Published:Updated:

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 2

மனதினிலே தோன்றும் மயக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மனதினிலே தோன்றும் மயக்கங்கள்

டாக்டர் ருத்ரன்

ஆரம்பத்தில் எல்லாரிடமும் ஓர் அச்சம் இருந்தது, கொஞ்சம் பதற்றம் என்பதிலிருந்து மிரட்சிவரை அவரவர் இயல்புக்கேற்ப பயந்தார்கள். ஊரடங்கில் வீட்டுள் முடக்கம் வந்த காலத்தில் மனநிலையில் மெள்ள மாற்றங்கள் உருவாயின.

தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே முகக்கவசம் தேவை என்ற நினைப்பு, காவல்துறையினரிடமிருந்து தப்பிக்கவே முகக்கவசம் என்று செயல்படும் ஓர் அசிரத்தையில் பலரைக் கொண்டு சேர்த்திருக்கிறது. மிரள வைக்கும் எதுவுமே கொஞ்ச காலத்தில் அந்த அளவு மனத்துள் அச்சம் வரவழைக்காது. மனம் எல்லாவிதச் சூழலுக்கும் ஏற்ப தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும்.

வீட்டுள் முடக்கப்பட்ட இந்தக் காலத்தில் பலருக்கும் ஒரு புது அனுபவம் நேர்ந்திருக்கிறது. இன்று என்ன கிழமை, தேதி, இப்போது என்ன நேரம் என்பது குறித்து லேசான குழப்பம் வந்திருக்கிறது. இதுவும் மனத்தின் ஒரு செயல்பாடுதான்.

நாம் பொதுவாகவே நாள்களை, கிழமைகளை எல்லாம் வேறொன்றுடன் இணைத்தே நினைவில் நிறுவிக்கொள்கிறோம். இன்று சனிக்கிழமை இந்த விரதம், இன்று ஞாயிறு இந்தச் சமையல், இன்று பத்தாம் தேதி அந்த வேலையை முடிக்கும் நாள், இன்று வேலையில் இந்த வாரக் கெடுவுக்கான நாள் என்பதிலிருந்து தேதிகள், கிழமைகள் எல்லாமும் நமக்குள் நம்மையறியாமல் ஒரு குறிப்புடன் அமைந்திருக்கின்றன. இது ஒரு மறைமுகச் சுட்டி. நாடகத்தில் வசனம் மறந்தால் பின்னாலிருந்து ஒற்றை வார்த்தையில் ஞாபகப்படுத்தும் உத்தி போன்றது, அலாரம் அடிக்காமலேயே லேசான வெளிச்சம் சன்னல் வழி வந்து விழிக்கும் நேரத்தை உணர்த்துவது போன்றது. இப்படிப்பட்ட நினைவுச்சுட்டிகள் (cue) தான் நமக்கு காலண்டர் பார்க்காமலேயே தேதிகளை, கிழமைகளை நினைவுக்குக் கொண்டு வரும். இந்த முடக்கத்தில் அவற்றுக்கான அவசியங்கள் குறைந்துவிட்டன சிலருக்கு இல்லாமலும் போய்விட்டன.

டாக்டர் ருத்ரன்
டாக்டர் ருத்ரன்

வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவரானாலும், வேலை தற்சமயம் இல்லாமல் வீட்டிலேயே முடங்கியவரானாலும் அவர்களது தினசரி பழக்க வழக்கங்கள் மாறிவிட்டன. காலையில் கிளம்பி வேலைக்குப் போகும் அவசரம் இல்லை, அப்படியே அதே பத்து மணிக்கு வீட்டிலிருந்தே தொலைபேசியிலோ கணினியிலோ வேலை செய்வதாய் இருந்தாலும், குளித்து, உடை மாற்றி, சாப்பிட்டு வேலையை ஆரம்பிக்கும் சுயநியதிகளும் இப்போது இல்லை. ஒரு வார விடுமுறையின்போது செய்யும் அவசர வேலையில்கூட வேலைதான் மனத்தில் முன்வந்து நிற்கும். அப்போது எந்த உடை அணிந்திருக்கிறோம் என்பது தோன்றாது, அது அந்த ஒரு நாளின் நிர்பந்தம் என்பது மனதுக்குத் தெரியும். ஆனால் இந்த முடக்கத்தில், வீட்டிலிருக்கும்போது அணியும் சௌகர்யமான உடையுடனேயே வேலை பார்க்கும்போது, செய்யும் வேலை அதுவேதான் என்றாலும் அலுவலகத்துக்காகத் தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லாதபோது, ஒரு மெத்தனம் வந்துவிடும். இது வேலை நாளா விடுமுறை நாளா என்பது நாள்பட நாள்பட மனத்துள் வேறுபாடின்றி மாறி விடும்.

காலை போவதும் மாலை வருவதுமாக வகுக்கப்பட்ட நாள், கடிகாரத்தில் ஒரே மாதிரி ஓடுவதுபோல் ஆகிவிடும். அவசரமாய் எழுந்து வேலைக்குப் போகத் தேவையில்லை என்பதால் உறக்கம் கலைந்தாலும் இன்னும் கொஞ்சம் படுக்கலாம் என்பதும், இரவில் இன்னும் கொஞ்ச நேரம் படம் பார்த்துவிட்டே தூங்கலாமே, காலை ஒன்றும் அவசரம் இல்லையே என்றும் மனத்தில் தோன்ற ஆரம்பித்துவிடும். இவைதான் மெதுவாக இன்று என்ன கிழமையாக இருந்தால் என்ன, என்ன தேதி என்றால் என்ன எல்லா நாளும் இப்படித்தானே என்று மனம் தன்னுள் முடிவெடுத்துக்கொள்ளும்.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 2

இதன் இன்னொரு வீச்சில், பொழுது போக கணினியிலோ செல்பேசியிலோ விளையாடுவது, திரைப்படம் பார்ப்பது எனும் காரியங்களில் ஈடுபட்டால் நேரம் போவதும் தெரியாது. இரவு தூங்குவதற்கு முதலில் நேரமாகும், தூக்கம் தாமதமானால் விழிப்பும் தாமதமாகும். இதுவே ஒரு தொடர்நிகழ்வாகச் சுழல ஆரம்பிக்கும்.

வீட்டுக்குள்ளேயே பெரும்பாலான நேரம் கழிவதால், உடலுக்கும் சூரிய ஒளி படும் நேரம் குறையும். இயற்கை வெளிச்சம் படாமல் வீட்டில் எப்போதும் அதே விளக்கொளியாய் இருந்தால் அதுவும் உடலின் நேர அட்டவணையை (circadian rhythm) மாற்றும். இதுவும் தூக்கத்தை பாதிக்கும்.

இது தவிர இப்போது நீல ஒளி தூக்கத்தை பாதிக்கும் என்பதையும் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த நீல ஒளி தூங்கும்போது உங்கள் படுக்கையறையின் நீல பல்பு ஒளி அல்ல, கிட்டத்தட்ட நாள் முழுக்கப் பார்க்கும் தொலைக்காட்சி, கணினித் திரை, செல்பேசி ஆகியவற்றின் நீல அலைவரிசை ஒளி! ஊரடங்கின் ஆரம்பத்தில் ஒரு மறைமுக விடுமுறை மனநிலையில் படம் பார்ப்பது, கணினி/செல்பேசியில் விளையாட்டுகளில் ஈடுபடுவது என்று ஆரம்பித்த ஆயாசத்தின் பொழுது போக்கு, தினசரியின் பல மணி நேரத்தை ஆக்கிரமிக்கும் போது, கண்கள் இந்த நீல அலைவரிசை ஒளியுடன் நீண்ட நேரம் இருக்கின்றன. இது நம்முள் இருக்கும் மெலட்டோனின் எனும் உறக்கத்துக்கு அவசியமான ஒன்றை பாதிப்பதால் வரும் விளைவு என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 2

உறக்கம் கெட்டால் என்ன? தாமதமாய்த் தூங்கித் தாமதமாய் எழுந்தாலும் வேலை நடக்கிறதே என்றுதான் மனம் தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்ளும். ஆனால் குறிப்பிட்ட அளவு தூக்கம் என்பது மட்டுமல்ல, குறித்த நேரத்தில் தூங்குவதும்தான் மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியமானது. உறக்கத்தில் மாற்றங்கள் வந்தால் போகப்போக கவனக்குறைவு, எரிச்சல் மட்டுமல்ல; மனச்சோர்வும் வரும்.

மனச்சோர்வு இக்காலகட்டத்தில் இருக்கும் சமூகப் பொருளாதார இறுக்கத்தில் பலருக்கும் வர வாய்ப்புள்ளது. மனச்சோர்வின் முதல் அறிகுறியாய் தூக்கம் தடுமாறுவதை எடுத்துக்கொள்ளலாம். உறக்கத்தைக் கெடுக்கும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது இதற்கு உதவும்.

நம் நாள்களுக்கு ஓர் அட்டவணை அவசியம். மதிய உணவுக்கு முன் செய்பவை, பின் செய்பவை என்று நம் சாதாரண வேலைகளில்கூட ஓர் அட்டவணையை உருவாக்கிக்கொள்வது உதவும்.

இது இந்த இக்கட்டான நேரத்தில் நம்முள் ஒரு சுய கட்டுப்பாட்டைக் கொண்டு வரும். இது தினசரியில் ஒரு நிதானத்தையும் கொண்டு வரும். தூக்கமும் அமைதியும் தான் மனநிலையில் சமநிலை வருவதற்கான அடிப்படை என்பதால் இவற்றின் மீதுதான் நாம் முதலிலும் முழுவதுமாகவும் கவனம் செலுத்த வேண்டும்.

(மயக்கம் தெளிவோம்)