Published:Updated:

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 3

மனதினிலே தோன்றும் மயக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மனதினிலே தோன்றும் மயக்கங்கள்

டாக்டர் ருத்ரன்

சேமிப்பு, சேகரிப்பு, பதுக்கல் என்பவையெல்லாம் நமக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தைகளானாலும், இந்த ஊர்முடக்க நேரத்தில் இவற்றை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகிறோம்.

எல்லாராலும் சேமிக்க இயலும். ஆனால் பல்வேறு காரணங்களால் சேமிப்பு எல் லார்க்கும் சாத்தியமில்லாமல் போய் விட்டது. சேகரிப்பு அப்படியில்லை. சேமிப்பு வாழ்க்கைக்கு உதவும், சேகரிப்பு ஆசைக்குத் தீனி போடும்.

டாக்டர் ருத்ரன்
டாக்டர் ருத்ரன்

மனம் தன் ஆசைகளை நிர்பந்தமாக்கிக் கொள்ளும் ஒரு நிலைதான் சேகரிப்பு. இது கட்டுக்குள் இருக்கும்வரை பெரிய அளவில் பிரச்னை இருக்காது. தபால் தலை, பழைய நாணயங்கள் போன்ற சேகரிப்புகள் பொழுது போக்காக ஆரம்பமாகி, சிலருக்குப் பின்னாளில் அவற்றின் மூலம் பணவரவும் ஏற்படுவதுண்டு. சேகரிப்பு ஆசையின் அடிப்படையில் என்றால், பதுக்கல், பேராசை அல்லது பயத்தின் அடிப்படையில் வரும் மனக்கிலேசம்.

ஊரடங்கு அறிவிப்பு வந்தவுடன், கடைகள் இருக்காது என்று ஓடிச்சென்று பொருள்கள் வாங்கி வைத்துக்கொள்ள மக்கள் துடித்தது இயல்பான ஒன்றுதான். தேவையானவற்றை வாங்கி வைத்துக்கொள்வது ஒருவித சேகரிப்புதான். அது மிகை நிலையாகி, அத்தியாவசியமான பொருள்களையும் அளவுக்கு மீறி வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டவர்கள் பலர். இது ஒருவிதப் பதுக்கல்தான். இப்படிப்பட்ட பதுக்கல், பிறருக்குக் கிடைக்கக் கூடாது, அவர்கள் தேவைக்குத் தேடும்போது லாபம் பார்க்கலாம் எனும் குயுக்தி வியாபார மனநிலை அல்ல. இது நாளைக்குக் கிடைக்காமல் போய்விடுமோ எனும் ஒருவித அச்சம். அது தவிரவும், இந்த அரசு பத்து நாள் என்று சொன்னால் நம்ப முடியாது, இருபது நாள்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் எனும் எச்சரிக்கை உணர்வுதான் இதன் அடிப்படை.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 3

பலருக்கும் சேகரிக்கும் பழக்கம் உண்டு. அது ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரை பிரச்னை இல்லை. சேகரிப்பு மனத்தின் ஒரு நிர்பந்தமாக ஆகும்போது அது சிக்கல். புத்தகங்கள் வாங்கிச் சேகரிக்கும் வழக்கம் உள்ளவர்களிடம் இதைப் பார்க்கலாம். இப்போதே படிக்கப் போவதில்லை என்றாலும், எப்போதுமே அந்த விஷயம் பற்றிய புத்தகம் தேவைப்படப்போவதில்லை என்றாலும் புத்தகங்களைப் பார்த்தவுடன் வாங்கி வைத்துக் கொள்பவர்கள் உண்டு (என்னைப்போல்). அவர்கள் வீட்டில் படிக்காத புத்தகங்கள் சில ஆண்டுகள்கூட அடுக்குகளில் கிடக்கும். இது பெரும்பாலும் அந்த நேரத்தின் கணத்தூண்டல் (impulse) மட்டுமே. சிலருக்கு ஏற்படும் கணத்தூண்டல் அந்த விநாடிக்குள் மறையாமல், மனநிர்பந்தமாக (compulsion) மாறும். அந்த நேரம் அதைச் செய்யாது விட்டால் உள்ளே ஒரு பரபரப்பு வரும், வேறெதுவும் செய்ய மனம் ஒன்றாது, ஒப்பாது. இது மனத்தின் பாதிப்பு. இப்படி மனநிர்பந்தங்கள் உள்ள சிலருக்கு இது ஒரு மனநோயாகவும் மாறும்.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள்
மனதினிலே தோன்றும் மயக்கங்கள்

எண்ணச் சுழற்சி நோய் என்று தமிழில் அழைக்கப்படும் (obsessive compulsive disorder) இந்நோயில், சிலர் அடிக்கடி கைகளைக் கழுவவதை, திரும்பத்திரும்ப ஒரே காரியத்தைச் செய்வதை – மின்விசையை நான்கைந்து முறை அழுத்துவதை, திரும்பத்திரும்ப அதிக நேரம் கைகழுவுவதைப் பார்க்கலாம். இப்படிச் செய்யாவிட்டால் அவர்களால் அடுத்த வேலையில் ஈடுபட முடியாது. இது தீவிரமாகும்போது இதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரமும் கூடும். ஆழ்மனத்தில் ஏதோ ஓர் அச்சம், குற்ற உணர்வு அல்லது அருவருப்புதான் இதற்கு மூல காரணம் என்று சில மனவியல் கோட்பாடுகள் சொல்கின்றன. “அரேபிய நாட்டின் அற்புதத் தைலங்களின் நறுமணம்கூட இந்தக் கைகளின் குற்ற வாடையைப் போக்கவில்லை” என்று கூறியவாறு கொலையில் பங்கேற்ற கதைநாயகி கைகழுவிக் கொண்டிருக்கும் வர்ணனை ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகத்தில் வரும். இப்படிப்பட்ட நிலை வந்தால் அதற்கு அவசியம் மனநல மருத்துவ சிகிச்சை தேவைப்படும். சில மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருக்கும், சில பயிற்சிகள் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும்.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 3

இப்போது கொரோனா காலத்தில் மருத்துவத்துறை எல்லாரையும் அடிக்கடி கைகழுவ அறிவுறுத்துகிறது. தொற்றிலிருந்து நம்மையும் பிறரையும் பாதுகாக்க இது அவசியமும் கூட. இப்படி வெளியே போய்வந்தால், எதையாவது வாங்கிக் கொண்டால் உடனே கைகழுவுவது என்பது பின்னாளில் OCD நோயாகுமோ என்று சிலர் கவலைப்படுவதும் நடக்கிறது. அப்படி ஆகாது. இப்போது நாம் கை கழுவுவது நாம் அறிவுபூர்வமாகவும் தன்னிச்சையாகவும் செய்வது. எப்போது வேண்டுமானாலும் இதை நாம் குறைக்கவும் நிறுத்தவும் முடியும். இது ஒரு நல்ல பழக்கம் என்றாலும், நம் கட்டுப்பாட்டிற்கு அடங்கிய ஒரு செயல்பாடு. இதில் மனநிர்பந்தம் இல்லை என்பதால் இது நோயாகிவிடாது. OCD என்பது, தங்கள் கட்டுப்பாட்டை மீறிய ஓர் அனிச்சை நிர்பந்தம்.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 3

ஏற்கெனவே இவ்வகை நோய் உள்ளவர்கள் ஊர்முடக்கத்தில் அடிக்கடி கைகழுவுவது இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை. நோயின் தாக்கம் இந்தச் சூழலால் கூடப்போவ துமில்லை. அவர்களுக்கு அந்த நோயுடன் கூடுதல் பதற்றம், மனச்சோர்வு ஆகியவை இருந்தால் அவைதான் இன்னும் அதிகரிக்கும். இவையும் உடனே எதிர்கொள்ள வேண்டிய மனநல மருத்துவ அவசரநிலை அல்ல. OCD பிறரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளும் பழக்கமல்ல; அது ஒரு நோய். கொரோனா காலத்தில் சுயமாய் ஏற்றுக் கொண்டுள்ள பாதுகாப் புக்கான பழக்கம் பின்னாளில் தொடர்ந்தாலும் அது நம் பொது சுகாதாரத்துக்கும் உதவும்.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 3

மிகைச் சேகரிப்பு என்பது சேமிப்பை அழிக்கும் என்பதால் அது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். இப்போது நமக்குக் கிடைத்துள்ள அவகாசத்தில் நம் காரியங்களை நாமே அலசி ஆய்ந்து சில பழக்கங்களை மாற்றிக் கொள்ளலாம், இது எல்லாருக்கும் முடியும்.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 3

இது தவிரவும் கொரோனா காலத்தில் வேறு சில தாக்கங்கள் மனத்திலும், வாழ்முறையிலும் சில மாற்றங்களை உருவாக்கும். அவற்றையும் அறிந்துகொள்வது முக்கியம். அதில் ஒன்று பிறரைப் பார்த்து நம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வது. இதில் நன்மைகள் உள்ளது போலவே கெடுதல் களும் உண்டு.

(மயக்கம் தெளிவோம்)