Published:Updated:

`மக்களைத் தேடி மருத்துவம்; டாக்டரைத் தேடும் மக்கள்!' - ஒரு பூமராங் திட்டம்

மக்களைத் தேடி மருத்துவம்
News
மக்களைத் தேடி மருத்துவம்

ஏழு மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 40,09,643 பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பயனாளிகள் சிலரிடம் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்று விசாரித்தோம்.

Published:Updated:

`மக்களைத் தேடி மருத்துவம்; டாக்டரைத் தேடும் மக்கள்!' - ஒரு பூமராங் திட்டம்

ஏழு மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 40,09,643 பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பயனாளிகள் சிலரிடம் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்று விசாரித்தோம்.

மக்களைத் தேடி மருத்துவம்
News
மக்களைத் தேடி மருத்துவம்

`மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தொற்றாநோய்களான சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று, அவர்களுக்கு மாதம்தோறும் மருந்து, மாத்திரைகள் தரவிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

``முதற்கட்டமாக இந்த நோய்களுக்கு மருத்துவமனைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடும் 20 லட்சம் பேரின் வீடு தேடிச் சென்று மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கவிருக்கிறோம். இது தவிர, கிராமம், நகரம் எனத் தமிழகம் முழுவதும் தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டவர்களை, வீடு தேடிச்சென்று கண்டறிந்து, அதில் அரசு மருத்துவமனையில் மருந்து சாப்பிட விருப்பப்படுகிற ஒரு கோடி பேரைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறோம். இதற்கு, 6 மாத காலம் இலக்கு வைத்திருக்கிறோம்" என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அப்போது தெரிவித்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில், சாமனப்பள்ளி கிராமத்தில் தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி, சேலம், ‌‌‌மதுரை, திருநெல்வேலி உட்பட ஏழு மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 40,09,643 பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சைபெறும் பயனாளிகள் சிலரிடம் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்று விசாரித்தோம். அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் பின்வருமாறு...

``போனவங்க வரவே இல்ல!"

சரோஜா நாராயணன், சாமனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்

``நான் சர்க்கரைநோய்க்கு இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை எடுத்துக்கறேன். இந்தத் திட்டத்தோட முதல் பயனாளி நான்தான். முதல் நாள் மாத்திரை கொடுத்துட்டுப் போனவங்க, இப்பவரைக்கும் ஒருநாள்கூட வந்து செக் பண்ணல. அதனால வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற துணை சுகாதார நிலையத்துல நானே போய் மாத்திரை வாங்கிக்கிறேன். மாசத்துக்கு ஒரு முறையாவது வந்து செக் பண்ணா நல்லா இருக்கும்.”

சரோஜா நாராயணன் மற்றும் சந்திரசேகரன்
சரோஜா நாராயணன் மற்றும் சந்திரசேகரன்

``போட்டோ எடுக்குறதுக்காக மட்டும் வராங்க!"

சந்திரசேகரன், சாமனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்

``நான் கொஞ்ச நாளா கைமுடக்குவாத நோயால் அவதிப்பட்டுட்டு இருக்கேன். கடந்த 4 மாசமா மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளியா சிகிச்சை பெற்று வர்றேன். மாசம் ஒருமுறை காமன்தொட்டி சுகாதார நிலையத்தில இருந்து செவிலியர்கள் வந்து, ரெண்டு மூணு உடற்பயிற்சி சொல்லித் தர்றாங்க. ஆனாலும், உடல்நிலையில எந்தவித முன்னேற்றமும் இல்ல” என்று வருத்தம் தெரிவித்தார். இது குறித்துப் பேசிய அவரின் மகன், ``போட்டோ எடுக்க மட்டும் வந்து ட்ரீட்மென்ட் பண்றாங்க, எங்க அப்பாகிட்ட எந்த முன்னேற்றமும் தெரியல” என்றார்.

``குறை ஏதுமில்லை!"

மஞ்சுநாத் வெண்ணிலா, பெரியசாப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம்

``என் கணவர் 5 வருஷத்துக்கு முன்னால விபத்தால உடலுறுப்புகள் செயலிழந்து படுத்த படுக்கையாகிட்டாரு. இவருக்கு அடிக்கடி பிசியோதெரபி செய்யணும். வறுமை காரணமா மிகவும் சிரமமான நிலையில் பணம் செலவுசெஞ்சு அவரை பிசியோதெரபி சிகிச்சைக்கு அழைச்சிட்டுப் போவேன்.

இப்போ கடந்த நாலு மாசமா மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில என் கணவருக்கு வீட்டுக்கு வந்து சிகிச்சை கொடுக்கிறாங்க. இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதா இருக்கு. மாசம் ஒருமுறை வந்து உடற்பயிற்சி செய்ய சொல்லிக் கொடுத்துட்டுப் போறாங்க. உடற்பயிற்சியோட பிசியோதெரபி சிகிச்சையும் கொடுத்தா நல்லா இருக்கும். மாசம் ஒருமுறைங்கிறதை வாரம் ஒருமுறையா மாத்துனா இன்னும் பயனுள்ளதா இருக்கும். உடல் நிலையில நல்ல முன்னேற்றம் தெரியும்.”

இலட்சும்மா
இலட்சும்மா

``யாராவது வந்து கேட்டா அடிக்கடி வர்றாங்கன்னு சொல்லச் சொன்னாங்க"

இலட்சும்மா, அஞ்சாலம், கிருஷ்ணகிரி மாவட்டம்

``சுமார் 25 ஆண்டுகளா சர்க்கரைநோய்க்கு மாத்திரை சாப்பிட்டு வர்றேன். எனக்கு 80 வயசு. என்னால் நடக்க முடியல. நாலு மாசத்துக்கு முன்னால மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துல இருந்து வந்தது செக் பண்ணி, மாத்திரை கொடுத்துட்டுப் போனாங்க. மாசாமாசம் வீட்டுக்கே வந்து மாத்திரை தந்து, ஷுகர் செக் பண்ணிட்டுப் போவோம்னு சொன்னாங்க. யாராவது வந்து கேட்டா அடிக்கடி வர்றாங்கன்னு சொல்லுங்கன்னும் சொல்லிட்டுப் போனாங்க. அதுக்கப்புறம் இதுவரை ஒருநாள்கூட வந்து பார்க்கல. பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட காசு (கூலி) கொடுத்து, மாத்திரை வாங்கிட்டு வந்து தரச்சொல்லி சாப்பிட்டுட்டு இருக்கேன். பக்கத்துல இருக்கிற நர்ஸுங்ககிட்ட கேட்டா, `இது என் வேலை இல்லை. நீங்க போய் கேஸ் குடுங்க'ன்னு சொல்றாங்க.

``பாசமா, அக்கறையா பார்த்துக்கிறாங்க"

முனியப்பன், சின்ன கும்மனூர், தர்மபுரி

``எனக்கு 80 வயசுக்கு மேல ஆகுது. சுமார் 30 வருஷமா நான் சர்க்கரைநோய், ரத்த அழுத்த நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு வர்றேன். கடந்த நாலு மாசமா மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துல பயனாளியாக இருக்குறேன். இந்தத் திட்டம் ரொம்ப பயனுள்ளதா இருக்கு. மாசம் ஒருமுறை வந்து பிபி, சுகர்லாம் செக் பண்ணிட்டு மாத்திரை தந்துட்டுப் போறாங்க. அவங்க தாத்தா பாட்டிய பார்க்குற மாறி பாசமாவும் அக்கறையாவும் பார்த்துகிறாங்க."

முனியப்பன் மற்றும் சாம்ராஜ்
முனியப்பன் மற்றும் சாம்ராஜ்

``நீங்களே எக்சர்சைஸ் பண்ணுங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க!"

சாம்ராஜ் , கும்மனூர், தர்மபுரி.

சாம்ராஜின் மனைவி கூறியது, ``என் கணவர் 2020 செப்டம்பர் மாசம் முதல் முடக்குவாதம், ரத்த அழுத்த நோயால பாதிக்கப்பட்டு இருக்காரு. மாசம் ஒருமுறை வந்து பிபி செக் பண்ணிட்டு மாத்திரை தந்துட்டுப் போறாங்க. முடக்குவாதத்துக்கு பிசியோதெரபி சிகிச்சைகாக ஒருநாள் வந்து பார்த்துட்டு கணக்கு எழுதிட்டு, நீங்களே எக்சர்சைஸ் பண்ணுங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. அவங்க வந்து போய் மூணு மாசம் ஆகுது. அதுக்கப்புறம் வரவே இல்ல. பக்கத்துல இருக்கிற நர்ஸுங்க மாசம் ஒருமுறை வந்து பிபி மட்டும் செக் பண்ணிட்டுப் போறாங்க.”

``அலைச்சல் மிச்சமாயிடுச்சு!"

சாக்கம்மா, காமராஜ்புரம், பஞ்சப்பள்ளி, தர்மபுரி மாவட்டம்.

``எனக்கு வயசு 76 ஆகுது. 10 வருசமா சர்க்கரைநோய், ரத்த அழுத்தத்துக்கு மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி பஞ்சப்பள்ளி அரசு மருத்துவமனைக்குப் போய் மருந்து வாங்கிட்டு வருவேன். பஸ்ல போய் மாத்திரை வாங்கிட்டு வர்றது ரொம்ப சிரமமா இருக்கு. இப்போ வீட்டுக்கே வந்து மருந்து மாத்திரை தந்துட்டுப் போறாங்க. எனக்கு அலைச்சல் மிச்சமாயிடுச்சு.”

சாக்கம்மா மற்றும் மாரப்பன்
சாக்கம்மா மற்றும் மாரப்பன்

``தன்னம்பிக்கையை அதிகரிச்சிருக்கு!"

மாரப்பன், பஞ்சப்பள்ளி, தர்மபுரி மாவட்டம்.

``எனக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி வலிப்பு நோயால கால்கள் செயலிழந்திருச்சு. ரொம்ப சிரமமான நிலையில பக்கத்துல உள்ள பஞ்சப்பள்ளி அரசு மருத்துவமனைக்குப் போய் சர்க்கரைநோய்க்கு மாத்திரை வாங்கி சாப்பிட்டுட்டு இருந்தேன். இந்தத் திட்டம் மூலம் வீடுகளுக்கு வந்து மாத்திரை தந்துட்டு போறது ரொம்ப பயனுள்ளதா இருக்கு. கால்களுக்கு உடற்பயிற்சியும் சொல்லித் தர்றாங்க. இது என் தன்னம்பிக்கையை அதிகரிச்சிருக்கு. என்னால தனியா எழுந்து நிக்கக்கூட முடியாது. இப்போ அதற்கான முயற்சிகளைச் செய்துட்டு வர்றேன்.”

இதுதவிர, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு மக்களிடம் விசாரித்தபோது பலருக்கும் இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வே இல்லை. சாமல் பள்ளம் போன்ற கிராமத்து மக்களிடம் இதுகுறித்து கேட்டபோது அவர்களுக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை.