
டாக்டர் ருத்ரன்
கோவிட்-19 தொற்றின் எதிரொலியாக, அடைபட்டு மட்டுமல்ல, மனம் அடிபட்டும் கிடக்கிறது. இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்னைகள், இழப்புகள் ஆகியவை உருவாக்கும் ‘வருத்தத்தை’ ஒட்டி வரும் மனநிலையைக் குறிப்பதாக மக்களிடையே ‘டிப்ரெஷன்’ என்று அநாயாசமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை, உண்மையில் ஒரு தீவிர மனநோயையும் குறிக்கிறது.
எந்த இழப்பும் வலிக்கும். வலி மனதில் ஒரு சோர்வை உண்டாக்கும். இதை மனவருத்தம் என்று எடுத்துக்கொள்ளலாம். தோல்வியின் வருத்தம் நீடிப்பதில்லை, கவலைகளும் நிலைப்பதில்லை. சோகம் எவர் வாழ்விலும் தொடர்நிலையாக மாறுவதில்லை. வயது, சூழல், முற்படும் காரியத்தின் முக்கியத்துவம் ஆகியவையே நம் சோகத்தின் தீவிரத்தை நிர்ணயிக்கின்றன.
அன்று பொம்மை உடைந்தது மிகப்பெரிய வருத்தத்தைத் தந்தது. வயது கூடிய பின் வேலையிழப்பு ஒரு பெரிய சோகத்தை உருவாக்கும். காதலின் நிராகரிப்பு, நெருங்கியவரின் மரணம், தீவிரமாய் நம்பியிருந்த ஒரு சித்தாந்தத்தின் தவறு, ஈடுபாட்டுடன் வளர்த்த ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சி, நட்பு எனும் நம்பிக்கையை உடைத்துவிட்ட துரோகம் என்று பற்பல விதங்களில் நம் மனதை வருத்தும் நிகழ்வுகள் அனைவர் வாழ்விலும் சாத்தியம். தோல்வியும் வரலாம் எனும் தெளிவுடன் அணுகும் காரியத்திலும், அந்தத் தோல்வி வருத்தம் தரத்தான் செய்யும். தோல்வி என்பது வெறும் இழப்பு மட்டுமல்ல, அது அந்நேரத்தின் தாங்கமுடியாத ஒரு காயம், மனதுக்குள் ஒரு வலி.
உடலில் ஏற்படுவதுபோலவே மனதிலும் சில காயங்கள் சுவடில்லாமல் மறதியில் காணாமல்போகும்; சில ரணங்கள் நிரந்தர வடுவாகக் காலம் முழுக்கக் காயத்தின் காரணத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். தோல்வியில் வடுக்கள் பாடமாய் அமைவோருக்கு மட்டுமே வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி எளிதாய்ப் பயணிக்கும்
எந்த வலியின் தீவிரத்தையும் அதை அனுபவிப்பவர் மட்டுமே முழுதாய் உணர முடியும். ‘உன் கவலை எனக்குப் புரிகிறது, உன் வருத்தத்தில் நான் பங்கேற்கிறேன்’ என்றெல்லாம் நாம் உண்மையான அன்புடன் சொன்னாலும், பாதிக்கப்பட்டவர் நமக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அவர் அனுபவிக்கும் அதே வலி நமக்கு இருக்காது. அன்பின் காரணத்தால் அவரது சோகம் நமக்குள்ளும் ஒரு வருத்தத்தை உண்டாக்கினாலும், இருவர் மனங்களில் இருக்கும் தாக்கமும் பாதிப்பும் வேறு வேறாகத்தான் அமையும்.

அடிபட்டவருக்கு ஆறுதலாய் இருப்பது, உதவிகள் செய்வது, அன்புடன் எழுவதற்கு நம் கரம் நீட்டுவது என்பவையெல்லாம் முக்கியம்தான், ஆனால், மிக நெருக்கமாய் ஒருவரைப் பற்றி நாம் அறிந்திருந்தால் மட்டுமே இப்படி உடனிருந்து உதவ முடியும். ‘பாவம், கஷ்டப்படுறார்... கொஞ்ச நேரம் ஆறுதலாப் பேசலாம்’ என்பதெல்லாம் தற்காலிக ஆசுவாசம் மட்டுமே தரும். இங்கேதான், மனவியல் நிபுணர்களின் உதவி அவசியமாகும். ஒருவரது வலியை அவரது கண்ணீராக மட்டுமே பார்க்காமல், அவருடைய பின்னணி, வாழ்வுமுறை, இழப்பின் தாக்கத்தைத் தாங்கும் சக்தி, மீள்வதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தருவதுதான் பயனுள்ள மனவியல் ஆலோசனை. எல்லாக் காயங்களுக்கும் ஒரு பேண்டெய்டு ஒட்டுவது உதவாது என்பதுபோல எல்லா வருத்தங்களுக்கும் கொஞ்ச நேரம் பேசுவது போதாது.
மேலோட்டமாய் ‘சரியாகிவிடும் கவலைப்படாதே’ என்று யார் வேண்டுமானாலும், கையைப் பிடித்துக்கொண்டும் கட்டி அணைத்தும்கூடச் சொல்லிவிடலாம். இது அந்நேரத்துக்கான கண்ணீர் துடைக்கும் கைக்குட்டை மட்டுமே. அழுவதை விட்டு அவர் அடுத்த கட்டம் நகர, பாதிக்கப்பட்டவரிடமிருந்து விலகி நின்று, நம் உணர்வுகளும் அனுபவங்களும் தரும் கண்ணோட்டத்தை மீறிப் பார்ப்பதே மனவியல் கோணத்தில் அமையும் ஆலோசனை.

சிலருக்கு வெறும் மனவியல் ஆலோசனைகள் போதாது. தூக்கமின்றி, பசியின்றி, பதற்றத்தால் வயிற்றில் அமிலம் அதிகரித்து ஒரு படபடப்பு வந்து, அமைதியின்றி இருக்கும்போது சில மருந்துகளும் அவசியம். உடனே, ‘என் அப்பாவுக்குத் தூக்கம் வராதபோது இந்த மாத்திரை சாப்பிட்டார், நீயும் போட்டுக்கொள்’ என்று சொல்வதெல்லாம் தவறு. அவரவர் உடல்நிலையைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் எந்த மருந்தும் தந்துவிடக்கூடாது. இங்கேதான் மனநல மருத்துவர்களின் அவசியம் இருக்கிறது. மனவியல் கோணத்தில் பாதிக்கப்பட்டவரின் சிக்கலைப் புரிந்துகொள்வதோடு மட்டுமல்ல, அந்த நேரத்துக்கு அவசியமான மருந்துகளைத் தீர்மானிப்பதும்தான் மனநல மருத்துவம்.
மருந்து சாப்பிட்டால் மனம் எப்படிச் சரியாகும் என்பது எல்லா மனநல மருத்துவர்களும் எதிர்கொள்ளும் கேள்வி. மருந்துகள் நரம்புமண்டலத்தில் உள்ள நுட்பமான ரசாயனப் பொருள்களைச் சமன்படுத்துவதால், உடலில் இறுக்கம் குறைவதோடு, எண்ணங்களிலும் சோர்வு தரும் குழப்பங்களைக் குறைக்க உதவுகின்றன. இம்மருந்துகளை ஒரு மனநல மருத்துவரின் நேரடி அறிவுரையின்றி எல்லாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை மருந்து தேவைப்படும். வெறும் ஆறுதல், ஆலோசனை போதாது.
பலரும் தோல்வியின் வலியால் ஏற்படும் தீவிர வருத்தத்தையும் சோகத்தையும் ‘டிப்ரெஷன்’ என்று சொல்வதால், உண்மையிலேயே தீவிர மனநோயான மன அழுத்தத்தைப் பலர் அறிந்துகொள்ளாமல் போகலாம். ஒரு நிகழ்வின் எதிர்வினையாக ஏற்படும் சோர்வும் சோகமும் மிகவும் கடுமையாகத் தோன்றினாலும், இவ்வகை மனச்சோர்வு நெடுங்காலம் நீடிக்காது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் வாழ்க்கைமீதே வெறுப்பு தோன்றி, தற்கொலை எண்ணமும் சிலருக்கு வரலாம்; இதில் சிலர் தங்கள் உயிரையும் இழக்கலாம். தற்கொலை பொதுவாக அந்தக் கணநேரத்தின் உந்துதல்தான். அதனால்தான் மிகவும் சோகத்தில் இருப்பவர்களைத் தனியே விடுவது ஆபத்து.

மனநோய்களில் தீவிரமான ஒன்று, மன அழுத்தம். இதில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித இழப்பும் தோல்வியுமின்றி, சமுதாய அளவுகோல்களின்படி வெற்றிகரமான வாழ்க்கையை நடத்துபவர்களாகக்கூட எல்லோருக்கும் தெரியலாம். மன அழுத்தத்தின் காரணமாக அவர்கள் சோர்வுடன், வேலைகளில் கவனமின்றி, உண்பது, உடுப்பது என்று எதிலும் சிரத்தையின்றி, பிறருடன் பழகுவதிலிருந்து விலகி, தனித்திருந்து, உறக்கமின்றி, நாட்பட நாட்பட வாழ்வில் சரிந்துகொண்டே போவார்கள். இது ஒரு நோய். இதற்குப் பொருளாதார, தனிப்பட்ட, சமூகக் காரணங்கள் எதுவும் கிடையாது. இந்நோய், உடலினுள்ளே ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வருவது. ஆரம்பத்திலேயே சிகிச்சை தருவதும் இதில் அவசியம். இந்த மனவழுத்தத்திலும் தற்கொலை எண்ணங்களும் முயற்சிகளும் வரலாம்.
யாராவது வருத்தத்தில் இருந்தால், அவரது சோகத்துக்கு ஒரு காரணம் தெரிந்தால் உடனே ஆறுதல் தருவதும், தனியாய் இருக்கவிடாமல் பார்த்துக்கொள்வதும் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் தீவிர மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவரையும் உடனே கவனிக்க வேண்டும். அப்படி நமக்குத் தெரிந்தவர் மனச்சோர்வில் துவண்டிருக்கிறாரா, தீவிர மன அழுத்தத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கிறாரா என்பதை அறிந்துகொள்ள அவருடன் நாம் நெருக்கமாய்ப் பழகியிருக்க வேண்டும். மெய்நிகர் அறிமுகமும், அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்போது பேசிச் சிரிக்கும் உறவும் மட்டுமே என்றால், அவர்களுக்கு ஆலோசனை தருகிறேன் என்று அரைகுறையாய் எதுவும் செய்யாமலிருப்பதே உதவியாக இருக்கும்.
(மயக்கம் தெளிவோம்)