Published:Updated:

கண்தானம் செய்ய வழிமுறைகள் என்ன? யாரெல்லாம் கண்தானம் செய்யலாம்? | Doubt of Common Man

கண்தானம்
News
கண்தானம்

இறந்த பின்பு கண்தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

Published:Updated:

கண்தானம் செய்ய வழிமுறைகள் என்ன? யாரெல்லாம் கண்தானம் செய்யலாம்? | Doubt of Common Man

இறந்த பின்பு கண்தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

கண்தானம்
News
கண்தானம்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் கார்த்தி என்ற வாசகர், "கண் தானம் செய்ய வழிமுறைகள் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

விபத்து மற்றும் நோய்கள் மூலம் கண் பார்வையை இழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இறந்த பின்பு கண் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. கண் தானம் செய்யும் வழிமுறைகள் குறித்து நம்மில் பலருக்குப் பயமும் சிலருக்குக் கேள்விகளும் இருக்கின்றன. கண் தானம் செய்ய வேண்டும் என்ற மனம் நம்மிடம் இருந்தாலும், அதனை எப்படிச் செய்வது, கண் தானம் செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இந்த நிலையில்தான் கண்தானம் வழங்குவது எப்படி என்பதனை நம்முடைய வாசகர் ஒருவர் 'Doubt of Common Man' பகுதியில் கேள்வியாக எழுப்பியிருந்தார்.

'Eye call' ஜெகதீஸ்வரன்
'Eye call' ஜெகதீஸ்வரன்

நம் வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ளும் பொருட்டு கண் தானம் குறித்துத் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இயங்கி வரும் சமூக ஆர்வலர் ஜெகதீஸ்வரன் அவர்களிடம் பேசினோம். ஜெகதீஸ்வரன் கடந்த 42 ஆண்டுகளாகக் கண்தானம் பெற்றுத் தருகிறார். இதுவரை சுமார் 7154 பேருக்குக் கண் தானம் பெற்றுத் தந்திருக்கிறார். 'Eye call' ஜெகதீஸ்வரன் என்று மக்களால் அறியப்படும் அவரிடம் கண் தானம் கொடுப்பதற்கான வழிமுறைகள் குறித்துக் கேட்டோம். 'Eye call' ஜெகதீஸ்வரனின் எண் - 9443263868

அவர் கூறியதாவது, "கண்தானம் என்பது கண்ணின் கருவிழி அதாவது கார்னியல் பகுதியைத் தானமாக தருவதாகும். ஒருவர் இறந்த பிறகே அவரின் கண் தானமாகப் பெறப்படுகிறது. சிறிய வயதினர் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை யார் வேண்டுமானாலும் கண்தானம் செய்யலாம். கண்தானம் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல. தானம் பெறப்பட்ட கண் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை மூலம் தகுந்த நபருக்குப் பொருத்தப்படுகிறது. கண்தானம் செய்ய விரும்புவோர் , கண் வங்கியில் பெயரைப் பதிவு செய்து தங்கள் கண்களை தானம் செய்யலாம். பெயர் பதிவு செய்பவர்களுக்குக் கண்தான அட்டை வழங்கப்படுகிறது. நம்முடைய கண்களை தானம் செய்வதற்கு வங்கியில் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. இறந்து 4 முதல் 6 மணி நேரத்தில் கண்தானம் செய்ய வேண்டும். கண் வங்கியின் மருத்துவக் குழு, இறந்த நபரின் வீட்டில் சென்று கண்தானம் பெற்றுக்கொள்கின்றனர். இரண்டு சாட்சிகள் முன்னிலையில் உறவினரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மட்டுமே கண்தானம் செய்ய முடியும். இறந்தவரின் கண்களைத் தானமாக எடுக்க 20 - 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இறந்த நபரிடம் இருந்து சிறிது (10ml) ரத்தமும் பரிசோதனைக்கு எடுக்கப்படுகிறது. கண் வங்கி பணியாளர்களால் கண் மதிப்பிடப்பட்டு பின் கார்னியல் அறுவை சிகிச்சைக்கு அனுப்பப்படுகிறது." என்றார்.

கண் தானம்
கண் தானம்

யார் தானம் செய்யலாம்? யார் செய்ய முடியாது ?

எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய், ரேபிஸ், இரத்த புற்றுநோய் , டெட்டனஸ், காலரா, காமாலை, மூளைக்காய்ச்சல் மற்றும் மூளையழற்சி போன்ற தொற்று நோய்கள் உள்ளவர்கள் மட்டும் கண்களை தானம் செய்ய முடியாது. மேலும், விஷம் அருந்தியோ அல்லது தூக்கு போட்டுக் கொண்டவர்களோ கண் தானம் செய்ய முடியாது.

மேற்கூறியவர்களைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் கண்தானம் செய்ய முடியும். கண்ணாடி உபயோகிப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கூடக் கண் தானம் செய்யலாம்.

எப்படிக் கண் தானம் செய்வது?

நமக்குத் தெரிந்தவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய கண்களை தானம் செய்ய விரும்பினால், அருகில் உள்ள கண் வங்கியை அழைக்க வேண்டும். கண் வங்கியை அழைக்கும் போது, இறந்தவரின் உடல் நிலை குறித்த தகவல்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு அழைப்பது சிறந்தது. கண்தானம் செய்வதற்கு முன்பே கண் வங்கியில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

நாம் ஒருவருடைய கண்களை தானம் செய்ய முடிவெடுத்துவிட்டால், இறந்தவருடைய கண்களின் இமைகளை மூடிவிட வேண்டும். அவரை வைத்திருக்கும் அறையில் காற்றாடிகளை இயக்கக் கூடாது. காற்றாடிகளை இயக்கினால் கருவிழி உலர்ந்து பயன்படுத்துவதற்கு அற்றதாக ஆகிவிடும். இறந்த 4 முதல் 6 மணி நேரங்களுக்குள் கண்தானம் செய்துவிட வேண்டும். கண்களில் திருநீறு உள்ளிட்ட தூசு விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்படியாகப் பெறப்படும் கண்ணின் கருவிழி தகுந்த பரிசோதனைகளுக்குப் பின் பிறருக்குப் பொருத்தப்படுகிறது. 'இறந்தும் உலகைக் காணலாம்' என்பது கண் தானத்தால் மட்டுமே சாத்தியம். இறந்த பிறகு யாருக்கும் உபயோகமில்லாமல் போவதை விட வாழ்பவர்களுக்கு உபயோகமாக நம்முடைய கண்களை விட்டுச் செல்லலாமே. நாம் கண்ட உலகைப் பிறர் காண உதவிடுவோம்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man