
டாக்டர் ருத்ரன்
வீட்டிலேயே அடைந்து கிடந் தாலும் இணையவழியே உலகத்தோடும் உற்றவர் களோடும் தொடர்பில் இருக்கும் காலம் இது. ஊர் முடங்கியதால் வீட்டுள் அடைந்துகிடக்கும் காலத்தில் இது பலருக்கும் ஒரு நல்ல வடிகாலாக இருக்கிறது என்றாலும், இதுவே சிலருக்கு மனதளவில் ஒரு சிக்கலையும் உருவாக்கிவருகிறது. செய்தி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை மீறி, பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை செல்பேசித் திரை பார்ப்பதும், மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்று கவனிப்பதும் பலருக்கு அடிமைப்படுத்தும் பழக்கமாகி விட்டது.

செல்பேசியில் (அல்லது கணினியில்) இலக்கியம் படிக்கிறேன், பாடங்கள் படிக்கிறேன், என் துறை சார்ந்த நவீன நுட்பங்களைத் தெரிந்து கொள்கிறேன் என்று கூறிக் கொள்பவர்கள்கூட, கணிசமான நேரத்தை சமூக வலைதளங்களில் செல விடுகிறார்கள். கண்ணுக்கும் பார்வைக்கும் இதனால் வரக்கூடிய பாதிப்புகளைப் போலவே மனத்துள்ளும் வரும். அடிக்கடி வலைமேய்வது ஒரு மனோநிர்பந்தமாகவும் மாறிவிடும். தூங்கப்போகும் நேரம் தள்ளிப்போவதில் ஆரம்பித்து இது பல்வேறு தாக்கங்களை உருவாக்கும்.
இது வெறும் தகவல் சேகரிக்கும் ஆர்வம் மட்டுமல்ல, அதை மீறிய தவிர்க்க முடியாத அனிச்சை உந்துதல் - செய்திகள் அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் மாறாது என்றாலும் வேறு யாரெல்லாம் என்னவெல்லாம் இது பற்றிச் சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஓர் உத்வேகம். இதிலேயே மனம் உழல்வதால், செய்ய வேண்டிய வேலைகளில் கவனக்குறைவு வந்துவிடும். உண்மை பொய் தெரியாமல் குழப்பங்களும் தோன்றும். நாளடைவில் வாழ்க்கைக்குப் பயனுள்ள நூல்களைப் படிக்கும் பழக்கம் குறைந்துவிடும். பொழுது போக்குக்கு உதவும் திரைப் படங்கள் பார்க்கும்போதும் கைகள் அனிச்சையாக அந்தச் செல்பேசியின் மேல் கிடக்கும். எதிர் இருப்பவருடன் உரையாடல்கள் பாதிக்கப்படும், இதனால் உறவுகளிலும் சிக்கல்கள் உண்டாகும்.

அம்மாவைப் பார்த்து நானும் சமையல் செய்கிறேன் என்று பொம்மைகளோடு விளையாடும் குழந்தைகள் போல, பெற்றோர் அதிலேயே மூழ்கியிருப்பதைப் பார்த்து செல்பேசியில் ஆர்வம் காட்ட ஆரம்பிப்பார்கள். இப்போது பல தாய்மார்கள் குழந்தை களுக்கு நிலாக் காட்டி, காக்கை காட்டி உணவூட்டும் பழக்கம் போய், எதிரில் செல்பேசியில் ஒரு கார்ட்டூன் போட்டுவிட்டுச் சாப்பிடச் செய்யும் பழக்கம் பல குடும்பங்களில் வந்துவிட்டது. இதன் அடுத்த கட்டமாகக் குழந்தைகள், செல்பேசியில் படம் பார்த்தால் தான் உண்பேன் என்பதில் ஆரம்பித்து எல்லாவற்றுக்கும் செல்பேசி வேண்டும் என்று அடம்பிடிக்கும் நிலை விரைவில் வந்துவிடும்.
மற்றவர் சொல்வதைத் தெரிந்துகொள்ள ஆரம்பிக்கும் செல்பேசிப் பழக்கம் அவர்களுக்கு நம் பதிலைச் சமூகவலைதளங்களில் உடனே சொல்ல வேண்டும் எனும் ஒரு நிர்பந்தமாக மாறும். இதன் அடுத்தகட்டம், நாம் எதை யாவது பதிவு செய்துவிட்டு அதற்கு எத்தனை பேர் விருப்பக்குறி இடுகிறார்கள், என்னென்ன எதிர்வினை செய்கிறார்கள் என்று பார்ப்பதிலேயே பொழுதுகள் வீணாகும்.
கொரோனா முடக்கத்தில் வீட்டிலிருக்கும் போது நேரம் கழிய ஆரம்பிக்கும் இப்பழக்கம், பின்னாளில் பணிபுரியும் போதும் தொடரும். இதன் வீச்சாகப் பணியில் கவனம் சிதறி, செயல்திறன் பாதிப் படையும்.

தனியாக வீட்டிலிருப்ப வர்க்கும், அதிகமாய் நேரில் பழகக்கூடிய நட்பு வட்டம் இல்லாதவர்க்கும் செல்பேசி மூலம் கிடைக்கும் இப்படிப் பட்ட ஒரு ‘சுற்றம்’ அவர்களது இறுக்கத்தைக் குறைக்க நிச்சயமாக உதவும். ஆனால் எல்லைகளை வகுத்துக் கொள்ளத் தெரியாமல் இதனால் ‘மெய்நிகர்’ பரிச்சயத்தை, ‘நிஜமான’ நட்பு என்று நினைத்துக்கொண்டு ஏமாறுபவர்கள் அதிகம். இப்படிப்பட்ட ஏமாற்றங்கள் சிலருக்குத் தாங்க முடியாத மனச்சோர்வினையும் ஏற்படுத்தும். இதில் வரக்கூடிய ஏமாற்றங்களின் அளவையும் வீச்சையும் பொறுத்து, வாழ்வில் பணத்தைப் பறிகொடுக்கலாம், வாழ்வில் பெரும் சிக்கல் களையும் உருவாக்கிக் கொள்ளலாம். பதின்வயது முதிர்ச்சியின்மை, உலகவழக்கு புரியாத தன்மை என்று இளம் வயதினர் மட்டும் இதில் சிக்கிக் கொள்வதில்லை. இல்லாத சொந்தங்களை உறவுகள்போல் நம்பி ஏமாறுவது நடுத்தர வயதினர்க்கும் நடக்கும். குடும்பத்தில், தனிப்பட்ட வாழ்க்கையில் இதனால் வரும் குழப்பங்கள் பாதிக்கப்படு பவரின் மனவலிமையைப் பொறுத்து நபருக்கு நபர் மாறுபடும். இவ்வளவு அபாயங்கள் இருப்பதைப் பற்றி இவர்கள் எதுவும் அறியாதவர்களும் அல்லர். இதை மீறி இதில் ஓர் ஆவேச ஆர்வம் வரக் காரணம், இது தரும் ஆசுவாசம்தான்.
வாழ்வின் இறுக்கத்தில் உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு சுலபமான வடிகால். உணர்ச்சிகளுக்கு எப்போதுமே வடிகால் தேவை. கோபம் வந்தால் காட்டாமல், சோகத்தை மறைத்து வைத்துக்கொண்டு வாழ்பவர்கள்தான் இங்கே அதிகம். அந்த உணர்ச்சிகளை எளிதாக இறக்கி வைக்க இவ்வகைச் சமூக வலை தளங்கள் நிச்சயமாக உதவு கின்றன. ஆனால், பக்குவ மில்லாத மனதுடை யவர்களும், முதிர்ச்சி யில்லாதவர்களும், ஆர்வத்தின் உந்துதல்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்களும் வடிகால் களையே வேறு வகைச் சிக்கல்களாக மாற்றிக் கொள்வார்கள்.

யாருடன் தொடர்பு கொள் கிறோம், எதற்காகத் தொடர்பில் இருக்கிறோம், எதைத் தேடி வலை மேய்கிறோம், கிடைக்கும் தகவல்களினால் எப்படி யெல்லாம் பாதிக்கப்படுகிறோம் என்பதை ஆரம்பக் கட்டத்திலேயே தெளிவாகக் கணித்து இதில் ஈடுபடு பவர்களுக்கு இது நிச்சயமாக உபயோகமான வடிகால்தான். ஆரம்பத்திலேயே இவ்வளவு யோசித்துப் பெரும்பாலோர் இதில் நுழைவதில்லை. தன் வேலையும் வாழ்க்கையும் இதனால் பாதிக்கப்படுகின்றன என்று சீக்கிரமே புரிந்து கொள்பவர்கள் தப்பிப்பார்கள். ஆனால், இதிலெல்லாம் மாட்டிக்கொள்ள மாட்டேன் என்பதுதான் பெரும்பான் மையினரின் மனவோட்டம். ஆழமாய் உள்ளே சிக்கிக் கொண்டால் மதுவுக்கு அடிமை யானவர்கள் சொல்லும் ``நாளை முதல் குடிக்கமாட் டேன்” என்பது போலத்தான் ஆகும்.
அடிக்கடி நம் கையிலிருக்கும் செல்பேசியை நாடும் நிலை வந்தால், அதிலிருந்து மீள எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை, பயன்பாட்டை ஒத்திவைப்பதுதான். இந்த நேரத்தில் இவ்வளவு மட்டும் பார்ப்பேன் என்று தீர்மா னிப்பதுதான். கட்டுப் பாட்டுடன் செயல்பட்டால் எதிலும் பிரச்னைகள் வராது, வந்தாலும் மனம் சமாளிக்கும். இயல்பு வாழ்க்கைக்கு மீள்வதும் எளிதாகும்.
(மயக்கம் தெளிவோம்)