Published:Updated:

Doctor Vikatan: வலிப்பு வந்தவர் கையில் சாவிக்கொத்து கொடுக்கலாமா?

வலிப்பு
News
வலிப்பு

வலிப்பு வந்த நபர் உயரமான இடத்தில் உட்கார்ந்திருந்தால், முதலில் அவரை பாதுகாப்பாக கீழே இறக்கிவிட வேண்டும். உடம்பு வெட்டும் நிலையில், அவரது தலைக்குக் கீழே மென்மையான பொருள் எதையாவது வைக்க வேண்டும்.

Published:Updated:

Doctor Vikatan: வலிப்பு வந்தவர் கையில் சாவிக்கொத்து கொடுக்கலாமா?

வலிப்பு வந்த நபர் உயரமான இடத்தில் உட்கார்ந்திருந்தால், முதலில் அவரை பாதுகாப்பாக கீழே இறக்கிவிட வேண்டும். உடம்பு வெட்டும் நிலையில், அவரது தலைக்குக் கீழே மென்மையான பொருள் எதையாவது வைக்க வேண்டும்.

வலிப்பு
News
வலிப்பு

Doctor Vikatan: சாலைகளில் செல்லும்போது சிலர் வலிப்பு வந்து துடிப்பதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட தருணங்களில் அவர்களுக்கு என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும்? வலிப்பு வந்தவரின் கையில் சாவிக்கொத்து கொடுப்பது சரியானதா?

பதிலளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி.

நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா | சென்னை
நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா | சென்னை

வலிப்பு வந்த நபர், உயரமான இடத்தில் உட்கார்ந்திருந்தால், முதலில் அவரை பாதுகாப்பாக கீழே இறக்கிவிட வேண்டும். உடம்பு வெட்டும் நிலையில், அவரது தலைக்குக் கீழே மென்மையான பொருள் எதையாவது வைக்க வேண்டும். உதாரணத்துக்கு நம்முடைய துப்பட்டா, ஹேண்ட்பேக் என மென்மையான ஒன்றை வைக்கலாம்.

வலிப்பு வந்த நபரை பக்கவாட்டில் திருப்பிவிட வேண்டும். இதற்கு `ரெக்கவரி பொசிஷன்' என்று பெயர். வலிப்பு வந்த நபருக்கு வாயிலிருந்து அதிகப்படியான உமிழ்நீர் வெளியேறும். அது அந்த நபரின் சுவாசக்குழாய்க்குள் போய்விடக்கூடாது என்பதே காரணம். எனவே தலையைத் திருப்பிவிட்டு, உடலை பக்கவாட்டில் திருப்பிவிட்டு, ஒரு காலையும் மடித்துவிடுவதன் மூலம் இதயத்துக்கு பிரஷர் இல்லாமலிருக்கும். வாயிலிருந்து வரும் உமிழ்நீரும் கீழே வெளியேறிவிடும்.

வலிப்பு வந்தவரின் வாயில் எதையும் திணிக்க வேண்டாம். நாக்கைக் கடித்துக்கொள்வதைத் தவிர்க்க முன்பெல்லாம் வலிப்பு வந்தவர்களின் வாயில் துணியைத் திணிப்பார்கள். நாக்கைக் கடித்துக்கொண்டால் பரவாயில்லை. அந்தக் காயம் தானாக ஆறிவிடும். விரலை விடுவது, ஸ்பூனை விடுவது போன்றவையெல்லாம் ஆபத்தானவை.

வலிப்பு
வலிப்பு
pixabay

வலிப்பு வந்தவரின் கையில் சாவிக்கொத்து உள்பட எதையும் கொடுக்கவே கூடாது. கையில் பேனா போன்ற எதையாவது அவர் வைத்திருந்தாலும் எடுத்துவிட வேண்டும். உடையைத் தளர்த்திவிட வேண்டும். பெண்ணாக இருந்தால் கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலி, கழுத்தை இறுக்க நேரிடும். எனவே அதைத் தளர்த்திவிட வேண்டும்.

வாயில் தண்ணீர், டீ, காபி, சோடா என எதையும் விடக்கூடாது. வலிப்பு நின்று அவர்களாக எழுந்திருப்பார்கள். பெரும்பாலான வலிப்பு ஒன்றரை முதல் இரண்டு நிமிடங்களில் நின்றுவிடும். எனவே கை, கால்கள் வெட்டுவதைப் பிடித்துவிட வேண்டிய அவசியமில்லை.

கூட்டம் சேரவிடாமல் அவர்களுக்குக் காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக் கொண்டாலே போதும். வலிப்பு அடங்கியதும் சிலருக்கு விழிப்பு வந்துவிடும். சிலர் சில நிமிடங்களுக்கு போதையில் இருக்கலாம். சிலர் நினைவில்லாவிட்டாலும் எழுந்து நடப்பார்கள். அப்படி நடக்கும் நபர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சுயநினைவின்றி நடந்துபோய், வாகனங்களில் அடிபட வாய்ப்புள்ளதால், பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். வலிப்பு நின்று அவர்கள் நம்முடன் பேசத் தொடங்கும்வரை பார்த்துக் கொள்ள வேண்டும்.

வலிப்பு
வலிப்பு

முதல்முறை வலிப்பு வந்தவர்கள் என்றால் அது ஆபத்தானது. அது சம்பந்தப்பட்ட நபருடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதே போல சிலருக்கு வலிப்பு வந்து, அது இரண்டு நிமிடங்களுக்கொரு முறை விட்டுவிட்டு வரும். அப்படிப்பட்ட வலிப்பும் ஆபத்தானது. 2 நிமிடங்களில் முடியவேண்டிய வலிப்பு அதைத் தாண்டி நீடித்தால் ஆம்புலன்ஸையோ, மருத்துவரையோ அழைக்கலாம். வலிப்பு வந்தவரின் முகம் நீலநிறமாகவோ, வெளிறியோ போனால் உடனே மருத்துவரை அழைக்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.