
டாக்டர் ருத்ரன்
ஆரம்பத்திலிருந்த அச்சம் மக்களிடையே குறைந்துவிட்டது. முகக்கவசம் தலைக்கவசம் போல சுயப் பாதுகாப்பிற்காக என்பதைவிடவும் தெருமுனைக் காவல்துறைக்காக என்பதுபோல் ஆகிவிட்டது.
சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைந்த நம் பொது மனநிலையில் கைகளில் மருந்து தெளித்துக்கொள்வதும் முகக்கவசம் அணிவதும் இன்னொரு சடங்காக மாறிவிட்டது. ஆனாலும் சிலர் இந்நோய்த் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து எச்சரிக்கை உணர்வோடு இருக்கிறார்கள். தங்களுக்கும், தங்களுக்கு நெருக்கமானவர்க்கும் தொற்று வந்து விடக்கூடாது என்பதில் அதிக கவனத்துடன் இருக்கிறார்கள். இந்த அளவுக்கு அக்கறையும் சுயக்கட்டுப்பாடும் இருப்பது எல்லார்க்கும் நல்லது. சிலருக்கு இதில் ஒரு தீவிரத்தன்மை வந்து விடுகிறது. எச்சரிக்கை உணர்வு எல்லாவற்றையும் கண்டு அஞ்சும் நிலைமையாய் மாறுகிறது, ஒரு கட்டத்தில் எல்லாவற்றிலும் ஒரு சந்தேகமும் வந்துவிடுகிறது.

எச்சரிக்கை உணர்வு மனித மனத்தின் இயல்பான தற்காப்பு. ஆதிகாலத்திலிருந்தே மக்கள் இயற்கையிலிருந்தும் விலங்கு களிடமிருந்தும் தப்பி வாழ உதவியிருக்கிறது. புரியாத ஒன்று வரும்போதும் நிகழும்போதும் கற்றுக்கொண்ட உணர்வுதான் மனதின் அபாய அறிவிப்பு. தான் நேரடியாய்த் தெரிந்து கொள்ளாதபோதும் பெரும்பான்மை நம்பும் விஷயங்களைப் பொறுத்து முன்னர் பயந்தவை, அறிவியலும் தகவல் தொடர்பும் முன்னேறிய பின் பயமுறுத்துவதில்லை. ஒவ்வொரு புதிரும் தெரியாதவரை மட்டுமே அச்சம் தரும்.
தொடர்ந்து ஊடகங்களில் அரசும் மருத்துவத்துறையும் மேற்கொண்ட பிரசாரத்தின் விளைவாக மக்கள் மத்தியில் கொரோனா எளிதில் தொற்றக் கூடிய நோய் என்பது நன்கு பதிந்திருக்கிறது. ஆனாலும், இது குறித்துப் பெரிய அளவில் அச்சம் பரவவில்லை. இதற்கு பல வாரங்களாய் அனுபவித்த ஊர்முடக்கமும் ஒரு காரணம். எச்சரிக்கை உணர்வும், கவனமான அக்கறையும் இப்போது வெறும் சமுதாயக் கடமையாக, நிர்பந்தமாக மாறிவிட்டன. உயிரே போய்விடக்கூடிய ஒரு தொற்றுநோய் என்ற உண்மை பின்தள்ளப்பட்டு, வாழ்வை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது எப்படி என்பதிலேயே கவனம் குவிந்திருக்கிறது. எதிர்காலத்தைத் திட்டமிடுவதும் வாழ்வில் தடுமாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது எனும் ஓர் எச்சரிக்கை உணர்வுதான்.
Also Read
ஆபத்திலிருந்து தப்பிக்க உதவும் எச்சரிக்கை உணர்வினால், அப்படி வந்தால் இப்படிச் செய்யலாம் என்பதுபோல கற்பனைகளையும் மனம் உருவாக்கிக்கொள்ளும். இது நம் ஆசைகளுக்கேற்ப சில நேரங்களில் மிகையாக மாறி, சாத்தியமில்லாததையெல்லாம் யோசித்துப் பார்க்கத் தோன்றும். இதனால் திட்டமிடல் என்பது வெறும் பகல்கனவாய் மாறி, சிந்தனையையும் செயலையும் பழுதாக்கிவிடும்.

சிலருக்கு எச்சரிக்கை உணர்வு மிகையாகி அச்சமாவது போல், வேறு சிலருக்கு இதனால் எல்லாவற்றையும் சந்தேகத்தோடு அணுகும் மனநிலை வந்துவிடும். தன்னம்பிக்கை குறைவாக இருப்பவர்க்கும், தனக்குப் போதிய திறமை இல்லை என்பதை உணர்ந்தவர்களுக்கும் இப்படி எல்லாவற்றையும் சந்தேகமாகப் பார்ப்பது ஒரு பழக்கமாகிவிடும். இது எச்சரிக்கை உணர்வை மீறி யதேச்சையாய்க்கூட ஏதும் தவறாகி விடக்கூடாது எனும் அச்சத்தின் வெளிப்பாடு. இதிலிருந்து மீள, அவர்கள் தம்மைப் பற்றிச் சரியாகக் கணிப்பது அவசியம். இதெல்லாம் என்னால் முடியாது என்றால் வேறென்ன முடியும் என்று யோசிப்பதே இவ்வகை மனக்குழப்பத்தில் உதவும். மாற்று வழிகளும், அவசரத்தில் மேற்கொள்ள வேண்டிய உத்திகளும் தெரிந்தால் மனத்தில் அச்சம் குறையும், பயம் விளைவிக்கும் சந்தேகமும் தெளியும்.

மனநோய்களில் அதீத சந்தேகம் என்பதும் உண்டு. இதில் பிறழ் நம்பிக்கைகளினால், நெருக்கமானவர்கள், அந்நியர்கள் எல்லாரும் தனக்கெதிராய்ச் சதி செய்வதுபோல் ஒரு பிரமை உருவாகி வளரும். தீவிர நோயான மனச்சிதைவில் இது ஒரு வகை. அவர்களையும் அவர்களது சூழலையும் அறியாதவர்கள், ‘ஒருவேளை அப்படியும் இருக்குமோ’ என்று எண்ணும் அளவிற்குத் தம் பிரமைகளை நோயில் பாதிக்கப்பட்டவர்கள் விவரிப்பார்கள். இந்நோய்க்கு முறையான மருத்துவத்தின் மூலம் சிறந்த தீர்வுகளைப் பார்க்கலாம்.
எச்சரிக்கை உணர்வு மிகையாகி, அச்சமாகி, எதிர்வரும் எல்லாத் தகவல்களையும் சந்தேகப்படும் இயல்பையும் சிலரிடம் பார்க்கலாம், இது நோய் அல்ல. அதுவரை அவர்களுக்குச் சொல்லப்பட்ட ‘உண்மைகள்’ சிலகாலம் கழிந்ததும் பொய் என்று அம்பலமாவது தொடர்ந்து நடந்தால், எந்தச் செய்தியையும் சந்தேகத்தோடு அணுகுவது ஒரு வழக்கமாகி விடும். தொற்று எண்ணிக்கை இன்று குறைவென்றோ அதிகமென்றோ வரும் அறிவிப்புகளைக்கூட மனம் நம்ப மறுக்கும். எல்லாமும் சந்தேகத்துக்கிடமாய் ஆகிவிட்டால், எதிலும் நம்பிக்கை வராது. இந்த நம்பிக்கையின்மை மனத்துள் ஒரு விரக்தி நிலையை உருவாக்கும்.

இதன் விளைவாய் வரும் பாதுகாப்பின்மை மனதில் ஒரு தளர்வை உண்டாக்கும். இது ஒரு மிதமான மனச்சோர்வை உருவாக்கி, ஒருவரது சிந்தனையையும் செயல்திறனையும் மழுங்கடிக்கும். முறையான திட்டமிடல் தடுமாறுவதால் ஏற்படும் தவறுகள் விரக்தியை இன்னும் கூடுதலாக்கிவிடும். தான் செய்வது சரியா என்று தன்னைத் தானே நம்பாத அளவுக்குச் சந்தேக உணர்வு இவர்களை ஆக்கிரமிக்கும், “இதற்குச் சந்தர்ப்பம், சூழ்நிலை தாய் தந்தையாகும்.”
சோர்வும் விரக்தியும் அதிகமாகும்போது, எச்சரிக்கை உணர்வு மங்கிவிடும், நிஜமான ஆபத்தையும் அசட்டை செய்யும் அளவிற்கு வெறுமை கூடிவிடும்.
சிலர் இம்மாதிரி மனநிலையில் பொய்களையும் நம்ப ஆரம்பிப்பார்கள். வதந்திகளுக்கும் புரளிகளுக்கும் இந்நிலையே ஊற்றுக்கண்ணாக அமையும். அதைப் பின்னொட்டி ஒவ்வொரு செயலும் தவறுகளைக் கூட்டிக்கொண்டே போகும்.
இதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள, எச்சரிக்கை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது சந்தேகப்படுவதால் வராது, நிதானமாய் எதையும் அணுகும் பழக்கத்தில் தான் வரும். எல்லாவற்றையும் ஓர் இக்கட்டான சூழலில் நிதானமாய் அணுகுவது என்பது எளிதல்ல. ஆனால், ஒவ்வொரு நாளும் இன்று நடந்த தவறுகளை எவ்விதச் சார்பு நிலையும் இல்லாமல் ஆராய்ந்தால் பல கேள்விகளுக்கு நமக்கே விடைகள் தெரியவரும்.
வரும் தகவல்களில் எவை மிகையாகச் சொல்லப்படுபவை, உள்நோக்கத்தோடு பரிமாறப்படுபவை என்பதைக் கணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கும் நிதானமாகப் பரிசீலிக்கும் பழக்கம் வரவேண்டும். அப்போது இயல்பாய் எல்லாருக்குமுள்ள எச்சரிக்கை உணர்வு, ஆபத்தை முன்கூட்டி உணரவைத்து நாம் சரியான தற்காப்பு நடவடிக்கை எடுத்துக்கொள்ள உதவும்.
(மயக்கம் தெளிவோம்)