Published:Updated:

Doctor Vikatan: பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு நான்காவது டோஸ் தேவைப்படுமா?

பூஸ்டர் டோஸ்
News
பூஸ்டர் டோஸ் ( AP Photo / Ted S. Warren )

முதியோருக்கு ஏற்கெனவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு தடுப்பூசியின் செயல்திறன் நீண்டகாலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Published:Updated:

Doctor Vikatan: பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு நான்காவது டோஸ் தேவைப்படுமா?

முதியோருக்கு ஏற்கெனவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு தடுப்பூசியின் செயல்திறன் நீண்டகாலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பூஸ்டர் டோஸ்
News
பூஸ்டர் டோஸ் ( AP Photo / Ted S. Warren )

நானும் என் கணவரும், 70 வயதைக் கடந்தவர்கள். மூன்றாவது அலையின்போதே பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டுவிட்டோம். ஆறு மாதங்கள் முடியப்போகிற நிலையில், இப்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நாங்கள் போட்டுக் கொண்ட பூஸ்டர் டோஸின் செயல்திறன் இன்னும் இருக்குமா? நாங்கள் தைரியமாக வெளியே சென்று வரலாமா? நான்காவது டோஸ் தேவைப்படுமா?

தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்
தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்
Photogenic

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்.

மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா தொற்றின் எண்ணிக்கை, மக்களிடையே அச்சத்தைக் கிளப்பியிருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், போடாதவர்கள் என அனைவருக்கும் இந்த அச்சம் இருக்கிறது. உலக அளவிலான தரவுகளின்படி கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, அதிலும் குறிப்பாக பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் உயிர்ச்சேதம் இருக்காது என்பதும், தொற்று தீவிரமாகாது என்பதும் தெரிய வந்திருக்கிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தொற்றே வராமல் இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அதேபோல தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்டதால் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் தேவையில்லை என்ற அலட்சியமும் கூடாது. எப்போதும் போல முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பது, சமூக இடைவெளி போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.

மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்கள்

கடந்த ஒன்றரை வருடங்களாகத்தான் இந்தத் தடுப்பூசியே போடப்பட்டு வருகிறது. நீங்கள் செலுத்திக்கொண்ட தடுப்பூசியின் பலன், எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல எந்த வயதினருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்பதும் இதில் முக்கியம். சிறு வயதினருக்கு என்றால், தடுப்பூசியின் செயல்திறன் நீடித்திருக்க வாய்ப்புகள் அதிகம். முதியோருக்கு ஏற்கெனவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு தடுப்பூசியின் செயல்திறன் நீண்டகாலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் 2 டோஸ் போட்டுக்கொண்டதில் இருந்து 6 முதல் 9 மாதங்கள் கடந்துவிட்டால், பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

நீங்கள் கேட்டுள்ளதுபோல நான்காவது டோஸ் வருமா என்றால் பதில் சொல்வது கஷ்டம். அப்படியே வந்தாலும் அதில் அதிகப்படியான பலன் இருக்குமா என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஒருவேளை நான்காவது டோஸ் வந்தாலுமே, அது 80 வயதுக்கு மேலானவர்களுக்கு, எதிர்ப்பு சக்தி மிகமிகக் குறைவாக உள்ளவர்களுக்கு, கேன்சர் நோயாளிகளுக்கு எனக் குறிப்பிட்ட சிலருக்குத்தான் தேவைப்படும். எப்படி இருப்பினும் நீங்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி கவனமாக இருங்கள். கூட்டமான இடங்களுக்குச் செல்வதைக் கூடியவரை தவிருங்கள்.

கோவிட்-19 தடுப்பூசி
கோவிட்-19 தடுப்பூசி

நான்காவது டோஸ் பற்றி யோசிப்பதற்கு பதில், முதல் 2 டோஸ்களைத் தவறாமல் போட்டுக்கொள்வதும், ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள் மூன்றாவது டோஸையும் செலுத்திக் கொள்வதும் தான் மிக முக்கியம். நான்காவது டோஸ் தேவையா என்பதை விஞ்ஞானபூர்வ ஆய்வுகள்தான், நமக்குச் சொல்ல வேண்டும். இப்போதைக்கு அது குறித்து யோசிக்கத் தேவையில்லை என்பதே என் கருத்து.