Published:Updated:

Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் காய்ச்சல், ஜலதோஷம், இருமல்... சாதாரண பாதிப்பா, கொரோனாவா?

ஜலதோஷம்
News
ஜலதோஷம்

ஒருவருக்கு சளி, காய்ச்சல் வந்தால் மொத்தக் குடும்பத்தாரையும் பாதிக்கிறது. ஆனால், அது தீவிரமாகாமல் சரியாகிவிடுகிறது. அதாவது, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதிப்பின்றி குணமாகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

Published:Updated:

Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் காய்ச்சல், ஜலதோஷம், இருமல்... சாதாரண பாதிப்பா, கொரோனாவா?

ஒருவருக்கு சளி, காய்ச்சல் வந்தால் மொத்தக் குடும்பத்தாரையும் பாதிக்கிறது. ஆனால், அது தீவிரமாகாமல் சரியாகிவிடுகிறது. அதாவது, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதிப்பின்றி குணமாகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஜலதோஷம்
News
ஜலதோஷம்

எங்கு பார்த்தாலும் காய்ச்சல், தொண்டைவலி, ஜலதோஷ பிரச்னைகளுடன் இருப்பவர்களைப் பார்க்கிறோம். `ரெண்டு, மூணு நாள் இருந்துச்சு; தானா சரியாயிடுச்சு...' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இதை எப்படி எடுத்துக்கொள்வது? ஒரு பக்கம் கொரோனா அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் எல்லா காய்ச்சல், ஜலதோஷத்தையும் சாதாரணமாகக் கடந்துபோவது சரிதானா? கொரோனாவின் கிளாசிக் அறிகுறிகள் இப்போதும் தொடர்கின்றனவா?

Covid Outbreak
Covid Outbreak
AP Illustration/Peter Hamlin

பதில் சொல்கிறார். சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.

கொரோனாவின் நான்காவது அலை தொடங்கியிருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கையாக நாம் கேள்விப்படுவதுபோல, நான்கைந்து மடங்கு அதிகம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். காரணம், அறிகுறிகள் இருந்தாலுமே பெரும்பாலானவர்கள் டெஸ்ட் செய்ய முன்வருவதில்லை.

மருத்துவர் விஜயலட்சுமி
மருத்துவர் விஜயலட்சுமி

இந்த அலையில் அறிகுறிகள் மிகவும் மிதமாகவே இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அதையும் மீறி ஒரு பிரிவினர் தீவிர பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், வயதானவர்கள், இணைநோய்கள் உள்ளவர்கள் மீதுதான் இப்போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த அலையில், மருத்துவமனையில் அட்மிட் ஆகிறவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். 'எனக்கு ஹார்ட் பிராப்ளம் இருக்கு... அதனால தடுப்பூசி போட்டுக்கலை, ஸ்ட்ரோக் வந்திருக்கு, அதான் போடலை' என்று சொல்லிக்கொண்டுவருகிற படித்தவர்களை அதிகம் பார்க்கிறோம். உண்மையில் இப்படிப்பட்டவர்களுக்குத்தான் தடுப்பூசியே அவசியம். ஆனாலும், அதன் சீரியஸ்னெஸ் உணராதவர்களை என்னவென்று சொல்வது?

Corona Vaccine - Representational Image
Corona Vaccine - Representational Image

ஹைப்பாக்ஸியா எனப்படும் ஆக்ஸிஜன் குறைநிலைக்குச் செல்பவர்களை மட்டும், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தால் போதும் என்ற நிலையே இன்று இருக்கிறது. நோய் பற்றிய தெளிவில்லாததாலும், மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவியதாலும், தடுப்பூசி இல்லாததாலும் முதல் இரண்டு அலைகளுக்கு இப்படிச் சொல்லப்பட்டது பொருந்தும். ஆனால், இன்று நிலைமையே வேறு.

இன்றைய சூழலைப் பொறுத்தவரை ஒருவரைக்கூட ஹைப்பாக்ஸியா நிலைக்குப் போகவிடாமல் தடுப்பதுதான் எல்லோரின் நோக்கமாக இருக்க வேண்டும். வென்டிலேட்டர் சிகிச்சை வரை யாரும் போகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

இந்த அலையில், இறப்புவிகிதம் குறைவு என்பதும் உண்மைதான். ரிஸ்க் பிரிவில் உள்ளவர்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும் பட்சத்தில் இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க முடியும்.

கொரோனா வைரஸின் புதிய திரிபு, முந்தைய திரிபுகள் அளவுக்கு ஆபத்தானதாக இல்லாவிட்டாலும், தடுப்பூசி போடாதவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.

புதிய திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருக்கும்பட்சத்தில் மிதமான பாதிப்போடு மீண்டு விடுகிறார்கள். முந்தைய அலைகளின்போது வீடுவீடாகச் சென்று ஹைரிஸ்க் பிரிவில் உள்ளவர்களைக் கணக்கெடுத்தார்கள். இப்போது அப்படி நடப்பதில்லை.

Senior Citizen
Senior Citizen

பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டவர்களில் சிலருக்கு இரண்டாவது முறை, மூன்றாவது முறை தொற்று பாதித்தாலும் மிதமான பாதிப்புகளோடு சரியாகிவிடுகிறது. ஒரு வருடத்துக்கு முன் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சிலர் நிமோனியா பாதிப்போடு வருவதும் நடக்கிறது. பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள முன்வருவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது.

கொரோனா ஆரம்பித்த புதிதில் வந்த சுவையிழப்பு, வாசனையிழப்பு போன்ற அறிகுறிகள் இன்றும் தொடர்கின்றன. பெரும்பாலானவர்களுக்கு சளி, இருமல் அறிகுறிகளாக இருக்கின்றன.

சிலருக்கு தொண்டைவலி, காய்ச்சல் என ஃப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் போலவும் கொரோனா பாதிக்கிறது. அதீத களைப்பு, சாப்பிட முடியாதது என நிமோனியா அறிகுறிகளுடன் வரும் பிரிவினரையும் பார்க்கிறோம்.

நீங்கள் சொல்வதுபோல பல வீடுகளிலும் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகளோடு பலரும் இருக்கிறார்கள். ஒருவருக்கு வந்தால் மொத்தக் குடும்பத்தாருக்கும் பாதிக்கிறது. ஆனால், அது தீவிரமாகாமல் சரியாகிவிடுகிறது. அதாவது, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதிப்பின்றி குணமாகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இதையெல்லாம் மீறி ஒவ்வொரு வீட்டிலும் வயதானவர், இணைநோயாளி என ரிஸ்க் பிரிவில் உள்ளோர் இருப்பார்கள். அவர்களுக்கு நோயைப் பரப்பாமல், பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

oxygen level
oxygen level
AP Photo / Rafiq Maqbool

எல்லாக் காய்ச்சலும் ஜலதோஷமும் சாதாரணமானவைதான் என நீங்களாக நினைத்துக்கொண்டு, அலட்சியமாக இருப்பதும் தவறு. மருத்துவர்களாகிய எங்களை அணுகினால் அவர் அரசு விதிகளின்படி, அறிகுறிகளுடன் வருவோரை நிச்சயம் டெஸ்ட் செய்யவே சொல்வோம்.

ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள் இந்த விஷயத்தில் சிறிதுகூட அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்து, தொற்று உறுதியானால் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.