Published:Updated:

Doctor Vikatan: உயர் ரத்த அழுத்தம்... வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா?

ரத்த அழுத்தம்
News
ரத்த அழுத்தம் ( PIXABAY )

எந்த நேரம் வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். ஆனால், பிபி செக் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். வேலைகள் செய்துவிட்டோ, உடற்பயிற்சிகள் செய்துவிட்டோ உடனே ரத்த அழுத்தத்தை சரிபார்க்கக் கூடாது.

Published:Updated:

Doctor Vikatan: உயர் ரத்த அழுத்தம்... வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா?

எந்த நேரம் வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். ஆனால், பிபி செக் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். வேலைகள் செய்துவிட்டோ, உடற்பயிற்சிகள் செய்துவிட்டோ உடனே ரத்த அழுத்தத்தை சரிபார்க்கக் கூடாது.

ரத்த அழுத்தம்
News
ரத்த அழுத்தம் ( PIXABAY )

ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் (high BP) இருப்பதை எப்படி உறுதி செய்வீர்கள்? உயர் ரத்த அழுத்த பிரச்னைக்கு ஒருமுறை மாத்திரை எடுக்க ஆரம்பித்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டும் என்பது உண்மையா? ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் மாத்திரைகளை எடுக்க வேண்டுமா? எப்போதெல்லாம் ரத்த அழுத்தத்தை செக் செய்ய வேண்டும்?

இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர்  ஸ்பூர்த்தி அருண்
இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்...

உயர் ரத்த அழுத்தத்தை எப்போதுமே ஒரு ரீடிங்கை வைத்து உறுதி செய்ய மாட்டோம். தொடர்ந்து அதை செக் செய்து, ஒவ்வொரு முறையுமே அது அதிகமாக இருப்பது தெரிந்தால்தான், அதை உயர் ரத்த அழுத்தம் எனப்படும் ஹைப்பர் டென்ஷன் என உறுதி செய்வோம்.

ரத்த அழுத்தத்தை, அதற்கான கருவியை வைத்து வீட்டிலேயே சரிபார்த்துக்கொள்ளலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். ஆனால், பிபி செக் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். வேலைகள் செய்துவிட்டோ, உடற்பயிற்சிகள் செய்துவிட்டோ உடனே ரத்த அழுத்தத்தை சரிபார்க்கக் கூடாது.

அதேபோல காபி குடிப்பதற்கு முன், சாப்பிடுவதற்கு முன்தான் ரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். ஏனெனில், உணவிலுள்ள உப்பும், காபியில் உள்ள கஃபைனும் செயற்கையாக ரத்த அழுத்தத்தை அதிகரித்துக் காட்டலாம். Ambulatory blood pressure monitoring முறையிலும் இதை செக் செய்யலாம். அதாவது, பிரத்யேக கருவியை சம்பந்தப்பட்ட நபரின் உடலில் பொருத்திவிட்டு, வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். 24 முதல் 48 மணி நேரம் வரை அந்தக் கருவி அவர்களது ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும்.

 BP
BP
ரத்த அழுத்தம்

இந்த முறையில், இரவு நேரத்தில் ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்களையும் கண்காணிக்க முடியும். சிலருக்கு ஒன்றிரண்டு ரீடிங்கிலேயே உயர் ரத்த அழுத்தத்தை உறுதிசெய்வதும் உண்டு. இது மிக அதிக அளவு ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்தும். அவர்கள் விஷயத்தில் காத்திருந்து மறுபடியெல்லாம் செக் செய்துகொண்டிருக்கத் தேவையிருக்காது.

ஸ்ட்ரெஸ், சரியாகத் தூங்காதது என பல காரணங்களால் செயற்கையாக ரத்த அழுத்தம் உயரலாம். அதனால்தான் பெரும்பாலும் மருத்துவர்கள் ஒரே ஒரு ரீடிங்கில் உயர் ரத்த அழுத்தத்தை உறுதி செய்யாமல், சிலமுறை தொடர்ந்து செக் செய்ய வலியுறுத்துவார்கள்.

குறைவானது முதல், மிதமான ரத்த அழுத்தத்துக்கு மருந்துகள் ஆரம்பிக்கும் முன், லைஃப்ஸ்டைல் மாற்றங்கள் மிக முக்கியம். முதல் விஷயமாக உப்பை குறைத்து உபயோகிக்கச் சொல்வோம். ஒருநாளைக்கு 2 கிராமுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்துவோம்.

Stress
Stress
Pixabay

உங்களுக்கு அடிக்கடி தலைவலி, முதுகுவலி வருகிறது, ஸ்ட்ரெஸ்ஸும், தூக்கமின்மையும் தொடர்கிறது என்றால் அவற்றுக்கான காரணம் அறிந்து சரிசெய்வதும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் அவசியமாகிறது. உங்களுக்கு இருப்பது நிஜமாகவே உயர் ரத்த அழுத்தம்தானா அல்லது அதற்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா என்று கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.

சிலருக்கு மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வராது. அதற்குப் பெயர் `ரெசிஸ்டன்ட் ஹைப்பர் டென்ஷன்.' இதற்கு உங்கள் மருத்துவர் கூடுதலாக சில டெஸ்ட்டுகளை எடுக்கச் சொல்வார்.

Sleep
Sleep

ஹைப்பர் டென்ஷன் உறுதிசெய்யப்பட்டதும் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துதன் ஆக வேண்டும். உங்களுக்கு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரக் காரணமே அந்த மருந்துகள்தான். எனவே, மருந்துகளை நிறுத்திவிட்டால் மறுபடி ரத்த அழுத்தம் உயர வாய்ப்புகள் அதிகம்.

ரத்த அழுத்த பாதிப்பை `சைலன்ட் கில்லர்' என்றே சொல்லலாம். குறைந்தது முதல் மிதமான ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதன் அறிகுறிகள் வெளியே தெரியாமலிருக்கலாம். ஆனாலும், அதனால் ரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம்.

ரத்த அழுத்தம் அதிகரித்தால் இதயம், சிறுநீரகம், மூளை என எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படும். எனவே, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம்.

exercise
exercise

சிலருக்கு உயர் ரத்த அழுத்தத்தை ரிவர்ஸ் செய்ய முடியும். குறைந்த உப்புள்ள உணவுகள், உடற்பயிற்சிகள், ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை, முறையான தூக்கம் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம் ரிவர்ஸ் செய்யலாம். அவர்களில் சிலருக்கு படிப்படியாக மருந்துகளின் அளவை மருத்துவர் குறைக்கவும் வாய்ப்புண்டு. ஆனால், அதை நீங்களாக முடிவு செய்யாமல் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து அவரது அறிவுரையின் பேரிலேயே செய்ய வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.