Published:Updated:

Doctor Vikatan: ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் பரவும் அரிப்பு... காரணமும் தீர்வும் என்ன?

அரிப்பு
News
அரிப்பு

ஒருவரை ஒருவர் தொடுவதன் மூலம், ஒரே படுக்கை, படுக்கை விரிப்பு, தலையணை, டவல், சோஃபா உள்ளிட்டவற்றை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிலையில் இந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் பரவும். மிக சுத்தமாக இருப்பவர்களுக்குக்கூட இந்த பாதிப்பு வரலாம்.

Published:Updated:

Doctor Vikatan: ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் பரவும் அரிப்பு... காரணமும் தீர்வும் என்ன?

ஒருவரை ஒருவர் தொடுவதன் மூலம், ஒரே படுக்கை, படுக்கை விரிப்பு, தலையணை, டவல், சோஃபா உள்ளிட்டவற்றை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிலையில் இந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் பரவும். மிக சுத்தமாக இருப்பவர்களுக்குக்கூட இந்த பாதிப்பு வரலாம்.

அரிப்பு
News
அரிப்பு

என் வயது 37. எனக்கு அடிக்கடி அந்தரங்க உறுப்பில் அரிப்பு வருகிறது. மாதத்தில் 10 நாள்களாவது இந்த அரிப்பால் அவதிப்படுகிறேன். எனக்கு அரிப்பு வந்தால் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் அப்படி வருகிறது. என் கணவர், மகள்கள் என எல்லோரும் அவதிப்படுகிறார்கள். அரிப்பு என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றுமா? அடிக்கடி இந்த அரிப்பு வர என்ன காரணம்? இதைக் குணப்படுத்த முடியுமா?

டாக்டர் செல்வி ராஜேந்திரன்
டாக்டர் செல்வி ராஜேந்திரன்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு `ஸ்கேபிஸ்' (scabies) என்று பெயர். தமிழில் சிரங்கு என்பார்கள். சருமத்தை பாதிக்கும் சிரங்குப் பூச்சிகளால் ஏற்படும் பிரச்னை இது. இந்தப் பூச்சிகள் சருமம் எங்கெல்லாம் மெலிந்தும் ஈரப்பதத்துடனும் இருக்கிறதோ, அந்தப் பகுதிகளைக் குறிவைத்து வளரும்.

இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அரிப்பு என்பது பிரதான அறிகுறியாக இருக்கும். விரல் இடுக்குகள், மணிக்கட்டு, அக்குள், தொப்புள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு தீவிரமாக இருக்கும்.

Bed Spread
Bed Spread

இரவு நேரங்களில் இன்னும் தீவிரமாக இருக்கும். ஒருவரை ஒருவர் தொடுவதன் மூலம், ஒரே படுக்கை, படுக்கை விரிப்பு, தலையணை, டவல், சோஃபா உள்ளிட்டவற்றை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நிலையில் இந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் பரவும்.

பொதுவாக, அதிக நபர்களைக் கொண்ட வீடுகள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள் போன்ற இடங்களில் இருப்பவர்களுக்கு நெருக்கம் காரணமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த ஸ்கேபிஸ் பாதிப்பு பரவும்.

சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்... மிக சுத்தமாக, சுகாதாரமாக இருப்பவர்களுக்குக்கூட இந்த பாதிப்பு வரலாம். எனவே, முதல் வேலையாக நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சரும மருத்துவரை அணுகுங்கள்.

உங்களுடைய அறிகுறிகளை வைத்து இது ஸ்கேபிஸ் பாதிப்புதானா அல்லது இதே அறிகுறிகளை வெளிப்படுத்தும் வேறு சரும பாதிப்பா என்பதை மருத்துவர் உறுதி செய்வார். உங்கள் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து பெர்மெத்ரின் க்ரீம், ஐவர்மெக்டின் மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவர் பரிந்துரைப்பார். தேவைப்பட்டால் அரிப்பைக் கட்டுப்படுத்தும் ஒவ்வாமைத் தடுப்பு மருந்துகளும் கொடுக்கப்படும்.

 tablets
tablets
Pixabay

பெர்மெத்ரின் க்ரீமை பொறுத்தவரை ஒருவர் மட்டும் பயன்படுத்தாமல் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் அதைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். விடுதிகளில் உள்ள பிள்ளைகள், முதியோர் இல்லங்கள் என மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் ஒரே இரவில் அனைவரும் இந்த க்ரீமை பயன்படுத்த வேண்டியிருக்கும். இரவில் இந்த க்ரீமை தடவிக்கொண்டு தூங்கிவிட்டு, மறுநாள் காலை வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட வேண்டும்.

படுக்கை விரிப்பு, டவல், தலையணை உறை, சோஃபா கவர் என அனைத்தையும் வெந்நீரில் ஊறவைத்து, துவைத்து வெயிலில் உலர்த்திப் பயன்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால்தான் பாதிப்பு ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாமல் தடுக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.