Published:Updated:

Doctor Vikatan:சாப்பாட்டுக்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் மாற்றமில்லாத சர்க்கரை அளவு... சாதாரணமானதா?

சர்க்கரை அளவு
News
சர்க்கரை அளவு

சாப்பிட்ட உடனேயே எல்லோருக்கும் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்காது. உங்கள் விஷயத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் இன்சுலின் செயல்பாடு நார்மலாக இருப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.

Published:Updated:

Doctor Vikatan:சாப்பாட்டுக்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் மாற்றமில்லாத சர்க்கரை அளவு... சாதாரணமானதா?

சாப்பிட்ட உடனேயே எல்லோருக்கும் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்காது. உங்கள் விஷயத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் இன்சுலின் செயல்பாடு நார்மலாக இருப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.

சர்க்கரை அளவு
News
சர்க்கரை அளவு

Doctor Vikatan: நான் சமீபத்தில் சர்க்கரைப் பரிசோதனை செய்து பார்த்தேன். ‌‍‍‍சாப்பிடும் முன் 88, சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து சர்க்கரை அளவு 89 என காட்டியது, சாப்பிட்ட பின் சர்க்கரை அளவு அதிகரிக்கவில்லை. இது சரியானது தானா?

- Anantha Raman, விகடன் இணையத்திலிருந்து...

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி.

மருத்துவர் சஃபி
மருத்துவர் சஃபி

நீங்கள் எந்த முறையில் இதைப் பரிசோதனை செய்தீர்கள் என்று தெரியவில்லை. குளுக்கோமீட்டர் என்ற கையடக்க கருவி இன்று வந்திருக்கிறது. அதைவைத்து வீட்டிலேயே ரத்தச் சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்கலாம். அதில் பரிசோதிக்கும்போது 10 முதல் 12 மில்லிகிராம் வரை வேறுபாடுகள் காட்டலாம். அது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.

சிபிஜி என்று சொல்லக்கூடிய 'கேபிலரி பிளட் குளுக்கோஸ் (Capillary Blood Glucose) டெஸ்ட்டில் விரல் நுனியில் வரக்கூடிய ரத்தத்தை எடுத்துப் பார்ப்போம். அதுவே பரிசோதனைக்கூடங்களில் முழங்கைப் பகுதியிலிருந்து ரத்தம் எடுத்துப் பரிசோதிப்பார்கள். அதை 'வீனஸ் பிளட் குளுக்கோஸ்' (Venous Blood Glucose) என்று சொல்வோம்.

இந்த இரண்டுக்குமே வேறுபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் விரல் நுனியிலிருந்து எடுக்கப்படுவதில் நரம்பு மற்றும் தமனி என இரண்டின் ரத்தமும் சேர்ந்து வரும். அதனாலும் வேறுபாடு இருக்கலாம்.

ரத்தச் சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 88, சாப்பிட்ட பிறகு 89 என குறிப்பிட்டுள்ளீர்கள். கேபிலரி பிளட் குளுக்கோஸ் முறையில் விரல் நுனியில் ஊசியால் குத்திச் செய்யப்பட்ட டெஸ்ட் காரணமாக இப்படி இருக்கலாம். உங்களுக்கு இன்சுலின் சுரப்பு நார்மலாக இருப்பதாக அர்த்தம். வளர்சிதை மாற்றச் செயல்பாடும் நார்மலாக இருப்பதாகப் புரிந்து கொள்ளலாம்.

நீரிழிவு நோய்
நீரிழிவு நோய்

சாப்பிட்ட உடனேயே எல்லோருக்கும் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்காது. உங்கள் விஷயத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் இன்சுலின் செயல்பாடு நார்மலாக இருப்பதாகப் புரிந்துகொள்ளலாம். 2 மணி நேரத்துக்கு பதிலாக சாப்பிட்ட அரை மணி நேரத்தில் நீங்கள் டெஸ்ட் செய்து பார்த்தால் வேறுபாடுகள் தெரியவரலாம். எனவே இது குறித்து பயப்படத் தேவையில்லை.

அதுவே சர்க்கரைநோயாளிக்கு இப்படி இருக்குமானால் ஏதோ கோளாறு என கவலைப்படலாம். நீரிழிவு இல்லாத நபருக்கு இப்படி இருப்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.