Published:Updated:

Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை?

வெண்புள்ளி
News
வெண்புள்ளி ( Photo by Armin Rimoldi from Pexels )

வெண்புள்ளி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது. தொட்டால் ஒட்டிக்கொள்ளாது. இது நிறமிக் குறைபாட்டால் ஏற்படுவது. மற்றபடி எந்த உறுப்பையும் பாதிக்காது.

Published:Updated:

Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை?

வெண்புள்ளி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது. தொட்டால் ஒட்டிக்கொள்ளாது. இது நிறமிக் குறைபாட்டால் ஏற்படுவது. மற்றபடி எந்த உறுப்பையும் பாதிக்காது.

வெண்புள்ளி
News
வெண்புள்ளி ( Photo by Armin Rimoldi from Pexels )

Doctor Vikatan: என் தோழிக்கு வெண்புள்ளி பாதிப்பு இருக்கிறது. அவளின் பிள்ளைகளுக்கு இந்த பாதிப்பு இல்லை. ஆனாலும் பேரன், பேத்திகளுக்கு வந்துவிடுமோ என்று பயப்படுகிறாள். இன்னமும் அவளைப் பார்க்கும் பலரும் இந்த பாதிப்பு தொட்டால் ஒட்டிக்கொண்டுவிடுமோ என சற்று விலகி நின்றே பேசுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. வெண்புள்ளி பாதிப்பு குழந்தைகளுக்கும் வருமா? இதைக் குணப்படுத்தவே முடியாதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் பூர்ணிமா | சென்னை
சருமநல மருத்துவர் பூர்ணிமா | சென்னை

விட்டிலிகோ அல்லது வெண்புள்ளி பாதிப்பு என்பது ஒருவகையான ஆட்டோஇம்யூன் குறைபாடு. அதாவது, நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பாற்றலே நமக்கு எதிராக மாறுவது. அந்த வகையில் விட்டிலிகோ விஷயத்திலும், நம் உடலின் வெள்ளை அணுக்களே, சருமத்துக்கு நிறம் கொடுக்கும் நிறமிகளைச் சிதைத்துவிடுகிறது.

நமது சருமத்துக்கு நிறம் கொடுக்கும் மெலனோசைட்ஸ் நிறமிகள் குறிப்பிட்ட இடத்தில் செயலிழந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். விட்டிலிகோ பாதித்தவர்களுக்கு சருமம், பால் வெள்ளை நிறத்தில் இருக்கும். பிரவுன் நிறத்தைக் கொடுக்கும் நிறமிகள் இல்லாததுதான் இந்தப் பிரச்னைக்கு காரணம்.

இந்த பாதிப்பு உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அல்லது உடல் முழுவதும் என எப்படி வேண்டுமானாலும் வரலாம். சிலருக்கு ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பேட்ச் போல வரலாம். பாதிப்பு எப்படிப் பரவுகிறது என்பதைப் பொறுத்து அதை வகைப்படுத்துவோம்.

பொதுவாக இந்த பாதிப்பை 20 முதல் 30 வயதில் கண்டுபிடிக்கிறோம். அரிதாக குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு வரலாம். குழந்தைகளுக்கு வரும்போது நோயை கணிப்பது சற்று சுலபம். பெரியவர்களுக்கு அதிலும் பரவலாக வரும்போது அது சற்று கடினம். உதடுகளில், விரல் நுனிகளில், கால்களில், அந்தரங்க உறுப்பு முனைகளில் வரும் வெண்புள்ளி பாதிப்பை கணிப்பது சற்று சிரமம்.

தாத்தா, பாட்டிக்கோ, பெற்றோரில் யாருக்காவதோ இந்த பாதிப்பு இருந்தால் பிள்ளைகளுக்கு வர 10 முதல் 15 சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு. தைராய்டு, புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், சில வகை மருந்துகளின் விளைவு என இதற்கு வேறு காரணங்களும் உண்டு. பாதிப்பின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்துதான் சிகிச்சை முடிவு செய்யப்படும். சிறிய அளவிலான பேட்ச் போன்ற பாதிப்புகளுக்கு க்ரீம் மூலமே தீர்வு காணலாம். உடல் முழுவதும் பரவுகிறது என்ற நிலையில் சில பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.

வெண்புள்ளி
வெண்புள்ளி
Photo by Armin Rimoldi from Pexels

நம் எதிர்ப்பு சக்திக்கும் சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் நிறமிகளுக்கும் நடக்கும் போராட்டத்தைக் குறைக்கும்வகையில் கார்ட்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மாத்திரைகள், க்ரீம்களைத் தாண்டி லைட் தெரபியும் தீர்வாகப் பரிந்துரைக்கப்படும். லேசர் சிகிச்சைகளும் உதவலாம். இவை தவிர அறுவைசிகிச்சையும் ஒரு தீர்வு. அதாவது, இரண்டு வருடங்களாக விட்டிலிகோ பரவியிருக்கக் கூடாது, அளவு பெரிதாகியிருக்கக்கூடாது. அப்படியிருந்தால் வேறோர் இடத்திலிருந்து மெலனினைக் கொண்டுவந்து பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தி அறுவைசிகிச்சை செய்யலாம்.

வெண்புள்ளி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது. தொட்டால் ஒட்டிக்கொள்ளாது. இது நிறமிக் குறைபாட்டால் ஏற்படுவது. மற்றபடி எந்த உறுப்பையும் பாதிக்காது. எந்த இடத்தில் நிற மாற்றம் ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் உள்ள முடியும் வெள்ளையாக மாற வாய்ப்புண்டு. மற்றபடி இது பயப்படும்படியான பிரச்னை இல்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.