Published:Updated:

Doctor Vikatan: பல வருடங்களாகத் தொடரும் நெஞ்செரிச்சல்... இதயநோயின் அறிகுறியாக இருக்குமா?

நெஞ்செரிச்சல்
News
நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல் ஏற்படும்போது சோடா குடிப்பது மிகவும் தவறான செயல். சோடா மட்டுமல்ல, ஏரியேட்டடு பானங்கள் எல்லாமே ஆபத்தானவைதான். அவை வயிற்றெரிச்சலை மேலும் தீவிரமாக்கும்.

Published:Updated:

Doctor Vikatan: பல வருடங்களாகத் தொடரும் நெஞ்செரிச்சல்... இதயநோயின் அறிகுறியாக இருக்குமா?

நெஞ்செரிச்சல் ஏற்படும்போது சோடா குடிப்பது மிகவும் தவறான செயல். சோடா மட்டுமல்ல, ஏரியேட்டடு பானங்கள் எல்லாமே ஆபத்தானவைதான். அவை வயிற்றெரிச்சலை மேலும் தீவிரமாக்கும்.

நெஞ்செரிச்சல்
News
நெஞ்செரிச்சல்

Doctor Vikatan: எனக்கு பல வருடங்களாக நெஞ்செரிச்சல் பிரச்னை இருக்கிறது. சாப்பிட்டதும் சில மணி நேரம் இந்தப் பிரச்னையால் அவதிப்படுகிறேன். சில நேரம் சோடாவோ, மாத்திரையோ போட்டால்தான் சரியாகிறது. நெஞ்செரிச்சல் என்பது இதய பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.

மருத்துவர் வினோத்குமார்
மருத்துவர் வினோத்குமார்

உங்களுடைய கேள்வியை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஆசிட் சுரப்பு அதிகமாகி, அது எதுக்களித்து வரும் பிரச்னை இருக்கலாம் என்று தோன்றுகிறது. இதை மருத்துவ மொழியில் Gastroesophageal reflux disease (GERD) என்று சொல்வோம். இதற்கான முக்கிய காரணம் தவறான உணவுப்பழக்கம்தான்.

அதாவது அதிக அளவில் காபி, டீ குடிப்பது, அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவது, வேளை தவறிச் சாப்பிடுவது, இரவில் அளவுக்கதிகமாகச் சாப்பிட்டுவிட்டு, உடற்பயிற்சிகள் இல்லாமல் தூங்குவது போன்றவற்றால் வயிற்றில் உணவு தங்கி, அது எதுக்களித்து உணவுக்குழாயில் வரும்போது நீங்கள் குறிப்பிட்டுள்ள எரிச்சல் வர வாய்ப்புகள் அதிகம்.

இந்தப் பிரச்னைக்கான முதல் தீர்வு, உணவுப்பழக்கத்தை முறைப்படுத்துவதுதான். மாத்திரை, மருந்துகளால் இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது. பிரச்னைகளுடன் வரும்போது மருத்துவர்கள் மாத்திரை, மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். அவை அறிகுறிகளைப் போக்க உதவினாலும், ஒரு கட்டத்தில் அவற்றை நிறுத்த வேண்டியிருக்கும். மற்றபடி வாழ்க்கைமுறை மாற்றம் மற்றும் உணவுமுறை மாற்றத்தின் மூலமே இதிலிருந்து விடுபடலாம்.

நெஞ்செரிச்சல் ஏற்படும்போது சோடா குடிப்பது மிகவும் தவறான செயல். சோடா மட்டுமல்ல, ஏரியேட்டடு பானங்கள் எல்லாமே ஆபத்தானவைதான். அவை வயிற்றெரிச்சலை மேலும் தீவிரமாக்கும். இவற்றைக் குடித்ததும் வரும் ஏப்பம், உங்களுக்கு பிரச்னையிலிருந்து நிவாரணம் தருவது போலத் தெரிந்தாலும், இது உண்மையில் நெஞ்செரிச்சலையும் வயிற்றெரிச்சலையும் அதிகரிக்கவே செய்யும்.

Heart attack
Heart attack

வலி மிகவும் அதிகரிக்கும்போது மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு ஸ்ட்ரெஸ் காரணமாகவும் இந்தப் பிரச்னை வரலாம். ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்தும் தியானம், யோகா போன்றவற்றைச் செய்தாலும் நெஞ்செரிச்சல் பாதிப்பு குணமாகும்.

நெஞ்செரிச்சல் பாதிப்போடு மருத்துவர்களைச் சந்திக்க வருபவர்களை, முதலில் ஈசிஜி எடுத்துப் பார்த்து அது இதயம் தொடர்பான பிரச்னையா என்பதை உறுதிசெய்வோம். நெஞ்சின் இடதுபுறத்தில் வலி அல்லது எரிச்சல் இருப்பதாகவும், அது இடதுபக்க தோள்பட்டைக்குப் பரவுவது போன்றும், படபடப்பாக இருப்பதாகவும் உணர்ந்தால் முதலில் ஈசிஜி எடுத்து இதயநோய்தானா, இல்லையா என்பதைத் தெளிவுபடுத்துவோம். வாயுத் தொந்தரவால் உயிருக்கு ஆபத்தில்லை. அதுவே இதயம் தொடர்பான பாதிப்பின் அறிகுறி என்றால் அதை அலட்சியப்படுத்த முடியாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.