Published:Updated:

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 6

மனதினிலே தோன்றும் மயக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மனதினிலே தோன்றும் மயக்கங்கள்

டாக்டர் ருத்ரன்

உண்மைகளைவிடவும் பொய்கள் கவர்ச்சி யானவை என்பதாலேயே வதந்திகள் அதிகம் பரவுகின்றன. வதந்திகள் தெரிந்தே சொல்லும் பொய்கள், அல்லது, அறியாமையினால் நம்பிப் பரப்பும் பொய்கள். நமக்குப் பிடித்த வகையில் அமைந்த, பொய்களும் குழப்பங்களை உருவாக்கி சிந்தனையை மழுங்கடிக்கும்.

வதந்திகள் நம்மைச் சுற்றி நிறைய உலவுகின்றன, நம்மை பாதிக்கின்றன, ஆனாலும் சிலர் அவற்றை நம்பும்போது, “அதுல பாதி உண்மை இருக்கு” என்றும் சொல்வார்கள். அப்படிச் சொல்லியே பொய்யையும் பரப்புவார்கள்.

உண்மைகளில் பாதி உண்மை என்று எதுவும் கிடையாது. பொய்கள், வதந்திகள், புரளிகள், வம்புப்பேச்சு ஆகியவை உண்மைபோல் தோற்றம் கொண்டிருப்பதால்தான் அவற்றை நம் மனம் எளிதில் ஏற்றுக்கொள்கிறது. நமக்குப் பிடித்தமானவற்றை, நம்ப விரும்புபவற்றை, மட்டுமல்ல நாம் பயப்படுபவற்றையும் மனம் விரைவில் ஏற்றுக்கொள்கிறது.

வெட்டியாய் ஆரம்பிக்கும் வம்புப்பேச்சுகூட மெள்ள வளர்ந்து ஒரு புரளியாக மாறும். தனிப்பட்ட நபர்கள் குறித்தே வம்புப்பேச்சு சுழல்வதால் அது சமூகத்தை அதிக அளவில் பாதிக்காது. புரளிகளாக மாறும் வதந்திகள், மக்களிடையே ஒரு பீதியை, வெறியை மூட்டி கண்மூடித் தனமான பின்பற்று தலை உருவாக்கக் கூடும் என்பதால் இவை ஆபத்தானவை.

நமக்கு ஆசை மூட்ட, நம்பிக்கையூட்ட, கோபத்தைக் கூட்ட, பீதி ஏற்படுத்த என்று பலவிதங்களில் வதந்திகளும் புரளிகளும் பரப்பப்படும். இவை மனங்களில் செய்திபோல், உண்மைபோல் பதிந்து விரைவில் அடுத்தவர்களுக்கும் தொற்றும். வதந்தி என்று தெரியாமலேயே அதைப் பலர் பயனுள்ள தகவல் போலப் பரப்புவார்கள். சிலர் பரபரப்பின் வெளிச்சம் தம்மீது படுவதற்காகப் பகிர்வார்கள்; வெகு சிலர் சொந்த ஆதாயத்துக்காக வதந்திகளைப் பரப்புவார்கள். உண்மையான செய்திகளைவிடவும் வதந்திகள் வேகமாகப் பரவும் சக்தி வாய்ந்தவை என்பதால் அவை பிரசாரத்துக்காகவும், மக்களிடையே பிரிவினை உருவாக்கவும், வெறி ஏற்படுத்தவும் பயன் படுத்தப்படும். சமூகச் சலனம் தனிமனித மனத்துள்ளும் தாக்கம் ஏற்படுத்தும்.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 6

எந்தக் காரணத்துக்காகப் பரப்பப்பட்டாலும் வதந்திகள் நம் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டும். கோபம், அச்சம் ஆகியவை மனத்தில் உருவானால் நிதானம் இருக்காது.

வதந்திகளைப் பற்றி 1947-ல் மேற்கொண்ட ஓர் ஆய்வில் காலப்போக்கில் வதந்திகள் வீரியம் இழக்கும் என்று சொல்லப்பட்டாலும், நாட்பட நாட்பட அவற்றை அவரவர் கொஞ்சம் கூட்டிக் குறைத்து, மாற்றி, கடைசியில் மிகப்பெரிய ஒன்றாய் உருவாக்குவதை இப்போதெல்லாம் பார்க்கலாம். இன்றைய இணையப் பரவலின் வேகத்தால், நம் எண்ணத்தை மாற்றும் குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்படும் வதந்தி, அதன் முடிவுக்கு வருமுன் சமூகக்கேடு நிகழ்ந்து விடும். வதந்திகள் நம் உணர்ச்சிகளோடு தொடர் புடையவை; உணர்ச்சிகள் அனுபவங் களோடும் சமூகக் கல்வியோடும் தொடர்பு டையவை, இதற்கும் படிப்பறிவுக்கும் சம்பந்தம் கிடையாது.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 6

மனித மனம் எப்போதுமே புதிர்களுக்கு விடை காணத் துடிக்கும். உண்மையைத் தேடிக் கண்டுபிடிப்பதன் சிரமத்தை விரும்பாத மனம், எளிதாக விரும்பக்கூடிய பொய்யை உடனே தேர்ந்தெடுக்கும். அது பொய் என்று தெரிந்தாலும் ஒப்புக்கொள்ள மனம் தயங்கும். ஆரம்பத்தில் வதந்தியைச் செய்தியாக நம்பிக் கொந்தளிக்கும் மனது, தான் சார்ந்த சமூகக் குழுவுக்கேற்ப (சாதி, கட்சி, துறை) பொய் என்று தெரிந்தாலும் அதற்கு ஆதரவாகவே பேசும், நடந்துகொள்ளும். தாம் நம்பியது பொய் என்று ஏற்றுக்கொள்பவர்களில் கூட, அதைப் பகிரங்கமாகச் சொல்பவர்கள் மிகவும் குறைவு. இது ஒரு சுயமதிப்பீட்டின் தற்காப்பு, குழு மனப்பான்மை.

நாம் சார்ந்திருக்கும் கொள்கை/நம்பிக்கை/குழு ஆகியவற்றுக்கு ஆதரவான வதந்திகளையே மனம் ஆதரிக்கும், தனக்கே ஒரு சிக்கல் உருவாக்கக்கூடிய பொய் என்றாலும் மனம் அதை உடனே நிராகரிக்காது. அதன் பரவலையும் தடுக்க முயலாது. மனித மனம் எப்போதுமே தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே விழையும் என்பதால், ஒப்புதல் தராவிட்டாலும், தான் சார்ந்த குழுவே தனக்குப் பாதுகாப்பு என்று நம்பி, கண்டனக் குரல் எழுப்பாது. நாம் சுயலாபத்திற்காக மௌனமாகக் கடந்து தப்பிக்க முயன்றாலும், பிறருக்கு இந்த வதந்தியை நாம் ஆமோதிப்பதாகவே தென்படும். நம்மை நம்புவோர், நம்மை மதிப்போர் இதனாலேயே இதையும் ஏற்கக்கூடும்.

வதந்தி வேறு, பொய்ப் பிரசாரம் வேறு. உண்மைகளையே செய்திகளாகத் தருவதுதான் ஊடகத்தின் வேலை, அவற்றை ஆராய்ந்து நிரூபணம் தேடுவது மக்களின் வேலை அல்ல. ஆகவே பெரும்பாலோர் ஊடகங்கள் தங்கள் அரசியல் சார்புக்கேற்ற வகையில் தரும் ‘தகவல்களை’ உண்மை என்றே நம்புவார்கள். இந்த மறைமுக அரசியலால் மக்களின் கருத்தோட்டம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அமைந்துவிடும்.

அரசியல் அல்லது வணிக நோக்கில் உருவாக்கப்படும் வதந்திகளைப் பரப்புவதால் தனிப்பட்ட லாபம் இல்லையென்றாலும், தன் கட்சி/சாதி/துறை சார்ந்து ஏற்பட்டிருக்கும் ஒரு மந்தை மனப்பான்மை வதந்திகளைப் பெருக்கும். ஆரம்பத்தில் குழு ஒற்றுமைக்காக இதை ஏற்பவர்களிடம் காலப்போக்கில் ஓர் ஆவேச வெறுப்புணர்ச்சி வளரும். இது சிந்தனையை மழுங்கடிக்கும். மனம் இல்லாததை நம்பி ஏமாறும், இதுவே சில போலிகளுக்கு வியாபாரம் செய்ய மூலதனம் ஆகிவிடும்.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 6

நாய்களைப் பிடிக்காத ஒருவன் நாய்கள் மூலமே கொரோனா பரவுகிறது என்று ஒரு வதந்தியைக் கிளப்பினால், அது விரைவில் இணையத் தகவல் பரிமாற்ற வேகத்தில் ஒரு புரளியாகி, வீட்டில் செல்லமாய் நாய் வளர்ப்போர்கூட அதை நம்பிக் குழம்பும் அளவு ஆகலாம். நாம் நம்பும் நம்மைச் சார்ந்தவர் சொன்னால் அது பொய்போலவும் தெரியாது. இந்நிலையில் சந்தேகம் எழும். நிம்மதி குலையும். குழந்தைபோல் வளர்த்த நாயைப் பார்க்கும்போது சலனமும் அச்சமும் வரும்.

செய்திகளின் போர்வையில் வதந்திகள் வலைத்தளங்களில் பரவுவதால் உண்மை எது என்று நிதானமாய் நோக்கித் தெரிந்துகொள்வது அவசியம். இல்லையென்றால் அவசியமான ஆதாரபூர்வமான அறிவியலைப் புறக்கணித்து மூட நம்பிக்கைகளில் நேரத்தையும் வாழ்வையும் வீணாக்க நேரிடும். நோய்த்தொற்று மிகுந்துள்ள நேரத்தில் இல்லாத மருந்துகளைப் போலிகள் மட்டுமல்ல, மூட நம்பிக்கையுள்ளோரும் பரப்புவார்கள். அறிவியலுக்குப் புறம்பான அணுகுமுறைகள் விபரீத விளைவுகளிலேயே முடியும் - சிலருக்கு இது வியாபாரம், சிலருக்கு இது கும்பல் ஆமோதிப்பு.

`எப்பொருள் யார்யார் வாய்’ சொல்கிறது என்பதே முக்கியம். தகவல்களைச் சற்றே ஆராய்ந்தால் போதும், உண்மை புலப்படும். உண்மையைக்கூட உற்றுக் கவனித்து ஏற்பதே உதவும்.

(மயக்கம் தெளிவோம்)