Published:Updated:

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 12

மனதினிலே தோன்றும் மயக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மனதினிலே தோன்றும் மயக்கங்கள்

டாக்டர் ருத்ரன்

னைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என்றானபின், முகங்கள் முழுதாய்த் தெரிவதில்லை. பரிச்சயமானவர்களைக்கூட உடனே அடையாளம் கண்டுபிடிக்க முடிவதில்லை. புற அடையாளங்களை மட்டுமல்ல, அவர்களது மனநிலையையும் உடனே கணிக்க முடிவதில்லை.

இதுவரை வாழ்க்கையில் அடுத்தவரின் முகமே ஓர் உரையாடலுக்கோ உறவுக்கோ அவசியமாக இருந்திருக்கிறது. அவர்களது புன்னகை நமக்கு ஓர் அங்கீகாரமாகவும் நம் புன்னகை அவர்களுக்கு ஓர் அனுமதியாகவும் இருப்பதை எல்லாரும் உணர்ந்திருக்கிறோம். நிஜமான ஒரு புன்னகை உரையாடலைத் துவக்குவதை எளிதாக்கும், அறிமுகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும், இறுக்கத்தைத் தளர்த்தும்.

டாக்டர் ருத்ரன்
டாக்டர் ருத்ரன்

ஒருவர் பேசாமல் இருந்தாலும் அவர்களது முகத்தைப் பார்த்து என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும். அந்தப் புரிந்துணர்வு அந்த நேரத்தில் நாம் எப்படிப் பழகுவது, பேசுவது என்பதையும் தீர்மானிக்கும். ஒரு குழந்தையாக அம்மாவின் முகத்திலிருக்கும் உணர்ச்சிகளைப் புரிந்து அதற்கேற்ப நெருங்குவதையும் விலகுவதையும் செய்ததலிருந்து, இதை நாம் இயல்பாகவே இதுவரை கற்று வந்திருக்கிறோம்.

மற்றவர் முகமாறுதல்களைக் கொண்டு அவர்களது மனநிலையை உணர்ந்துகொள்ளும் புரிந்துணர்வு சமூகத்தில் நாம் பழக அவசியம். முகத்தைப் பார்த்து உணர்ச்சிகளை அறிந்து கொள்ள நாம் அடுத்தவர் கண்களை மட்டும் பார்ப்பதில்லை. பேசாத உதடுகளையும் சேர்த்துத்தான் முகபாவங்களைப் புரிந்து கொள்கிறோம். உதட்டளவில் வரும் புன்னகை எவ்வளவு உண்மை என்பதைக் கண்களே உணர்த்தும். கண்களும் சிரிக்கும் போதுதான் அந்தப் புன்னகை உளமார்ந்ததாகவும் உண்மையான தாகவும் இருக்கும்.

கண்கள் உள்ளிருக்கும் உணர்ச்சி களை வெளிப்படுத்தும். எதிர் இருப்பவர் பேசாதபோதும், கண்கள் மூலம் கோபம், வருத்தம் இரண்டையும் எல்லாராலும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். மௌனத்தில் மட்டுமல்ல, பேச்சிலும் கண்கள்தான் மனத்தை உண்மையாக வெளிப்படுத்துகின்றன. “ச்சீ” என்று சொல்லும் போது அந்த வார்த்தை, அந்த ஒலி மனத்தின் அருவருப்பா, நாணமா, கொஞ்சலா என்பதைக் கண்கள்தான் காட்டிக்கொடுக்கும். கண்வழியே உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது முன்பை விடவும் இப்போது கூடுதல் அவசிய மாகிறது. முகக்கவசம் அணியும் அவசியத்தால் இப்போது கண்களை மட்டுமே நாம் கவனிக்க முடிகிறது, அவற்றின் வழியேதான் மனத்தையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

சில கட்டங்களில் எதிர்ப்படும் கண்களில் எந்த உணர்ச்சியையும் நாம் காண்பதில்லை. நம் பேச்சில் கவனம் செலுத்துகிறாரா நிர்பந்தத்தால் அமர்ந்திருக்கிறாரா என்பதை அவர்களது முகமும் கண்களும் காட்டாவிட்டாலும் உடல்மொழி காட்டிவிடும். ஆனால் இணையவழி கல்வியும் கலந்துரையாடல்களும் வாழ்வின் தவிர்க்க முடியாதவையாக மாறிவரும் நிலையில் எதிரிருப்பவர் கவனித்துக் குறிப்பெடுக்கிறாரா கிறுக்கிக்கொண்டு நடிக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்வது கடினம்.

பேசும், பழக ஆரம்பிக்கும் அந்தக் கணநேரத்துக்கு முன் அனிச்சையாக மனம் அடுத்தவர் முகத்தையும் கண்களையும் உடல் மொழியையும் கணித்துவிடும் வசதி இனி குறைந்துவிடும். இதனால் எதிர்வினைகள் தவறாகலாம், சொல்லில் வராத செய்திகளைப் புரிந்துகொள்ள முடியாமல் செயல்களிலும் உறவுகளிலும் சிக்கல்கள் உருவாகலாம். அடுத்தவர் உணர்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் நாம் பேசுவதும், நடந்துகொள்வதும் அடிக்கடி நிகழலாம். ஏற்கெனவே ஒரு பெருந்தொற்று உருவாக்கியுள்ள மன இறுக்கத்திலும் வியாபார முடக்கத்திலும் இவ்வகைத் தவறுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இப்போதைய இறுக்கத்தில் பொருளாதார நெருக்கடி அதிகமாகும் போதும், எதிர் உள்ளவர் மனநிலை புரியாமல் நடந்துகொண்டால், வாழ்வில் ஒரு பெரும் பின்னடைவு ஏற்படலாம். இதுவரை வாழ்ந்த வாழ்வின் வசதிகள் போவது மட்டுமல்லாமல் இனி இயங்குவதே கடினம் எனும் திகைப்பும் தடுமாற்றமும் தோன்றலாம். அந்தக் கட்டத்தில் பொதுவாக மனம் தப்பிக்கவும் தற்காத்துக்கொள்ளவும் “நான் செய்த பாவம்” அல்லது, “அன்று இழைத்த தீமைக்கு தண்டனை” என்றும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும். இது காலங்காலமாய்க் கலாசார ரீதியாய்க் கற்பிக்கப்பட்ட ஒன்று என்பதால் நம் தோல்வி களுக்கும் குறைகளுக்கும் ஒரு சுலபமான சௌகர்யமான காரணமாக மனம் ஏற்றுக் கொள்ளும்.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 12

பாவத்துக்குப் பரிகாரம் என்பது பாதிக்கப்பட்ட வருக்கு ஒரு தற்காலிக ஆறுதல் மட்டுமே. வெறும் சில சடங்குகளால் செய்த தவறு மாறிவிடப் போவதில்லை. ஆனால் பிராயச்சித்தம் என்பதைக் கொஞ்சம் தெளிவோடு அணுகினால், ஒருவருக்குச் செய்த பிழையை மாற்ற முடியா விட்டாலும் அதன் விளைவுகளின் தீவிரத்தைச் சற்றுக் குறைக்கலாம். அப்படியும் குற்ற உணர்வு தொடர்ந்தால் நம் வாழ்க்கையையும் ஆய்ந்து பார்க்க வேண்டும். ஏற்கெனவே செய்து விட்ட அந்தப் `பாவத்துக்குப்’ பின்னும் வாழ்வில் நிம்மதி பார்த்திருப்போம், மகிழ்ச்சி கொண்டாடி யிருப்போம், வெற்றி அனுபவித்திருப்போம். உண்மையில் பெருந்தவறு செய்திருந்தால் வாழ்வில் என்றுமே அமைதி இருந்திருக்காது. மிகையான குற்ற உணர்வு வாழ்வில் தோல்வியும் சோகமும் வரும் போதுதான் தலை தூக்கும், நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவதைக் கெடுக்கும்.

முடக்கத்தின் உண்மையான நெருக்கடியும், மனம் பொய்யாகச் சொல்லிக்கொள்ளும் சமாதானத்தால் வரும் குற்ற உணர்வும் மிகும்போது அடுத்தவர் கண் பார்த்து அதற்கேற்ப எதிர்வினை ஆற்றுவது கடினம். மனம் குழப்பத்திலோ வருத்தத்திலோ இருக்கையில் இன்னும் சில தவறுகளும் அதிக வருத்தம் கூட்டும். இருக்கும் பிரச்னைகளை மேலும் சிக்கலாக்காமல் இருக்க நம் எண்ணங்களையும் செயல்களையும் பரிசீலிக்கவும் முறைப்படுத்திக் கொள்ளவும் பழக வேண்டும். முக்கியமாக உடல் சோர்வு, பசி இருக்கும் நேரத்திலும் தனிமையின் சோகம், கோபம் மேலோங்கும் நேரத்திலும் முடிவெடுப்பது சரியாக அமையாது. எந்த முடிவையும் நாம் சரியான கண்ணோட்டத்துடன் எடுக்கிறோமா என்று பரிசீலிக்க வேண்டும். அரைகுறை தகவல்கள், எப்போதுமே அப்படித்தான் எனும் முன்முடிவு, ஒரு நிகழ்வை மிகையாகவோ அலட்சியமாகவோ கருதுவது, எதிலும் சரி-தவறு மீறி வேறு கோணமும் இருக்கலாம் என்பதை மறுப்பது ஆகியவை நாம் பொதுவாகச் செய்யும், நீக்க வேண்டிய பிழைகள். அடுத்து வாழ்வை நகர்த்த நம் சுயகணிப்பின் ஒவ்வாத விடைகளையும் ஏற்க கற்க வேண்டும்.

முடக்கத்தின் முடிவிலும் தொற்று முடிந்து விடப்போவதில்லை. பொருளாதார நெருக்கடி அனைத்து வர்க்கத்தினரையும் தாக்கப் போகிறது. செய்திகளும் வதந்திகளும் கலந்து குழப்பப் போகின்றன. இதைமீறி வாழ்க்கை இயங்கத்தான் போகிறது. அணுகுமுறைகளை மாற்றிக்கொள்வதே வாழ்க்கைக்கு உதவும். வசதி குறைகிறது என்பதைச் செலவு குறைகிறது என்பதுபோல் பார்க்க வேண்டும்.

முகக்கவசம் முழுதாய் முகம் காட்டாதபோதும் கண்களைப் பார்த்து மனநிலை உணர்வதுபோல், மொத்த வாழ்க்கையை, தொலைவிலிருக்கும் வருங்காலத்தை மீறி, இன்று, இப்போது என்று வாழப் பழக வேண்டும்.

“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்.”

- நிறைந்தது.