Published:Updated:

இரண்டாவது தவணையில் கொரோனா தடுப்பூசியை மாற்றிச் செலுத்தலாமா, பாதிப்பு ஏற்படுமா? | Doubt of Common Man

Covaxin, Covishield
News
Covaxin, Covishield

இரு வேறு தவணைகளில் இரு வேறு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வது ஏதாவது பாதிப்புகளையோ பக்க விளைவுகளையோ ஏற்படுத்துமா என்று அறிந்து கொள்ளும் நோக்கிலேயே முறையான ஆராய்ச்சியை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

Published:Updated:

இரண்டாவது தவணையில் கொரோனா தடுப்பூசியை மாற்றிச் செலுத்தலாமா, பாதிப்பு ஏற்படுமா? | Doubt of Common Man

இரு வேறு தவணைகளில் இரு வேறு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வது ஏதாவது பாதிப்புகளையோ பக்க விளைவுகளையோ ஏற்படுத்துமா என்று அறிந்து கொள்ளும் நோக்கிலேயே முறையான ஆராய்ச்சியை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

Covaxin, Covishield
News
Covaxin, Covishield
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் ராகவி என்ற வாசகர் "இரண்டாவது தவணையில் கொரோனா தடுப்பூசி மாற்றி செலுத்திக்கொள்வது அதிக பயனை தருமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of Common Man
Doubt of Common Man

தடுப்பூசி செலுத்தத் தொடங்கியது முதல் இன்று வரை பல்வேறு வதந்திகளும், சந்தேகங்களும் பொதுவெளியில் நிறையவே உலா வருகின்றன. இந்தியா முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள்தான் பிரதானமாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சில நாள்களுக்கு முன், முதல் தவணையாக ஒரு தடுப்பூசியும் இரண்டாவது தவணையாக மற்றொரு தடுப்பூசியும் செலுத்திக் கொள்வதன் மூலம் அதிக எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும் என்ற கருத்து மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் வலம்வந்தது. இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அறிய மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் பேசினோம்.

பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

"உத்திர பிரதேச மாநிலத்தில்தான் முதன் முதலாக 18 நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி மாற்றிச் செலுத்தப்பட்டது. அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் நல்ல எதிர்ப்புச் சக்தியும் கிடைத்ததால் தடுப்பூசி மாற்றிச் செலுத்திக்கொள்வது சிறந்தது எனக் கூறி வருகின்றனர். ஆனால் இது குறித்து பெரிய அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சான்றுகள் எதுவும் இல்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திலும் (IMCR), வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சி முடிவுகள் வெளியான பின்புதான் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு முடிவையும் தெரிவிக்க முடியும்.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் எப்படி உருவாக்கப்படுகின்றன மற்றும் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். இரண்டு தடுப்பூசிகளுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கோவாக்சின் கொரோனா வைரசை உற்பத்தி செய்து செயலிழக்கச் செய்து பின் அதனை எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்துவது. கோவிஷீல்டு மனிதர்களிடம் பரவாத, சிம்பன்சிகளில் மட்டும் பரவக் கூடிய அடினோ வைரஸில், கொரோனா வைரஸின் 'ஸ்பைக்' எனப்படும் புரதத்தைச் சேர்த்துப் பயன்படுத்துவதாகும். இரண்டு வகையான மருந்துகளும் உடலில் தீவிரமாகச் செயல்படாமல் நோய் எதிர்ப்புச் சக்தியை மட்டும் உருவாக்கும். இரண்டு தடுப்பூசிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தாலும் இரண்டும் செயலிழந்த நிலையில் (Non - Replication) செலுத்தப்படுவதனால் வேறு வேறு தவணைகளில் இரண்டையும் செலுத்துவது குறித்து யோசிக்கலாம். ஆயினும், ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை காத்திருத்தல் நல்லது" என்றார்.

கோவாக்சின், கோவிஷீல்ட்
கோவாக்சின், கோவிஷீல்ட்

இரண்டு தடுப்பூசிகளிலும் ஒவ்வொரு தவணையைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவு முறையாக ஆராய்ச்சி செய்து எது சிறந்த முறை எனக் கண்டுபிடிக்கும் நோக்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த மே மாதம் வரை ஒரே தடுப்பூசியை மட்டுமே இரண்டு தவணைகளும் செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஜூன் மாதம் அசாமில் கோவாக்ஸின் தடுப்பூசியை முதல் தவணையாகச் செலுத்திக் கொண்ட நபர்கள் சிலருக்கும் தவறுதலாக இரண்டாம் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இது போன்று இந்தியாவில் ஒரு சில இடங்களில் இரண்டு தவணைகளிலும் இரு வேறு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்ட நிகழ்வுகள் அதிகம் நிகழவே, மக்களுக்குத் தடுப்பூசிகள் குறித்த அச்சமும் அதிகமானது. எனவே, இரு வேறு தவணைகளில் இரு வேறு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வது ஏதாவது பாதிப்புகளையோ பக்க விளைவுகளையோ ஏற்படுத்துமா என்று அறிந்து கொள்ளும் நோக்கிலேயே முறையான ஆராய்ச்சியை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை இருவேறு தடுப்பூசிகளை இருவேறு தவணைகளில் செலுத்திக் கொண்டவர்களுக்குப் பெரிதாகப் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. எனினும் இருவேறு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்வது சிறந்தது என உறுதிப்படுத்துவதற்கான முறையான ஆதாரங்களும் இல்லை. ஆய்வுகளுக்கும் அதன் முடிவுகளுக்கும் காத்திருப்போம்!
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
Doubt of common man
Doubt of common man