Published:Updated:

புதிய பகுதி -1: மனதினிலே தோன்றும் மயக்கங்கள்

மனதினிலே தோன்றும் மயக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மனதினிலே தோன்றும் மயக்கங்கள்

டாக்டர் ருத்ரன்

உலகம் முழுவதும் ஒரு பெருமூட்டமாய் கொரோனா பற்றிய சிந்தனையே கவிந்து கிடக்கிறது, தொடுவானில்கூட ஒரு நம்பிக்கைக்கீற்று இன்னும் தென்படவில்லை. காலை எழுந்தவுடன் அத்தனை கண்களும் கொரோனாச் செய்திகளையே தேடுகின்றன. ஜன்னல்களுக்கு வெளியே அசாதாரணமான அமைதியில் தெருக்களில் ஒரு சப்தமில்லாத பதற்றம் நிலவுகிறது.

எல்லார்க்குள்ளும் ஒருவித நிலைகொள்ளாமை கூடிவருகிறது. ஆரம்பத்தில் இருந்த அச்சம் சிலரிடம் அசிரத்தையாக மாறிவருகிறது, சிலரிடம் செயல்முடக்கம் திகைப்பாய் ஆகிவருகிறது. மரணபயம் என்பதைப் பின்தள்ளி வாழ்க்கை பற்றிய ஓர் அச்சம் மனத்தில் மேலோங்கிவருகிறது.

இதை இப்போது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம், இதேபோல நூறு ஆண்டுகளுக்கு முன்பும் உலகமே ஒரு நோயால் நிலைகுலைந்து போனது. 1918-ல் ஸ்பானிஷ்ஃப்ளு என்றொரு நோய் உலகில் கோடி மக்களைக் கொன்றது. இந்தியாவில் இந்நோய் மகாத்மா காந்தியைத் தாக்கியது. தன் சுயசரிதையில் அவர் அந்த அனுபவத்தை விவரிப்பது இன்றும் பொருந்தும்.

“காலை வந்தது, சாவு வரவில்லை. என் மனத்தில் மரணம் வெகு அருகில் வந்துவிட்டதை உணர்ந்தேன். நாள்முழுக்க ஆசிரமத்தில் இருப்பவர்கள் கீதை படிக்க, நான் கேட்டுக்கொண்டிருந்தேன். என்னால் படிக்க முடியவில்லை, பேசப் பிடிக்கவில்லை. கொஞ்சம் பேசுவதும் மூளைக்குப் பெரும் சிரமத்தைத் தந்தது. உயிருடன் இருப்பதுதான் வாழ்க்கை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லாததால், வாழவும் பிடிக்கவில்லை. அப்படி ஒரு செயல்பட முடியாத நிலையில், அனைத்துக்கும் பிறர் உதவிசெய்ய, நிர்க்கதியாய், ஏதும் இயலாமல் உயிர்வாழ்வது பெருங்கொடுமையாக இருந்தது. உடல் தளர்ந்துகொண்டே வந்தது. என் உடல் இரும்பைப்போல் இருந்ததாய் நினைத்திருந்தேன், அது இளகிய களிமண்ணாய் ஆகிக்கொண்டிருந்தது.”

டாக்டர் ருத்ரன்
டாக்டர் ருத்ரன்

(இவ்வளவு வேதனையிலும் மருத்துவம் பார்த்துக்கொள்வதில், குறிப்பாக ஊசிபோட்டுக் கொள்வதற்கு அடம்பிடித்து மறுத்து காந்தி நிலைமையை மேலும் சிக்கலாக்கி, அன்பின் கெஞ்சல் களுக்குக் கடைசியில் தலைசாய்த்து, சிகிச்சைபெற்று குணமடைந்தார் என்பது வேறு விஷயம்)

காந்தி அனுபவித்த அந்த வேதனை, மரணத்தின் நெருக்கம் மட்டுமல்ல, மனச்சோர்வின் வெளிப்பாடும்கூட. மரணதிகில் கொரோனா பாதிப்பின் கடைசிக் கட்டங்களுக்கு முன்தான் வரும். நம்மில் பெரும்பாலோர் அந்தக் கட்டத்துக்குப் போவது அரிது. ஆரம்பத்திலேயே காய்ச்சல், இருமல் என்பதை கவனத்துடன் அணுகி, மூச்சுவிடுவதில் சிரமம் வந்தவுடன் சிகிச்சை மேற்கொண்டால் உயிர்பிழைக்கலாம் என்பதை இப்போது வரும் புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன.

மனதினிலே தோன்றும் மயக்கங்கள்
மனதினிலே தோன்றும் மயக்கங்கள்

கொரோனா வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. தினசரி உழைப்பின் வருமானம் கொண்டு வாழ்வோர் வேலைக்குப் போகத் துடிக்கிறார்கள். வேலை கொடுக்கக்கூடியவர்கள் தொழில்நடத்தத் தடுமாறுகிறார்கள். நடுத்தர வர்க்கம் வசதிகளில் சமரசம் செய்துகொண்டாலும் வசதிகூட்ட வாங்கிய கடன்கள் பற்றிய கவலையில் இருக்கிறார்கள்.

எல்லா மனங்களும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன. மயக்குறு மனநிலை குழப்பத்தைக்கூட்ட, சிந்தனை தடுமாறுகிறது. ஆட்டுவிக்கும் உணர்ச்சிகளில் முதலிடத்தில் இருப்பது அச்சம்.

அச்சம் ஓர் அசாதாரண சூழலில், மிகப்பெரும் அபாயத்தை எதிர்நோக்குகையில் வரக்கூடிய மிக இயல்பான உணர்ச்சி. இப்போது உலகளவில் பரந்துகிடக்கும் அச்சம் கொஞ்சம் வேறு மாதிரி.

பொதுவாக ஓர் அபாயத்தை எதிர்நோக்கினால் மனம் தப்பிக்கப் பார்க்கும் அல்லது எதிர்த்து நிற்க முயலும். இன்றைய சூழலில், எதிர்த்து நிற்கவும் முடியாது, தப்பி ஓடவும் முடியாது என்பதால்தான் வீடுகளில் ஒடுங்கி ஒளிந்து கொள்வது என்பதே ஒரே தீர்வாகிவிட்டது. பொதுவாக ஒன்றிலிருந்து ஒளிந்துகொண்டால், மனம் எப்போது வெளியே வரலாம் என்றே கணக்கிட்டுக்கொண்டிருக்கும். கொரோனா முடக்கத்தில், ஊரடங்கல் எப்போது முடியும் எனத் தெரியாத நிலை வந்துவிட்டது. தெரியாத எல்லாமும் அச்சத்தை உருவாக்கும்.

ஸ்பானிஷ்ஃப்ளுவால் பாதிக்கப்பட்ட காந்தி (1918)
ஸ்பானிஷ்ஃப்ளுவால் பாதிக்கப்பட்ட காந்தி (1918)

ஒரு வாரம் என்பது மூன்று வாரங்களாகி, மேலும் நீடித்து, இன்னும் எத்தனை நாள்களாகுமோ எனும் கவலை - இதுவரை அனுபவித்திராத அடைபட்டுக் கிடக்கும் நிலை மெள்ள வெறுமையின் விரக்தியாகிவிட்டது. அடுத்த வாரம் இயல்புநிலை வந்துவிடும் என்று யாராவது சொன்னால்கூட மனத்துள், இயல்பு என்பது முந்தைய நிலையா, முற்றிலும் மாறுபட்ட ஒன்றா எனும் கேள்வியே எழுகிறது.

ஆரம்பத்தில் இருக்கும் பதற்றம், நாட்பட நாட்பட ஒரு திகைப்புடன் கூடிய பயமாக மாறும். பயத்தில் சிந்தனை தடுமாறும். இருளில் கை அனிச்சையாக ஒரு பிடிமானம் தேடுவதுபோல அச்சத்தில் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு நம்பிக்கையை வளர்க்கவே மனம் முயலும். இப்போது அப்படியொரு நம்பிக்கை மருத்துவ அறிவியல் சிகிச்சைக்கும் தடுப்புக்கும் மருந்து கண்டுபிடித்துவிடும் என்பதுதான். அவ்வப்போது கசியும் தகவல்களும் யூகங்களும் நம் அச்சத்தை எவ்விதத்திலும் குறைக்காமல், தினம் ஒரு செய்தியும் மறுநாளே அது இல்லை எனும் தகவலுமாக பொதுமக்களிடம் ஒருவித சலிப்பை உருவாக்கிவிட்டன.

முதல் மூன்று வாரங்கள் சமாளித்த மனம், இப்போது தடுமாற ஆரம்பித்திருக்கிறது. இது ஐந்தாவது வார முடிவில் எல்லாரிடமும் ஒரு பரவலான மனச்சோர்வாக வெளிப்படும். அதை எதிர்கொள்ள நாம் அனைவரும் தயாராக வேண்டும். அச்சம் தவிர்ப்பதும், அமைதி பயில்வதும் இப்போது நமக்கு அவசியமாகிவிட்டது.

(மயக்கம் தெளிவோம்)