நாம் பிறர் மேல் வைத்திருக்கும் அன்பையும் அரவணைப்பையும் அவர்களைக் கட்டிப்பிடித்து வெளிப்படுத்த விரும்புவோம். வெளிப்படுத்திக்கொண்டும் இருந்தோம். நடுவில் கொரோனா வந்த பிறகு, இந்தக் 'கட்டிப்பிடி வைத்தியத்துக்கு' இடைவேளை விட வேண்டி வந்தது. சில மாதங்கள்வரை 'ஹக்' கலாசாரத்தையும் மறந்திருந்தோம்.

தற்போது கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாராள தளர்வுகளாலும் மற்றவர்களின் ஸ்பரிசம் இல்லாத காரணத்தால் ஏற்படும் ஸ்கின் ஹங்கர் (Skin hunger-`சருமத் தேடல்' அல்லது `தொடுதலுக்கான ஏக்கம்') பிரச்னையாலும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. பிடித்தவர்களைத் தொட்டும் அணைத்தும் பேசத் தொடங்கிவிட்டோம். இந்தப் பழக்கம் கொரோனாவால் ஏற்படும் அடுத்த சுற்று பாதிப்புக்குத் திறவுகோலாக இருந்துவிடக்கூடும். அதனால் நண்பர்களையும் உறவினர்களையும் கட்டிப்பிடிப்பதைத் தவிர்த்திடுங்கள் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனமான 'WHO'.
கடந்த சில தினங்களாக அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகளின் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதால், 'சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்' என்ற விதிமுறை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது WHO. ஏனெனில், இனி வருவது விழாக்காலம். அடுத்து வரும் தினங்களில் கிறிஸ்துமஸ், ஆங்கில வருடப் பிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.

இவை உலகம் முழுவதுக்குமான பொதுவான பண்டிகைகள். அதனால் பல்வேறு இடங்களில் நண்பர்களும் உறவினர்களும் ஒன்றுகூட நேரிடும். அப்போது ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவதாலும் கட்டிப்பிடிப்பதாலும் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கொரோனா பாதிப்பில் இரண்டாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை மனதில் கொண்டு பிறரைக் கட்டிப்பிடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.
கூட்டமாகச் சேர்ந்து உணவு உண்ண வேண்டாம். அதிக எண்ணிக்கையிலான நபர்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்த்திடுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்கின்றனர் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 'சமூக இடைவெளியை' கடைப்பிடிக்கும் மக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த லட்சணத்தில் இருக்கிறது நிலைமை. முக்கால்வாசி பேர் மாஸ்க் அணியாமலே சாலைகளில் நடமாடிக்கொண்டிருக்கின்றோம். ரியாலிட்டி ஷோக்களில் வரும் நடிகர்கள் கட்டிப்பிடித்துப் பேசுவதைப் பார்த்துவிட்டுக் கட்டிப்பிடி வைத்தியத்தை மீண்டும் கையிலெடுக்கத் தொடங்கிவிட்டோம். இந்நிலையில் பண்டிகைகள், திருமண விழாக்களை முன்னிட்டு மக்கள் ஒன்றாகக் கூடும்போது கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவக்கூடும். அதனால் நிலைமையை உணர்ந்து WHO விடுத்துள்ள இந்த எச்சரிக்கையை மனதில் கொள்வோம்! சமூக இடைவெளியைக் கடைப்பிடித்திடுவோம்!