Published:Updated:

Doctor Vikatan: அம்மாவின் உயிரைப் பறித்த புற்றுநோய்; பிள்ளைகளுக்கு வரும் அபாயம் உண்டா?

புற்றுநோய் -சித்திரிப்பு படம்
News
புற்றுநோய் -சித்திரிப்பு படம்

புற்றுநோய் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள ஆண், பெண் பிள்ளைகள் யாராக இருந்தாலும் ஆக்டிவ்வான லைஃப்ஸ்டைல் மிக முக்கியம். ஆரோக்கியமான உணவுப்பழக்கம் அவசியம்.

Published:Updated:

Doctor Vikatan: அம்மாவின் உயிரைப் பறித்த புற்றுநோய்; பிள்ளைகளுக்கு வரும் அபாயம் உண்டா?

புற்றுநோய் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள ஆண், பெண் பிள்ளைகள் யாராக இருந்தாலும் ஆக்டிவ்வான லைஃப்ஸ்டைல் மிக முக்கியம். ஆரோக்கியமான உணவுப்பழக்கம் அவசியம்.

புற்றுநோய் -சித்திரிப்பு படம்
News
புற்றுநோய் -சித்திரிப்பு படம்

Doctor Vikatan: என் மனைவிக்கு சினைப்பையில் புற்றுநோய் வந்து, ஒரு சினைப்பையை மட்டும் நீக்கிவிட்டார்கள். கீமோதெரபி எடுத்து குணமாகி ஒரு வருடம் கழித்து குழந்தை பெற்றுக்கொண்டார். 2 வருடங்கள் கழித்து மீண்டும் குழந்தை பெற்றுக்கொண்டார். இரண்டாவது குழந்தை பெற்று ஒரு வருடம் கழித்து மீண்டும் புற்றுநோய் தாக்கி இறந்துவிட்டார். தாயின் நோய்த்தாக்கம் பிள்ளைகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையா? எப்போதும் மனதில் இந்தச் சிந்தனை பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?

Saravanan, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா.

டெல்பின் சுப்ரியா
டெல்பின் சுப்ரியா

அம்மாவுக்கு சினைப்பை புற்றுநோய் இருந்தால் மகள்களுக்கும் அந்த பாதிப்பு தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. அம்மாவிடம் இருந்தோ, பாட்டியிடம் இருந்தோ, பிள்ளைகளுக்கு பரம்பரையாகத் தொடரும் ஃபெமிலியல் வகை புற்றுநோய்களின் தாக்கம் வெறும், 5 சதவிகிதம் மட்டுமே. மீதமுள்ள 95 சதவிகிதப் புற்றுநோய்கள் தாமாக வரக்கூடியவைதான்.

அப்படியானால் இந்த 5 சதவிகித பாதிப்பு ஒருவரைத் தாக்குமா எனக் கண்டறிய ஒரே வழி ஜெனடிக் சோதனை மட்டுமே. உங்கள் விஷயத்தில் உங்கள் மனைவிக்கு சினைப்பை புற்றுநோய் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்... அவருக்கு ஜெனடிக் டெஸ்ட்டிங் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படி ஜெனடிக் டெஸ்ட்டிங் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் குரோமோசோம்களில் ஏதேனும் அசாதாரண நிலை கண்டறியப்பட்டிருந்தால் மகள்களுக்கும் டெஸ்ட் செய்து பார்க்க முடியும்.

அம்மாவுக்கு அப்படி டெஸ்ட் செய்யப்படாத பட்சத்தில், மகள்களுக்கு பாதிப்புக்கு வாய்ப்பிருக்கிறதா எனக் கண்டறிய பிரத்யேக சோதனை எதையும் செய்ய முடியாது.

புற்றுநோய் ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள ஆண், பெண் பிள்ளைகள் யாராக இருந்தாலும் ஆக்டிவ்வான லைஃப்ஸ்டைல் மிக முக்கியம். ஆரோக்கியமான உணவுப்பழக்கம் அவசியம். ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தத் தலைமுறையினருக்கு உடலியக்கம் என்பது வெகு குறைவாக இருக்கிறது. எனவே, அவர்கள் தினமும் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெண் குழந்தைக்கு சினைப்பை புற்றுநோய் பாதிக்குமோ என பயந்தால் வருடம் ஒருமுறை ஸ்கேன் வேண்டுமானால் செய்து பார்க்கலாம். ஆனால் அது 100 சதவிகிதம் துல்லியமானது என்று சொல்ல முடியாது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

இது தவிர Breast and Ovarian Cancer syndrome என ஒன்று இருக்கிறது. இது பரம்பரையாகத் தொடரக்கூடிய ஒரு பாதிப்பு. இதில் BRCA1 மற்றும் BRCA 2 என இரண்டு ஜீன்களில் குறைபாடு இருக்கலாம். அம்மாவுக்கு இந்த ஜீன் குறைபாடு கண்டுபிடிக்கப் பட்டிருந்தால் மகளுக்கும் அது இருக்கிறதா எனக் கண்டுபிடிக்கலாம்.

குடும்ப பின்னணியில் புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள், 25 வயதில் இருந்து வருடம் ஒருமுறை ஸ்கேன் செய்து பார்ப்பது, 35 வயதுக்கு மேல் மேமோகிராம் செய்துகொள்வது ஆகியவற்றைப் பின்பற்றலாம். அதாவது, வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே இந்தச் சோதனைகளைச் செய்யத் தொடங்கலாம். மற்றபடி ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றினாலே பயமின்றி வாழலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.