Published:Updated:

Doctor Vikatan: ரத்தச் சர்க்கரை அளவை உடனடியாகக் குறைப்பது சாத்தியமா?

diabetes
News
diabetes ( Pixabay )

சில வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. அந்த உணவுகளால் ரத்தச் சர்க்கரை அளவு குறையாது. ஆனால் ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் வேகம் குறையும்.

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. ரத்தச் சர்க்கரையின் அளவை உடனடியாகக் குறைப்பது என்பது சாத்தியமே இல்லையா? பாகற்காய் போன்ற கசப்பான உணவுகள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு உடனே குறையுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன்

நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன் | சென்னை
நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன் | சென்னை

இன்று எல்லா மக்களுக்கும் இன்ஸ்டன்ட் தீர்வு தேவையாக இருக்கிறது. நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரத்தச் சர்க்கரை அதிகரிக்கும்போதெல்லாம் உடனடியாக அதைக் குறைக்க இன்ஸ்டன்ட் தீர்வு என்ன என்ற கேள்வி எழுகிறது.

அதிக அளவு ரத்தச் சர்க்கரை உள்ளவர்களுக்கு இன்சுலின் போடுவதன் மூலம் அதன் அளவைக் குறைக்கலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்.

சில வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. அந்த உணவுகளால் ரத்தச் சர்க்கரை அளவு குறையாது. ஆனால் ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் வேகம் குறையும்.

உதாரணத்துக்கு ஐஸ்க்ரீமோ, சாக்லேட்டோ சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு வேகமாக ஏறும் என்றால், நட் பட்டரோ, சிட்ரஸ் பழமோ சாப்பிடும்போது அந்த வேகம் குறையும். அதாவது பத்து நிமிடங்களில் அதிகரிக்கிற ரத்தச் சர்க்கரை அளவானது, 45 நிமிடங்களில் ஏறும். எனவே அத்தகைய உணவுகள் ரத்தச் சர்க்கரையைக் குறைப்பதாக அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. சர்க்கரை அதிகரிக்கும் தன்மையைக் குறைக்கிறது என்பதுதான் அர்த்தம்.

'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பதுதான் நீரிழிவு நோய் பாதித்தவர்களின் சிந்தனையாக இருக்கும். சர்க்கரையைக் குறைக்கும், குணமாக்கும் என்று யார் என்ன சொன்னாலும் அதைக் கண்மூடித்தனமாக நம்புகிறவர்கள் அதிகம். பாகற்காய் ஜூஸ் குடிப்பது, அந்த ஜூஸில் கால்களை ஊறவைப்பதெல்லாம் நீரிழிவை ரிவர்ஸ் செய்யும் என்றெல்லாம் சொல்லப்படுவதற்கு எந்தவித அறிவியல்பூர்வ ஆதாரங்களும் கிடையாது. நீரிழிவைப் பொறுத்தவரை, ஆதாரங்கள் இல்லாத சிகிச்சைகள் எத்தனையோ உள்ளன. அறிவியல் அதை எல்லாம் அங்கீகரிப்பதில்லை.

Diabetes
Diabetes

இனிப்பான உணவுகள் எல்லாம் சர்க்கரையைக் கூட்டும், கசப்பான உணவுகள் சர்க்கரையைக் குறைக்கும் என்பதும் தவறான நம்பிக்கை. உதாரணத்துக்கு உருளைக்கிழங்கு. அதில் எந்தச் சுவையும் இல்லை. ஆனால் அதைச் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும். காரணம், அதிலுள்ள கார்போஹைட்ரேட். கிழங்கு வகைகள் இனிப்பாக இல்லாவிட்டாலும் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடியவை. எனவே எந்த உணவும் சர்க்கரை அளவைக் குறைப்பதில்லை. அது அதிகரிக்கும் வேகத்தை மட்டுமே தாமதப்படுத்துகிறது என புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.