
டாக்டர் ருத்ரன்
நம்பிக்கை என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த, பிடித்தமான வார்த்தை.
வாழ்வின் அடுத்தகட்டம் செல்வதற்கு, சிக்கல்களிலிருந்து மீள்வதற்கு, நோயிலிருந்து குணமடைவதற்கு என்று பல்வேறு கட்டங்களில் நம்பிக்கையோடு இருப்பது உதவும் என்பதும் ஒரு நம்பிக்கை. நேர்மறையான, நல்ல, பயனுள்ள விளைவுகளை நம்பிக்கை நமக்குத் தரும் என்பதைக் காலங்காலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நம்பிக்கை வைத்து ஒரு காரியத்தில் ஈடுபடுவது மனதுக்குக் கூடுதல் ஊக்கத்தைக் கொடுப்பதை நாம் எல்லாரும் உணர்ந்திருக்கிறோம்.
நம்பிக்கை உதவுவதுபோலவே அவநம்பிக்கையும் நம் வாழ்வில் உதவும். அவநம்பிக்கை நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் மனம் கணிக்கும் ஒரு விளைவு பற்றிய எண்ணம். மூடநம்பிக்கை அப்படியல்ல; அது எவ்வித அடிப்படை ஆதாரமோ அறிவியலோ அனுபவமோ இன்றி மந்தை மனப்பான்மையினால் வரும் குறுகிய பார்வை. மூடநம்பிக்கைகள் பலகாலம் பண்பாட்டுரீதியாக நம் மனத்துள் பதியவைக்கப்பட்டு அனிச்சைப் பழக்கமாகவே சிலருக்கு ஆகிவிடும். மூடநம்பிக்கைகளால் எவ்விதப் பயனும் கிடையாது, மாறாக அவற்றினால் காரியப் பிழைகளும் ஏற்படலாம். அவநம்பிக்கை அப்படியல்ல. அது அறிவுபூர்வமாக நமக்குத் தெரிந்த விஷயங்களின் அடிப்படையில் இப்படிச் செய்தால் தவறாகத்தான் முடியும் எனும் எச்சரிக்கை.

நம்பிக்கை மிகுந்தவர்கள்தான் விரும்பப்படு வார்கள். அவநம்பிக்கையோடு கருத்து சொல்பவர்களிடமிருந்து பலரும் விலகவே நினைப்பார்கள். நம்பிக்கை ஓர் உரத்த குரல், அவநம்பிக்கை பலநேரங்களில் வெறும் முணுமுணுப்பு - ஆனால் இரண்டுமே வாழ்க்கையில் நமக்கு உதவும்.
நம்பிக்கைக்கு அளவுகோல் இல்லை, ஆகவே எதுவரை நம்பலாம் என்பதில் பலருக்கும் தடுமாற்றம் வரும். சில நப்பாசைகளும் நம்பிக்கைகள்போலத் தோன்றும். தீவிர சிகிச்சையில் இருக்கும் நெருக்கமானவர் உயிர்பிழைப்பார் எனும் ஆரம்ப நம்பிக்கை அவர் செயற்கை சுவாசத்தில் இருக்கையில் எப்படியாவது பிழைத்துவிடுவார் எனும் நப்பாசையாக மாறும். அதிக நம்பிக்கையோடு இருப்பவர்களும் ஒரு கட்டத்தில் அந்த நம்பிக்கை குறைவதை உணர்வார்கள். எவ்வளவு அதிகமான நம்பிக்கை வைத்திருந்தார்களோ அந்த அளவுக்கு அதிகமாக அந்த இழப்பும் தோல்வியும் அவர்களை நிலைகுலையச் செய்யும். நம்பிக்கை ஒரு காரியத்தை முன்னெடுக்கத் தரும் தைரியம். அதுவே அதீதமானால் தோல்வி ஏற்படும்போது, தடுமாற்றமாய், திகைப்பாய், சோகமாய் மாறும்.

நம்பிக்கையே வைக்கக்கூடாது என்றில்லை. ஆண்டின் இறுதியில் வாங்கும் நாட்குறிப்பிலிருந்து, காலை தூங்கியெழ ’அலாரம்’ வைப்பதிலிருந்து நம் வாழ்வின் அநேக செயல்பாடுகள் நம்பிக்கையின் அடிப்படையில்தான். அனிச்சை யாய் இப்படி நம்பிக்கையோடு இருப்பதற்கும், ஒரு காரியத்தை எடுத்து முடிப்போம் என்று தீர்மானிக்கும் நம்பிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளன.
ஒரு காரியத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடும் போது, தோல்வியின் பயம் தோன்றாது, பதற்றம் இருக்காது, வரப்போகும் வெற்றியின் கற்பனை ஓர் ஊக்கமே தரும். சரியான திட்டமிடலுக்கு மனம் இவ்வகை நிதானமான நிலையில் இருப்பது மிகவும் அவசியம். எல்லாம் சரியாகத் திட்ட மிட்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தால் நிச்சயம் தவறு ஏதும் நிகழாது என்று நம்புவோம். பல நேரங்களில் இந்த நம்பிக்கை வீணாவதில்லை. எதிர்பாராமல் ஏற்படும் ஒன்றினால் நம் திட்டங்கள் தடுமாறும்போதும், எதிர்பார்ப்பை மீறிய இழப்பு வரும்போதும் நாம் கொண்டிருந்த நம்பிக்கையின் நொறுங்கல் மனத்தை உடைத்துவிடுமளவு தீவிரமாக இருக்கும். காரியமாற்ற அதிகமாய் உதவிய அதே நம்பிக்கை, தோல்வியின்போது அதிகமாகவே வலி தரும்.
நம்பிக்கை உடையும்போது தன்மீதும், சூழல்மீதும் கோபம் வரலாம், சுயமதிப்பீடு நாசமாகலாம், எதிர்காலம் அச்சுறுத்தலாம். நம்பிக்கைகள் பலநேரங்களில் வரப்போகும் மகிழ்ச்சியின் கற்பனைகளால் கட்டப்பட்ட, யதார்த்தத்தின் அஸ்திவாரமில்லாத கனவுகள் என்பதால்தான் இந்த வலியும் திகைப்பும்.
அவநம்பிக்கையோடு ஒரு நிர்பந்தத்தில் ஈடுபடும் காரியங்கள் தோல்வியில் முடிந்தால் மனம் உடைந்துபோவதில்லை. எதிர்பார்த்ததை விடவும் காரியம் வெற்றிகரமாக முடிந்தால் அதில் வரும் மகிழ்ச்சியும் கூடுதலாகவே இருக்கும். அதற்காக எல்லாவற்றையும் அவநம்பிக்கையோடு அணுகவேண்டியதில்லை. பலருக்கு, அவநம்பிக்கைக்கும் எச்சரிக்கை உணர்விற்கும் வித்தியாசம் தெரியாததால்தான் அவநம்பிக்கை என்பதை ஓர் எதிர்மறை மனநிலையாகவே பார்க்கின்றனர். ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் எல்லாம் சரியாக நடக்கும் என்பதைவிட எதுவெல்லாம் தவறாக மாறும் என்பதில் கவனம் செலுத்துவது அவநம்பிக்கையினால் அல்ல, எச்சரிக்கையுணர்வால்.

வெற்றியின் பாதையில் மட்டுமே பதியும் கண்களுக்கு அங்கே இருக்கும் பள்ளங்களையும் உணர்த்துவதே எச்சரிக்கை உணர்வு. கவனமாக நடந்தால் இலக்கை அடைவோம் என்பது யதார்த்தம் சார்ந்த நன்னம்பிக்கை; அடிபடுமே என்று யோசிப்பது அவநம்பிக்கை. எப்படியும் போய்ச் சேர மாட்டோம் எதற்கு வெட்டியாய் பயணம் என்பது யோசிக்கவே மறுக்கும் நம்பிக்கையின்மை.
தன்னம்பிக்கை அனைவருக்கும் அத்தியாவசியம். இது தன் திறன், குறை பற்றிய ஒரு தெளிவுடன் அமைந்தால் மட்டுமே பயனுள்ளதாகும். சுயமதிப்பீடு மிகையான கற்பனையினால் உருவானால் அதுவும் ஒரு மூட நம்பிக்கையே ஆகும். மூடநம்பிக்கைகள் ராசியான பேனாவைப் பரீட்சைக்கு எடுத்துப் போவதிலிருந்து, தெருமுனையிலிருக்கும் கோயிலைத் தாண்டும்போது அவசரமாய் விரலசைவில் கும்பிடுவதுவரை பலவகைப்படும்.
எல்லாருக்கும் வாழ்வில் நம்பிக்கை அவசியம். சூழலையும் தன் ஆற்றலையும் சரியாகக் கணக்கிட்டு வரும் நம்பிக்கை, எதிர்பார்க்கவே முடியாத (கோவிட்19 போன்ற) பேரிடர் வராதவரை நிச்சயமாய் மனநிலையை நிதானமாக வைத்துக்கொள்ள உதவும். தன்னம்பிக்கை உதவுவதுபோல சிலர் தெய்வநம்பிக்கையும் உதவும் என்று நம்புவார்கள்.
தெய்வநம்பிக்கை என்பது பக்தியினால் வருவது. பக்தி என்பது ஒருவகைக் காதல். காதலை வர்ணிக்க முடியும், வரையறுக்க முடியாது. அது அவரவர்க்கே உரித்தான பிரத்யேக அனுபவம். எந்த அனுபவம் மனத்துள் மகிழ்ச்சியை, ஊக்கத்தை, நிம்மதியை, தைரியத்தைத் தருகிறதோ அதைத் தொடர்ந்து உள்ளத்தில் தக்கவைத்துக்கொள்ள முயல்வதே மனித இயல்பு. தெய்வநம்பிக்கையும் இப்படித் தான். உண்மையான காதலை, காதலிக்கும் அந்த நபருக்குக்கூட நிரூபிக்க அவசியமில்லை. கவர்ச்சியை, சமூக நிர்பந்தத்தைக் காதல் என்று தவறாகப் புரிந்துகொள்வோர்தான் கைகளில் கீறிக்கொள்வது, ரத்தத்தில் கடிதம் எழுதுவது போன்ற மடத்தனங்களில் ஈடுபடுவார்கள். பக்தியிலும் இப்படித்தான் அலகு குத்தி, மொட்டையடித்துத் தம் பக்தியைப் பறைசாற்றுவார்கள். உண்மையான பக்தியிலும் காதலிலும் உள்ளுக்குள் உருவாகும் சுகானுபவமே நம்பிக்கையை வளர்க்கும், தைரியத்தையும் கொடுக்கும். இப்படி மனத்தளவில் தைரியமும் ஊக்கமும் தரும் நம்பிக்கை நிச்சயமாக ஒரு காரியத்தில் ஈடுபடும்போது தயக்கம், தடுமாற்றம் இல்லாமல் மனத்துள் ஒரு கவனக்குவிப்பையும் நிதானத்தையும் தரும். வெற்றிபெற இவை பெரும்பாலும் உதவும். ஒருவிதத்தில் தன்னம்பிக்கையும் தெய்வநம்பிக்கையும் வேறல்ல, ஒன்றுதான். கற்றது உதவும் எனும் கணிப்பு, மற்றது, யாருமே உதவ இல்லை யென்றாலும் எனக்கு உதவ ஒரு சக்தி இருக்கிறது எனும் கற்பனையானாலும் தெம்பூட்டும் நம்பிக்கை.
அவநம்பிக்கை என்பது ஒரு தற்காப்புக் கேடயம். எதிர்பாரா தாக்குதலை மனம் சமாளிக்க உதவும் சாதனம். அவநம்பிக்கை என்பது விரக்தியின் வெறுமையாக இல்லாமல், எச்சரிக்கையுணர்வை கவனத்தில் கூட்டினால் அதுவே வெற்றியும் தரும், அதனால் வரும் மகிழ்ச்சியையும் கூட்டும்.
நம்பிக்கை நற்பலன் தர யதார்த்தத்தின் சரியான புரிந்துணர்வே அவசியம்.
- மயக்கம் தெளிவோம்