Published:Updated:

Dolo-650 சர்ச்சை: மருந்து உற்பத்தி தனியார் வசம் இருக்கும் வரை முறைகேடுகளைக் கட்டுப்படுத்த முடியாது!

Dolo-650
News
Dolo-650 ( ட்விட்டர் )

மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்தை மக்கள் எந்தக் கேள்வியும் இல்லாமல் வாங்கிச் சாப்பிடுவார்கள். ஆகவேதான் அவர்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தங்களது பிராண்டை பரிந்துரைக்கச் சொல்கிறார்கள்.

Dolo-650 சர்ச்சை: மருந்து உற்பத்தி தனியார் வசம் இருக்கும் வரை முறைகேடுகளைக் கட்டுப்படுத்த முடியாது!

மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்தை மக்கள் எந்தக் கேள்வியும் இல்லாமல் வாங்கிச் சாப்பிடுவார்கள். ஆகவேதான் அவர்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தங்களது பிராண்டை பரிந்துரைக்கச் சொல்கிறார்கள்.

Published:Updated:
Dolo-650
News
Dolo-650 ( ட்விட்டர் )

டோலோ 650 என்கிற பாரசிட்டமால் மாத்திரையைப் பரிந்துரைக்க வேண்டி அந்நிறுவனம் 1000 கோடி அளவில் மருத்துவர்களுக்கு அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறையினரின் சோதனையில் மருத்துவர்களுக்கு பணம், பரிசுப்பொருள் மற்றும் வெளிநாடு சுற்றுலா என இதற்காக 1000 கோடி செலவிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா அச்சத்தின் காரணமாகப் பலரும் டோலோ 650 என்கிற பாரசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொண்டனர். அதன் பின் இப்படியான முறைகேடு நடைபெற்றிருக்கிறது. இது போன்ற முறைகேட்டை எப்படித் தடுக்கலாம் என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்திடம் கேட்டோம்...

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``மருத்துவத்துறை முழுவதும் வணிகமயமாகிவிட்டது. இன்றைய சமூக பொருளாதார அமைப்பின் விளைவாகவே இதைப் பார்க்க முடியும். மருந்து உற்பத்தி முழுவதும் தனியார் வசம் இருக்கும்போது அங்கே தொழில் போட்டி இருக்கவே செய்யும். ஒவ்வொரு நிறுவனமும் தனது மருந்தை விற்பதற்காக விளம்பரங்கள் கொடுப்பது மட்டுமன்றி மருத்துவர்கள் மூலம் பரிந்துரைக்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மருத்துவர் எழுதிக்கொடுக்கும் மருந்தை மக்கள் எந்தக் கேள்வியும் இல்லாமல் வாங்கிச் சாப்பிடுவார்கள். ஆகவேதான் அவர்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தங்களது பிராண்டை பரிந்துரைக்கச் சொல்கிறார்கள். மருந்து நிறுவனங்கள் அளிக்கும் லஞ்சம் என்பது பணமாக மட்டுமே இருக்கும் என்றில்லை. பரிசுப் பொருளாக, வெளிநாட்டு சுற்றுலா என பல விதங்களில் மருத்துவர்களைத் தங்கள் வசப்படுத்திக் கொள்வதற்கான வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

டோலோ 650 என்றில்லை பெரும்பாலான பிராண்டுகளை முன்னிறுத்த பல நிறுவனங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு எவ்வித இலவசத்தையும் வழங்கக்கூடாது என இந்திய மருத்துவக் கழகம் கூறியுள்ள போதும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை எவ்விதம் அரசால் கண்காணிக்க முடியும்... முழுவதும் தனியார் வசமுள்ள மருந்து உற்பத்தித் துறையில் நடைபெறும் இதுபோன்ற முறைகேடுகளை அரசால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது.

மருந்து சீட்டு
மருந்து சீட்டு

அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மருந்து உற்பத்தி மற்றும் மருந்து ஆராய்ச்சி செய்வதே இதற்குச் சிறந்த தீர்வாக இருக்கும். மக்கள் மருந்தகம், அம்மா மருந்தகம் ஆகிய அரசு மருந்தகங்களில் கூட தனியார் நிறுவனங்கள் தயாரித்த மருந்துகள்தான் விற்பனை செய்யப்படுகின்றன. அரசே உற்பத்தி செய்து மருந்தகங்களை அதிகரித்து விநியோகிக்கலாம். இதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்பட்டு மக்களுக்கு ஏற்ற விலையில் மருந்துகளைக் கொண்டு சேர்க்க முடியும். மருந்துகள் மட்டுமன்றி மருத்துவ உபகரணங்களையும் அரசே தயாரிக்கலாம்.

ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருப்பதே தனியார் மயம்தான். நிறுவனங்களுக்கிடையே நிலவும் போட்டியில் அவர்கள் வெல்ல எந்த எல்லைக்கும் செல்வார்கள் எனும்போது அவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசிடம்தான் இருக்கிறது. மருத்துவர்களுக்கான செமினார்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும். அது போன்ற செமினார்களில் ஒவ்வொரு மருத்துவரும் அவசியம் கலந்துகொண்டு புதிய மருத்துவத் தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தால்தான் அவர்கள் மருத்துவப் பணியைத் தொடர முடியும்.

இந்த செமினார்கள் தனியாரால் நடத்தப்படுபவை. அதற்கு ஒவ்வொரு மருத்துவரும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே, இந்த செமினாருக்கு மருந்து நிறுவனங்கள்தான் ஸ்பான்ஸர் செய்கின்றன. சுற்றுலாவுக்கோ, கருத்தரங்குக்கோ மருத்துவர்களை வெளிநாடு அனுப்பவும் செய்கின்றன. அரசே இந்த செமினார்களை நடத்தினால் மருந்து நிறுவனங்கள் உள் நுழையத் தேவையில்லையே. எந்தெந்த முறையில் மருந்து நிறுவனங்கள் பணம் கொடுக்கின்றனவோ அந்த வழிகளையெல்லாம் துண்டிக்க வேண்டும்.

மருந்து
மருந்து

இது போன்ற முறைகேடுகளுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மருந்தியல் தொடர்பாக அமைக்கப்பட்ட ஹாத்தி கமிட்டி (Hathi committee) அனைத்து மருந்துகளின் வர்த்தகப் பெயர்கள் நீக்கப்பட்டு, மருந்தியல் பெயர்களிலேயே அவை சந்தைப்படுத்த வேண்டும் என்கிற கருத்தை முன் வைத்தது. டோலோ 650, குரோசின் என்றில்லாமல் மருந்தியல் பெயரான பாரசிட்டமால் என்றிருந்தாலே தங்களது பிராண்டை முன் நிறுத்துகிற போக்கு நிலவாது.

வெவ்வேறான மருந்துகளின் வர்த்தகப் பெயர்கள் ஒன்று போலவே இருக்கின்றன. இதனால் ஏற்படும் குழப்பத்தால் மருந்துகளை மாற்றிக் கொடுக்கும் அவலமும் நடக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு மருந்தியல் பெயர்களை மட்டுமே அச்சிட்டு விற்பனை செய்ய வேண்டும். மருத்துவர்களும் மருந்தியல் பெயர்களை மட்டுமே எழுத வேண்டும்” என்கிறார் ரவீந்திரநாத்.