Published:Updated:

Doctor Vikatan:சிறிய விஷயத்துக்கும் கத்தி கூச்சல் போடும் மனைவி;கோபத்தைக் கட்டுப்படுத்த வழிகள் உண்டா?

கோபம் | மாதிரிப்படம்
News
கோபம் | மாதிரிப்படம்

இவர்களுக்கு எப்போதும் தன்னைச் சுற்றியுள்ள உலகம் மிகச் சரியாக இருக்க வேண்டும், எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். நெகட்டிவ் மனப்பான்மையும் இவர்களிடம் அதிகமிருக்கும்.

Published:Updated:

Doctor Vikatan:சிறிய விஷயத்துக்கும் கத்தி கூச்சல் போடும் மனைவி;கோபத்தைக் கட்டுப்படுத்த வழிகள் உண்டா?

இவர்களுக்கு எப்போதும் தன்னைச் சுற்றியுள்ள உலகம் மிகச் சரியாக இருக்க வேண்டும், எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். நெகட்டிவ் மனப்பான்மையும் இவர்களிடம் அதிகமிருக்கும்.

கோபம் | மாதிரிப்படம்
News
கோபம் | மாதிரிப்படம்

Doctor Vikatan: என் மனைவி எப்போதும் தன்னைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பெரிதுபடுத்துகிறார். தன் எதிர்பார்ப்புக்கு மீறி சின்ன விஷயம் நடந்தாலும் அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நெகட்டிவ்வாக யோசிக்கிறார். தான் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் என்னிடமும் குழந்தைகளிடமும் கத்துகிறார். உளவியல் ஆலோசனைக்கும் வர மறுக்கிறார்.

எனக்கு, என் 9 வயதுக் குழந்தையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. சாலை சரியாக இல்லாவிட்டாலோ, சுத்தமாக இல்லாவிட்டாலோ, குழந்தை பள்ளிக்கூடத்துக்கு ரெடியாகாவிட்டாலோ என் மனைவி டென்ஷனாகிறார். சின்ன விஷயத்தைக்கூட பெரிதாக்கி, சூழலையே கெடுத்துவிடுவார். இப்படிச் செய்து ஏன் எல்லோரின் மனநிலையையும் கெடுக்கிறாய் எனக் கேட்டால் இன்னும் அதிகமாகக் கோபப்பட்டுக் கத்துவார். இதை எப்படிக் கையாள்வது என்றே தெரியவில்லை. ஆலோசனை சொல்ல முடியுமா?

-Arun, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்
உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்

உங்கள் மனைவிக்கு ஆளுமை தொடர்பான கோளாறு இருக்கலாம். OCPD என்று சொல்லக்கூடிய Obsessive-compulsive personality disorder பாதிப்பாக இருக்கலாம். இவர்களுக்கு எப்போதும் தன்னைச் சுற்றியுள்ள உலகம் மிகச் சரியாக இருக்க வேண்டும், எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். நெகட்டிவ் மனப்பான்மையும் இவர்களிடம் அதிகமிருக்கும்.

சூழல் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று இவர்கள் நம்ப வேண்டும். அப்படி இல்லை என்பதைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். சுற்றியுள்ள யாரும் தன்னைப் புரிந்துகொள்ள வில்லை என்றே நினைப்பார்கள். கணவர், குழந்தைகள், உடனிருப்போரிடம் நிறைய கோபப்படுவார்கள். உணர்வுக் கொந்தளிப்பு இருக்கும்.

ஆளுமைக் கோளாறு உள்ளவர்களுக்கு அப்படிப்பட்ட பிரச்னை இருப்பதைப் புரிய வைப்பதே கஷ்டம்தான். ஆனால், OCPD விஷயத்தில் அதை ஓரளவுக்குப் புரிய வைக்க முடியும். இவர்களின் குணத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது கணவர் மற்றும் வீட்டாரின் பொறுப்பு.

இப்படிப்பட்ட பிரச்னை இருப்பதைப் புரிந்துகொள்வதோடு, சம்பந்தப்பட்ட நபர் கோபத்தில் கத்தும்போதோ, சண்டைபோடும்போதோ, தானும் சேர்ந்துகொள்ளாமல், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அந்த நபர் அப்படித்தான் இருப்பார் என்ற தெளிவோடு இருக்க வேண்டும். தானும் ரியாக்ட் செய்வதால் அந்த நபரின் வெறுப்பும் கோபமும் இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது என்பதை உணர வேண்டும்.

உங்கள் விஷயத்தில் மனைவியிடம் உள்ள நல்ல குணங்களை அவ்வப்போது அவரிடம் சொல்லிப் பாராட்ட வேண்டும். பாசிட்டிவ்வாகப் பேச வேண்டும. அவருக்கு உங்கள்மேல் நம்பிக்கை ஏற்பட்டதும், மனைவி நல்ல மனநிலையில் இருக்கும்போது பொறுமையாக எடுத்துச் சொல்லலாம். மனைவி கத்துவதால் அவருக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகள் குறித்துப் புரிய வைக்கலாம். பொறுமையாகச் சொல்லிப் புரிய வைத்தால், உடனே இல்லாவிட்டாலும் காலப்போக்கில் உங்கள் மனைவி அதை உணர்ந்து மாறத் தொடங்குவார்.

Angry
Angry

உங்கள் மனைவியின் வீட்டார் யாராவது அதே மாதிரியான குணநலன்களோடு இருந்திருக்கலாம். காலப்போக்கில் உங்கள் மனைவி அந்த நபருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தானும் அதே மாதிரி மாறிவிடக் கூடாது என்பதை உணர்வார். அதற்கான முயற்சியை கணவராகிய நீங்கள்தான் தொடங்க வேண்டும். ஏற்கெனவே சொன்னதுபோல மனைவியை பற்றிய பாசிட்டிவ் விஷயங்களைச் சொல்லி அவரை பாராட்டுவதோடு, அவரின் உணர்வுகளை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு உங்களுக்கு அதீத பொறுமை வேண்டும்.

உங்கள் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என நீங்கள் நினைப்பதால் இந்த முயற்சியை இன்றே தொடங்குங்கள். மனைவி செய்வதை முட்டாள்தனமாகவோ, வேண்டுமென்றே செய்வதாகவோ பார்க்காதீர்கள். அவருக்குள் ஆளுமைக் கோளாறு இருப்பதால்தான் அப்படி நடந்துகொள்கிறார் என்பது தெரிந்து அவருக்கு சப்போர்ட் செய்தால், காலப்போக்கில் உளவியல் ஆலோசனைக்கு அவர் சம்மதிப்பார். தன்னை மாற்றிக்கொள்ள முனைவார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.