Published:Updated:

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 11

மனதினிலே தோன்றும் மயக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மனதினிலே தோன்றும் மயக்கங்கள்

டாக்டர் ருத்ரன்

மெள்ள ஊரெங்கும் முடக்கத்திலிருந்து தளர்வுகள் அனுமதிக்கப்பட்டும் மனங்களில் இறுக்கங்கள் குறைந்துவிடவில்லை.

அடுத்து எனும் கேள்விக்கு, எப்போதுமே யதார்த்த அணுகு முறையை விடவும் மனம் தன் ஆசைகளின் அடிப் படையிலேயே விடைகாண முயலும்.

இத்தனை நாள்கள் முடங்கியிருந்து இப்போது நாளை முதல் முன்போல் இயங்க வேண்டும் என்பது சிலருக்குக் கொஞ்சம் கடினமாகவே இருக்கும். முடக்கத்தில் இருந்த காலத்தில் சிலருக்கு ஒருவித சோம்பல் உருவாகியிருக்கும். சிலருக்கு அவசரங்கள் இல்லாத அட்ட வணை மிகவும் வசதியாக இருப்பதாகவே தோன்றி யிருக்கும். இதுவரை இல்லாத அளவு ஒரு நீண்ட விடுமுறைபோல் வீட்டிலிருந்து விட்டு நாளை முதல் வழக்கம்போல் பள்ளியின் அட்டவணைக்குப் போக வேண்டிய பதற்றமும் வெறுப்பும் குழந்தைகளுக்கு வருவது போலவே பெரியவர்களுக்கும் மீண்டும் பழைய அளவுக்குப் பணியில் ஈடுபடுவது அவசிய மாகும்போது சிரமமாகவும் இருக்கும். ஆனால் இவர்கள் விரைவில் பழைய அட்டவணைக்கு மீண்டும் பழகிவிடுவார்கள்.

இவை பெரிய அளவில் நீடித்த மாற்றத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் பொருளாதாரச் சிக்கல்கள் எளிதில் தீரப்போவதில்லை. அவற்றின் தாக்கங்களால் மனத்துள் பல்வேறு பாதிப்புகள் தோன்றக்கூடும். எவ்வளவு விரைவாக முடக்கத்துக்கு முந்தைய நிலைக்கு வாழ்க்கை மீள்கிறதோ அவ்வளவு விரைவாக மயக்கங்களும் மலைப்புகளும் மிரட்சிகளும் குறையும்.

ஆனால் இனி வரும் காலங்களில், உடனடியாக முன்போல் இயங்குவதென்பது யாருக்குமே சாத்தியமில்லை. அடுத்த ஓராண்டு படிப்படி யாகத் தான் வாழ்க்கை முந்தைய நிலைக்குப் போகும். மீள்வதும் எழுவதும் சாதாரணமாக இருக்காது. அதற்குப் பெருமுயற்சியும் பொறுமையும் தேவைப்படும். அன்றாட வாழ்வே பொரு ளாதாரப் போராட்டமாக இருக்கும் வர்க்கத்தினர்க்கு கடும் உழைப்பு இயல்பாக அமையும். சற்றே சௌகர்ய மான வகையில் வாழ்வை ஓட்டிக் கொண்டிருப்பவர் களுக்கு அடுத்து வரும் மாதங்கள் கடுமையாகத் தோன்றும்.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 11

அடுத்த வாரத்திலிருந்து வேலை, அடுத்த மாதத்திலிருந்து முழு ஊதியம் என்பது சிலருக்கு இருக்காது. இன்னும் சிலருக்கு முன்போல் மாத வருமானம் இருக்காது. இன்ன தேதியிலிருந்து முன்போல் ஊர்களும் நகரங்களும் இயங்க லாம் என்பது ஓர் அரசாணையாக இருக்கும், ஆனால் இயல்புநிலை உடனே திரும்பப் போவதில்லை. சில முயற்சிகள் தோல்வியில் முடியலாம், சில ஆசைகள் இனி சாத்தியமே இல்லை என்று ஒரு சோகத்தை உருவாக்கலாம். ஆனால் முயற்சிகள் தொடரத்தான் வேண்டும்.

தோல்விகள் தவிர்க்க முடியாதவை. செஸ் விளை யாடுவதுபோல வாழ்க்கையில் சில சின்ன இழப்புகளையும் எதிர்பார்த்துத் திட்டமிட்டால் பெரிய வெற்றி சாத்தியம். எதை இழப்பது எதை விடாமல் தொடர்ந்து முயல்வது என்பதில் பொதுவிதி எதுவும் கிடையாது. ஒவ்வொருவரின் வாழ்க்கைமுறை, சிந்திக்கும் போக்கு, செயல்படும் விதம், முதிர்ச்சி, சமூக அளவில் இருக்கும் பாதுகாப்பு ஆகியவையே அவரவர் முயற்சி களை, திட்ட மிடல்களை, சறுக்கலிலிருந்து எழும் வலிமையை நிர்ணயிக்கும்.

மனவலிமை இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்பது எல்லாரும் எல்லாருக்கும் எளிதாய்ச் சொல்லும் சொல்லிக் கொள்ளும் சமாதானம். அந்த வலிமை எல்லாரிடமும் உண்டு என்பதும் ஓரளவு உண்மைதான். எவ்வளவு திடமான மனத்துடன் ஒருவர் இருந்தாலும், எதிர்பாராத அதிர்ச்சிகளை எதிர்கொள்வது சுலபமில்லை. “ஹாப்பி நியூ இயர்” என்று 2020 ஆரம்பித்தபோது வாழ்த்தியது வெறும் மரபினால் மட்டுமல்ல, அது தனக்கே நம்பிக்கையூட்டிக் கொள்ளவும்தான். இப்படி அனைத்தும் முடங்கும், வாழ்முறையே மாறும், அச்சம் சூழும், சலிப்பு மிகும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதிலிருந்து மீள, நம்முள் வளர்த்துக்கொண்ட நம்பிக்கைகளை நாம் பரிசீலிக்க வேண்டும்.

வாழ்க்கை நம்பிக்கைகளின் அடிப் படையில் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனுபவங்களும் கல்வியும்தான் நம் நம்பிக்கைகளை நிர்ணயிக்கின்றன. நம்பிக்கைகள் நிரூபணமாகும்போது அவை வலிமையடைகின்றன, மனத்துள் தெம்பாக மாறுகின்றன. ஆனால் நாம் பலநேரங்களில் நம்பிக்கைகளையும் உண்மைகளையும் ஒன்றாக நினைத்துக்கொள்கிறோம். ஆசைகள் நம்பிக்கைகள்போல் தோன்றுவதால் மனம் மயங்கும். பிறர்மீது கொள்ளும் நம்பிக்கைகள் பிழையானால் வருந்தினாலும் ஒதுங்கிவிடலாம், நம்மீது வைத்துக்கொள்ளும் நம்பிக்கைகள் பொய்க்கும்போதுதான் உடைந்து விடுவோம். அதைத் தவிர்க்க சுயகணிப்பு துல்லியமாக இருக்க வேண்டும்.

எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வேறு. இரண்டுமே ஆசைகளை உள்ளடக்கியவை என்றாலும், எதிர்பார்ப்பில் விருப்பம் கூடுதலாக இருக்கும், நம்பிக்கைகளில் அனுபவங்களின் கணிப்பும் சேர்ந்திருக்கும். எதிர்பார்ப்பு என்பதில் என்றோ விரும்பிய இனி நிகழலாம் எனும் நப்பாசை சேர்ந்திருக்கும், நம்பிக்கை என்பதிலும் இன்றைய யதார்த்தத்தில் நாம் கூட்டிக்கொள்ளும் கற்பனை கலந்திருக்கும். ``எல்லாமே சரியாக நடந்தால்...” எனும் எதிர்பார்ப்பில் வருவது நம்பிக்கையல்ல. ``எதுவுமே சரியில்லை என்றாலும்...” என்று தயாராக இருப்பதுதான் நம்பிக்கை. இப்படி நாளையைப் பற்றி நாம் வரையறுத்துக்கொள்ளும் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளுமே நம் மனவலிமையை நிர்ணயிக்கும்.

இன்று ஒரு சின்ன வீட்டில் இருக்கிறேன், இவ்வளவு சம்பாதிக்க முடியும், இவ்வளவு சேமிக்க முடியும், இது வருடந்தோறும் கூடினால் பத்து வருடத்திற்குள் பால்கனியிலிருந்து கடல் பார்த்து இளைப்பாற ஓர் அழகிய வீடு வாங்க முடியும் என்பது எதிர்பார்ப்பு. அடுத்த ஆண்டு ஏதோ நடந்து என் வருமானம் குறைந்தால், நான் வீடு வாங்குவது இன்னும் சில ஆண்டுகள் தள்ளிப்போகும் என்பது நம்பிக்கை.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 11

நம்பிக்கைகளை நம் விருப்பங்களே தேர்வு செய்கின்றன. நம்பிக்கைகளே நம்மை ஊக்கப்படுத்தவும் செய்கின்றன. ஆனால் சரியான கணிப்பு வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையில் வருவதல்ல; அது நிஜத்தில் இருப்பதைப் பற்றிய தெளிவான புரிந்துணர்வில் வருவது. சரியான கணிப்புகள் எதிர்பார்ப்புகளின் சிறகுகளை முறிக்குமே தவிர பறக்க வேண்டுமென்ற ஆசையை அழித்துவிடாது. அப்படி சாத்தியமாவதை எதிர்பார்ப்பதே சிக்கலான காலத்தைக் கடப்பதற்கான வழி.

இதற்கு முதலில் மனத்துள் சேகரித்து வைத்துள்ள அதிகப்படியான ஆசைகளை, அடிப்படையில்லாத அச்சங்களை அகற்ற வேண்டும். கையிலிருக்கும் யதார்த்தத்தின் அடிப்படையில் தேவைகளை உணர்ந்து கொண்டால், அவசியம் எது ஆசை எது என்று புரிந்துகொண்டால், அடுத்த கட்டம் நகர்வது எளிது.

மைக்கேல் ஆஞ்செலோ `அற்புதமான சிற்பம், கல்லில் தேவையில்லாததை அகற்றியவுடன் வெளிவரும்’ என்றார். தேவையில்லாமல் வளர்த்துக்கொண்ட கற்பனைகளை, பேராசைகளை, பயங்களை அகற்றினால் எந்தச் சூழலிலும் எந்தச் சிக்கலிலும் மீண்டெழலாம். வாழ்வைச் செதுக்கிக்கொள்ளலாம்.

- மயக்கம் தெளிவோம்