், ஒரு சாதாரண நாளைப்போலவே தொடங்கியது. ஆனால், அப்போது அவருக்குத் தெரியாது... அது தன் வாழ்நாளின் மிக முக்கியமான நாளாக அமையும் என்று. காலை எழுந்த எல்லி, சிறுநீர் கழிக்க முயன்றபோது அவரால் முடியவில்லை. ஏன் என்று புரியாமல் பதறிய அவர், மருத்துவரிடம் சென்று ஆலோசனை மேற்கொண்டார்.

மருத்துவமனையில் அவருக்குப் பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. இறுதியாக, செயற்கை குழாய் மூலம் சிறுநீரை அகற்றினர். பொதுவாக ஆண்களுக்கு 750 மில்லி வரை சிறுநீரும், பெண்களுக்கு 500 மில்லி அளவு சிறுநீரும் சிறுநீர்ப்பையில் இருக்கும். ஆனால், எல்லியின் சிறுநீர்ப்பையிலிருந்து 1 லிட்டர் அளவு சிறுநீரை அகற்றினர் மருத்துவர்கள். மூன்று வாரங்களுக்குப் பின் மீண்டும் பரிசோதனைக்கு வரும்படி கூறிவிட்டு, மருத்துவர்கள் அவரை அன்று வீட்டுக்கு அனுப்பினர்.

இருப்பினும், எல்லியின் சிறுநீர் பிரச்னை தீர்ந்தபாடில்லை. எவ்வளவு அதிகமான தண்ணீர் அருந்தியபோதும், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்போதும், அவரால் அது முடியவில்லை. மிகவும் மனம் உடைந்தார் எல்லி. அனைவராலும் செய்ய முடியும் ஒரு சாதாரண செயலைக்கூட தன்னால் செய்ய இயலாமல் போனதை எண்ணி வருந்தினார். மீண்டும் மருத்துவ மனைக்குச் சென்றார் எல்லி. சிறுநீரக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றார்.

அவரை பரிசோதித்த மருத்துவரும் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், யோகா முதலானவை செய்து மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்றும் கூறினர். நாள்கள் கடந்துகொண்டே தான் இருந்தன, பிரச்னை தீருவதாக இல்லை. 14 மாதங்களாக தினமும் செயற்கை குழாய் மூலம் மட்டுமே சிறுநீர் கழித்து வந்த அவருக்கு, இன்னோர் அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவப் பரிசோதனை முடிவில், அவருக்கு ஓர் அரிய வகை நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இனி வாழ்நாள் முழுவதும் அவரால் சிறுநீர் கழிக்க இயலாது என்பதை அறிந்து விரக்தியின் உச்ச நிலைக்குச் சென்றார் எல்லி.

அதாவது, Fowler's syndrome எனப்படும் அரிய வகை நோயால் எல்லி பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இந்த Fowler's syndrome இளம் பெண்களை பாதிக்கும் தன்மை கொண்டது. பாதிக்கப்படுபவர்களால் சிறுநீர் கழிக்க இயலாது. இந்த நோய் குறித்த விழிப்புணர்வும், இதற்கான சிகிச்சை வழிகளும் மிகக்குறைவு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குழாய் மூலம் மட்டுமே சிறுநீர் அகற்றி வந்த அவருக்கு சாக்ரல் நெர்வ் ஸ்டிமுலேஷன் (Sacral Nerve Stimulation) என்பது மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரே தீர்வு. இது சிறுநீர்ப்பை நரம்புகளுக்கு ஒரு சிறிய கம்பி மூலம் தூண்டுதலை ஏற்படுத்தும். அதன் மூலம் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டு அவரால் சிறுநீர் கழிக்க முடியும். இது சிறுநீர்ப்பைக்கு ஒரு பேஸ் மேக்கரை போன்றது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தக் கருவி அவருக்குப் பொருத்தப்பட்டது. இதன் உதவியுடன் தற்போது மீண்டு வருகிறார் எல்லி ஆடம்ஸ்.

எல்லி ஆடம்ஸ்
எல்லி ஆடம்ஸ்
இன்ஸ்டாகிராம்

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எல்லி . அதில், ``இது நிச்சயமாக பேருதவியாக இருக்கிறது. ஆனால், வாழ்க்கையை மாற்றுவதாக இல்லை. இரண்டு வருட நரக வாழ்க்கைக்குப் பின்னர் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் இந்த நோயின் பிடியிலிருந்து மீண்டு இருக்கிறேன். முன்பு எப்படி இருந்தேன் என என்னால் கற்பனை கூட செய்து பார்க்க இயலவில்லை. இப்போது என்னால் இயன்றவரை சிறுநீர் கழிக்க முயல்கிறேன். குழாய் உதவியை வெகுவாகக் குறைத்துள்ளேன். இது கடினமாக இருந்தாலும் முன்பு இருந்ததைவிட நன்றாக உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதி திரட்டும் பணியிலும் இறங்கியுள்ளார் எல்லி ஆடம்ஸ்.