
‘எல்லாவற்றிற்கும் தடுப்பூசி மட்டுமே தீர்வு’ என எந்தச் சித்த மருத்துவரும் ஒருபோதும் பேசுவது இல்லை. இதுவரை பேசியதும் இல்லை
’கடவுளே அறிவியல்’ என்று ஒரு குழு; ‘அறிவியலே கடவுள்’ என்று இன்னொரு குழு... இந்த இரு குழுக்களுக்களுக்கிடையே, கோவிட் நோயின் கோரப்பிடியில் நம் வெகுசனம்.
ஆக்சிஜனுக்கு ஏங்கித்தவிக்கும் நோயுற்றோரை தன் உயிரைத் துச்சமாக நினைத்துக் காப்பாற்றும் நவீன மருத்துவரும் செவிலியரும் ஒருபக்கம். ஆரம்ப நிலையில், உடலின் அடிப்படை எதிர்ப்பாற்றலை சீராக வைக்கவும், வைரஸ் வேகமாகப் பெருகாமல் தடுக்கவும் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட எளிய மூலிகை மருந்துகளுடன் சித்த மருத்துவர்கள் இன்னொரு பக்கம். இரு துறையினரும் தத்தம் வெளியில் வேகமாக இயங்கிக்கொண்டிருந்தாலும் ஊடகவெளியில் உலாவும் சர்ச்சைகளுக்குக் குறைவு இல்லை. ‘பேரிடரில், சித்த மருந்துகளுக்கு என்ன வேலை?’ என மேலாதிக்கத் தொனியில் ஒரு கூட்டமும், ‘தடுப்பூசி என்ன செய்துவிடும், நம் மரபு மருத்துவம் போதாதா?’ என இன்னொரு கூட்டமும் எப்போதும் போல் சர்ச்சைகளுடன். கொஞ்சம் உற்றுப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம்.

‘மரபின் அனுபவங்களுக்கு எதற்கு நவீன அறிவியல் விளக்கம்? இந்த அனுபவங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டது. இந்த அறிவியல் மொழியே அவசியமில்லாதது’ என சினத்தோடு பேசும் மரபின் அடிப்படைவாதிகள், ‘தடுப்பூசியே தப்பு. அதனால்தான் நோய்ப் பெருக்கம்’ என மிகத்தவறான வாதத்தை மீண்டும் மீண்டும் கட்டி எழுப்புகிறார்கள். நவீன அறிவியலை ஏற்றுக் கொள்ளும் சித்த மருத்துவர்களை ‘விலை போய்விட்டார்கள்; முட்டாள் கூட்டம்; மரபின் எதிரிகள்’ எனச் சித்திரிக்கின்றார்கள். என்றைக்கும் இல்லாதபடியான சமூக ஊடகத்தின் வீச்சில், தான் புரிந்துவைத்திருக்கும் தவறான கற்பிதங்களை வேகவேகமாகப் பரப்பி, பெருவாரியான மக்களை தடுப்பூசியை ஐயத்துடனே அணுகும்படி மாற்றுகின்றனர்.
முக்கியமான விஷயம், ‘எல்லாவற்றிற்கும் தடுப்பூசி மட்டுமே தீர்வு’ என எந்தச் சித்த மருத்துவரும் ஒருபோதும் பேசுவது இல்லை. இதுவரை பேசியதும் இல்லை. இன்னும்கூட குழந்தைகளுக்குப் போடக்கூடிய அத்தியாவசிய தடுப்பூசிகளைத்தாண்டி, பிற புதிது புதிதாக வந்திருக்கும் தடுப்பூசிகளெல்லாம் அவசியமா என்று வினவிக்கொண்டுதான் உள்ளோம். ஆனால் இந்த கோவிட் பேரிடரில், தடுப்பூசி தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. இந்தத் தடுப்பூசிகள் எல்லாம் 100% பாதுகாப்பு என்று சொல்லிவிடவும் முடியாதுதான். ஆனால் இதுவரை நடைபெற்றிருக்கின்ற ஆய்வுகளில் 99.99% சதவிகிதத்திற்கு மேலாக அதன் பாதுகாப்பை அறிந்து சொல்கின்றனர். அதன் பயன் ஆறு மாதமா, ஒரு வருடமா... இன்னும் தீர்மானமாக எவருக்கும் தெரியாது. ஆனால் இந்த ஓரிரு வருடத்தில் கிடைக்கும் திரள் நோய்க்காப்பில் (Herd immunity), மெல்ல கோவிட்டின் பிடியிலிருந்து விலகும் சாத்தியம் அதிகம். இன்னும் 4-5 ஆண்டுகள் கழித்தே முழுமையான, 100% பாதுகாப்பும் 100% பயனும் கொண்ட தடுப்பூசி வரக்கூடும். தற்போதைய யுத்தத்தில் 99.9% பாதுகாப்புக் கொண்ட இந்த ஆயுதத்தை, நாம் கையில் ஏந்தத்தான் வேண்டியுள்ளது. தடுப்பூசி ஒன்றை வைத்தே, அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் மெல்ல இயல்பு நிலைக்கு நகர்ந்துவிட்டன. இந்த ஊசியே வேண்டாம் என்றால், இயல்பாக நடக்கும் திரள் நோய்க்காப்பில் பல கோடி மக்களை இழந்துதான் நோயின் பிடியிலிருந்து விலக முடியும்.
கடந்த ஸ்பானிஷ் ஃப்ளூவில் தடுப்பூசி இல்லாதபோது, அதன் ஆட்டம் மார்ச் 1918 முதல் ஏப்ரல் 1920 வரை இருந்ததாகச் சொல்கின்றனர். கிட்டத்தட்ட 20 கோடி மக்கள் இறந்திருக்கக் கூடும் என்று கணக்கிடுகின்றனர். இப்போதைய மக்கள்தொகை, மக்கள் வாழும் அடர்வுத்தன்மையை வைத்து நாம் இதுபோல் 10 மடங்கு உயிரிழப்பைத் தாங்க முடியுமா என சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
மரபுப் பிடிப்பாளர்கள் இன்னொரு விஷயத்தை உற்றுப்பார்க்க வேண்டும். 400-500 ஆண்டுகளுக்கு முன்னர், அம்மை போட்டவரின் கொப்புளத்தில் இருந்து, அம்மைப்பாலை எடுத்து அம்மை தாக்காதவரின் உடலில் குத்தி, நோய்த்தடுப்பாற்றல் பெற்ற சமூகம்தான் நாம். தற்போதைய தடுப்பூசி அறிவியலே இந்த அனுபவத்தில் தொடங்கியதுதான் எனப் பல மருத்துவ ஆவணங்கள் உலகளவில் மிக அழுத்தமாகச் சொல்கின்றன. (History of innoculation and vaccine பற்றிய நூல்களை வாசித்துப் பார்த்தால் புரியும்) தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் வங்காளம், சீனம், ஆப்பிரிக்காவின் பெனின் செனகல் நாடுகளில் எல்லாம் இருந்த மரபுப்பழக்கம்தான் அது. அப்போது குத்திய அந்த அம்மைப்பாலின் புரதம் ரத்தத்தில் கலந்து நினைவுத்தளங்களிலிருந்து காலமெல்லாம் காப்பு கொடுத்துள்ளது. மரபுக்கு எதிரானது தடுப்பூசி என்று பேசுபவர்கள் ஏன் இந்த மரபனுபவத்தை ஏற்க மறுக்கின்றனர்?
எல்லாப் பேரிடர் சமயத்திலும் சந்தேகக் கருதுகோள்கள் (கான்ஸ்பிரசி தியரிகள்) மேலோங்கும். 1750களில் பிளேக்கில் கொள்ளை கொள்ளையாக மரணம் நடந்தபோது, ‘கிணறுகளில் ஆறுகளில் விஷங்களைக் கலக்கி யூதர்களைக் கொல்லும் முயற்சி’ என்றே பலரும் சந்தேகப்பட்டார்கள். எச்.ஐ.வி கிருமி அமெரிக்கா உருவாக்கியது என்றார்கள். பன்றிக்காய்ச்சலும் பறவைக்காய்ச்சலும் அப்படித்தான் பேசப்பட்டன. இப்போது கோவிட்டிலும் பல கான்ஸ்பிரசி தியரிகள். இப்போதைய சமூக வலைதள வீச்சில், இந்த சந்தேகக் கருதுகோள்கள் இன்னும் வேகமாகின்றன. ‘மக்கள்தொகைக் குறைப்பு உத்தி, இலுமினாட்டிகள், பில்கேட்ஸ் முதலான பெரும் கார்ப்பரேட்டுகளின் சதி’ என்கிற பிரசாரங்களை இணைத்து, இணையத்தில் உலாவவிடும் செய்திகள் ஏராளம். அதேசமயம், சிலகாலம் கழித்து மருந்து மற்றும் தடுப்பூசி சந்தையில் நிச்சயம் கார்ப்பரேட்டுகள் கோலோச்சும் போக்கு வரத்தான் செய்யும். மரபை நேசிக்கும், மரபின் அறிவியலை முன்னகர்த்தும் நாம் அந்த அறமற்ற வணிகத்தை முழுமையாக எதிர்க்கத்தான் வேண்டும். ‘எல்லா விளிம்பு நிலை மக்களுக்கும் விலையற்றதாய் அரசின் அடிப்படைக் கடமையாய்த் தடுப்பூசி கொடு. பெரும் கம்பெனிகளிடம் தஞ்சம் அடையக் கூடாது’ என்கிற குரல் அப்போது ஓங்கித்தான் ஆக வேண்டும். அறமற்ற வணிகத்தின் மீது நம் அறச்சீற்றம் இருக்க வேண்டுமே ஒழிய, அத்தியாவசியமான அறிவியலின் மீது அல்ல. ‘ஓட்டைக் கத்தரிக்காய் இல்லாமல் பளபளவென கூடுதல் சாகுபடிக்கு’ எனச் சொல்லி வரும் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை எதிர்ப்போம். பல மில்லியன் உயிர்களைக் காப்பாற்றும் அதே மரபணுத் தொழில்நுட்பத்தில் உள்ள இன்சுலினை எதிர்ப்பது முட்டாள்தனம்.

அடுத்ததாக ஒருசில நவீன மருத்துவ அடிப்படைவாதிகளின் போக்கு. கிட்டத்தட்ட ‘ரத்தக்கண்ணீர்’ நடிகவேள் சொல்லும் “டேய் கன்ட்ரீ ஃப்ரூட்ஸ்” என்கிற எள்ளலுடனான பார்வை. மிக மிக வருத்தப்பட வைக்கும் போக்கு இது. எனக்கு, ‘ஒருங்கிணைந்த சிகிச்சையின் பிதாமகன்’ எங்கள் ஆசிரியர் பேராசிரியர் தெய்வநாயகம்தான் நினைவிற்கு வருகின்றார். (பேரா. செ.நெ.தெய்வநாயகம் இங்கிலாந்தில் எஃப்.ஆர்.சி.பி படித்த நவீன மருத்துவர். நேர்மைக்கும் நுரையீரல் நோய் தீர்ப்புக்கும் உலகளவில் பெயர் பெற்ற, உலக சுகாதார நிறுவனத்தின் நுரையீரல் நோய் ஆலோசகர். தன் நேர்மையும் கண்டிப்புமான அரசுப்பணிக்குப்பின், தன் இறுதி மூச்சு வரை ஒருங்கிணைந்த மருத்துவத்திற்காக ஓயாது உழைத்தவர்.)
2002, ஜூன் மாதத்தில் ஒரு நாள், 32 வயது சிங்கப்பூர் இளைஞன் எச்.ஐ.வி நோயின் தீவிர நிலையில், சிங்கப்பூரிலிருந்து சென்னை எழும்பூரில் இயங்கிவந்த மரு. தெய்வநாயகத்தின் இந்திய நலவாழ்வு நல்லற மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது எச்.ஐ.வி ஓர் உலகப் பேரிடர். அம்மருத்துவமனை அப்போது நெஞ்சிலுவைச் சங்க வளாகத்தில் இயங்கிவந்த ‘நவீன - சித்த மருத்துவ ஒருங்கிணைந்த மருத்துவமனை.’ அந்த இளைஞன், சிங்கப்பூரில் யாரும் சந்திக்க முடியாத தனி அறையில் வைத்து, சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர். எந்தக் கட்டுப்பாடும் இல்லாத சென்னையின் எளிய மருத்துவமனைக்கு வந்தவுடன், அவரது அவ்வளவு கோப்புக்களையும் பார்த்துவிட்டு, எதிரில் இருந்த சித்த மருத்துவனாகிய என்னிடம், ‘நீங்க நாடி பாருங்க; நம்ம சித்த மருத்துவப் பார்வையில் என்ன புரிகிறது?’ என்று கேட்டதும், ‘பித்தம் மிகக் குறைந்து கபம் மேலோங்கி இருக்கிறது ஐயா’ எனச் சொன்னேன். ‘நம்ம மருத்துவமனையில் அனுமதிச்சிடலாம். ஆக்சிஜன் மட்டும் கைவசமிருக்கட்டும். நவீன மருந்துகளை நான் கொடுக்கிறேன். சித்த மருந்துகளை நீங்கள் சொல்லுங்கள். இன்றைக்கே சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். தொண்டைப்பகுதி அக்கிக்கு அசைக்ளோவீர் ஊசியும் நுரையீரல் பூஞ்சைக்கு அம்பிட்ரோசின் ஊசியும் போட வேண்டும். ஆங்கில எச்.ஐ.வி மருந்துகளுடன் உங்க மருந்துகளில் என்ன கொடுக்கலாம்?’ எனக் கேட்டார். நவீன மருந்துகளோடு, சித்த மருந்துகளான நீரடிமுத்துவல்லாதகி, அமுக்கரா நெல்லிக்காய் இளகம் ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட நாலரை மாத ஒருங்கிணைந்த சிகிச்சை. அந்த இளைஞன் முழு நலன் பெற்றுத் திரும்பி அவர் நாட்டுக்குப் போகையில் 56 கிலோ எடை. கிருமி ரத்தத்தில் இருந்தாலும், எந்த குறிகுணங்களும் இல்லை. சிடி4 எனும் எதிர்ப்பாற்றல் அலகு 600க்கு அருகே. (அவர் வரும்போது 32 கிலோ எடை, எதிர்ப்பாற்றல் சிடி4 அலகு 55 என இருந்த ஞாபகம்). இந்தப் புத்தாண்டிற்கும் ஆஸ்திரேலியாவில் இருந்து அந்த இளைஞன் ‘டாக்டர், நலமா... சார் வீட்ல எல்லோரும் நலமா?’ எனக்கேட்டு வாழ்த்து அனுப்பியிருந்தார். இதுதான் ஒருங்கிணைந்த மருத்துவத்தின் பெரும் பலம். அறம் போற்றிய ஒரு நவீன மருத்துவனும் அறிவியலை ஏற்றுக் கொள்ளும் சித்த மருத்துவனும் நடத்திய உரையாடலின் பலம். ஏன் இந்த மனத்தடை இப்படியான கூட்டு உரையாடலுக்கு?
‘என்னது... எச்.ஐ.வி-க்குக் கூட்டு சிகிச்சையா? என்ன விளையாடுறீங்களா?’ என்றுதான் அப்போதைய ஒட்டுமொத்த நவீன மருத்துவ உலகமும் அவரை விமரிசித்தது. ‘நாம் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறோம். சித்த மருத்துவர்கள் அவர்கள் அனுபவங்களைச் சொல்லும்போது, அதை ஏன் காது கொடுத்துக் கேட்க மறுக்கிறோம்? முதலில் கேட்டால் தானே ஆராய முடியும்?’ என்ற அவர் அறச்சீற்றத்தில் அடங்கிப்போனது எதிர்க்குரல். உலக எய்ட்ஸ் மாநாட்டில் தென்னாப்பிரிக்க டர்பன் நகரில் சித்த மருந்துகளின் பயன்பாட்டை அவர் வெளியிட அந்த அறச்சீற்றம்தான் முதல் குரலாயிருந்தது.
1955-களில் காணாமல்போன சிக்குன் குனியா 2006 டிசம்பர் வாக்கில் கேரளத்தில் எட்டிப் பார்த்தது. பின் 2007-ல் ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் மூட்டுக்களை முடக்கியபோது, மரு. தெய்வநாயகம் எங்களை நிமிர்ந்துபார்த்தார். நாங்கள் கைகாட்டியது நிலவேம்புக் குடிநீரை. மறுநாளே அதன் தரவுகளெல்லாம் திரட்டி அவர் ‘இதை ஏன் தமிழக மக்களுக்குத் தரக் கூடாது?’ என்ற கேள்விகளுடன் அப்போதைய திட்டக்குழு துணைத்தலைவரான திரு நாகநாதனை (இன்றைய ஆயிரம்விளக்குத் தொகுதி எம்எல்ஏ டாக்டர் எழிலனின் தந்தை) சந்தித்தார். இன்றுவரை நிலவேம்பு தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றமைக்கு அலோபதி மருத்துவராயிருந்தும் சித்தத்தை அரவணைத்த தெய்வநாயகத்தின் புரிதல் முக்கியக் காரணம்.
இப்படியான ஒருங்கிணைந்த மருத்துவத்தின் சாத்தியங்கள் உலகின் பல மூலைகளிலும் உன்னிப்பாக ஆராயப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. குறிப்பாக புற்றுநோய்க்கும் சர்க்கரை நோய்க்கும் இப்படியான கூட்டு சிகிச்சையில் நோயரை நலவாழ்விற்கு நகர்த்தும் சாத்தியங்கள் அங்கு பேரளவு நகர்ந்திருக்கின்றன. இப்போதும் கோவிட்டின் தீவிரத் தாக்குதல் சீனத்தில் இருந்தபோது, அத்தனை இடங்களிலும் சீனத்தின் ஒருங்கிணைந்த சிகிச்சைதான் வழங்கப்பட்டது என அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். ஏறத்தாழ 93% சீன கோவிட் நோயர்களுக்கு சீன மூலிகை மருத்துவமும் நவீன மருத்துவமும் ஒருங்கிணைந்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ‘எங்கே நான்? எதுவரை நான்?’ என்கிற புரிதல் இருதுறையினருக்கும் வந்து நடத்தப்பட்ட ஒருங்கிணைப்பு பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கின்றது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இத்தகைய முனைப்புகள் இங்கே எவ்வளவு அவசியம் என்பதைப் பலமுறை பேசியும் எழுதியும் வந்தாலும்கூட, மருத்துவ அடிப்படைவாதிகளின் பிடிவாதத்தினால் நம் நிலத்தில் வேகமாக நகர மறுக்கின்றது.
‘முழுசா ஆராய்ந்துவிட்டு அப்புறம் வந்து பேசு’ - இது மட்டும்தான் இவர்களின் மேலாதிக்க குரலின் தொனி. அதோடு ‘தமிழில் எழுதப்பட்டது தமிழ் மண்ணில் வளர்த்தெடுக்கப்பட்டது எப்படி சரியாகும்?’ என்பது இன்னும் கொஞ்சம் கூடுதல் சாடல். மருந்துக் கண்டுபிடிப்பு, மருந்துகள் மீதான ஆய்வு என்பது பல பில்லியன் டாலர் முதலீட்டில் (பல மடங்கு லாபம் திரும்பி வரும் என்கிற முழு நம்பிக்கையில்) நடக்கும் வணிக முதலீடு. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனைகள் எத்தனை நவீன மருந்துகளை அல்லது அந்த மருந்துகளுக்கான மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளன? ஆனால், ‘நீ ஏன் ஆராயவில்லை?’ என்கிற கேள்வி மட்டும் சித்த மருத்துவர்கள் மீது தொடர்ச்சியாக வைக்கப்படுகிறது. கடந்த கோவிட் முதல் அலையின்போது, கிட்டத்தட்ட, காலில் விழாத குறையாய் நவீன மருத்துவ அதிகாரிகளிடமும் உயர் அரசு அதிகாரிகளிடமும் இறைஞ்சி சித்த மருந்துகளுக்கான பயன்பாட்டைக் கேட்டுப் பெற்றோம். அதன்பின் பெரும் வலியுடனும் வேதனையுடனும்தான் தமிழகத்தில் அத்தனை ஆய்வுகளும் நடைபெற்றன. கிட்டத்தட்ட 16 ஆய்வுகள். இப்போதும் சில குரல்கள். ‘Lancet-ல ஏன் வரலை? Nature-ல வெளியாயிருக்கா?’ என்கிற தொனியில். ‘துளியும் நாங்கள் இதுவரை நடந்திருக்கும் உங்கள் ஆய்வுகளைத் திரும்பிப் பார்க்க மாட்டோம். அதன் சாத்தியங்களைக் காய்ப்பு உவப்பின்றி யோசிக்க மாட்டோம்; பிரிட்டனில் இருந்தும் பெதஸ்டாவிடம் இருந்தும் அறிக்கை வர வேண்டும். அதை எங்கள் பெரு மருத்துவ நிறுவனங்கள் அழகு ஆங்கிலத்தில் சொல்லும் வரை இதையெல்லாம் திரும்பிப் பார்ப்பதற்கு நேரமுமில்லை. மனமுமில்லை’ என்கிற மனப்போக்கு சிலரிடம்.
சீனத்தில் அப்படி அல்ல. 2004-ல் எச்.ஐ.வி நோய்க்கான மரபு மருத்துவ அனுபவங்களைக் கேட்க, பிரெஞ்சு அரசாங்கமும் உலக சுகாதார நிறுவனமும் ஆப்பிரிக்காவின் காமரூன் நாட்டில் மாநாடு ஒன்றை நடத்தின. இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட மருத்துவர்களில் நானும் ஒருவன். கிட்டத்தட்ட 80 நாடுகளின் பங்கேற்பு அதில் இருந்தது. அப்போது சீன மருத்துவக் குழுவிற்குத் தலைமையேற்று வந்தது, அந்நாட்டின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர். முழு மாநாட்டிலும் அவர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. முடிவு? இப்போது உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவப் பிரிவின் தலைவர் ஒரு சீனர். ‘சீன மருத்துவம்’ உலகெங்கும் ஆராயப்படும், பயன்படும் முன்னோடி மரபு மருத்துவமுறையாய் இன்று இருக்கிறது.

2016-ல் நோபல் பரிசு பெற்றது ஒரு சீனக் கஷாயத்திலிருந்து பிரித்தெடுத்த ‘அர்ட்டமிசின்’ மருந்திற்காக. அவர்கள் எவ்வளவு வேகமாக அவர்கள் மரபை நகர்த்துகின்றார்கள். நாமும் சித்தம், ஆயுர்வேதம், யுனானி, யோகா என சீனத்திற்குக் குறைவில்லாமல் 2000 ஆண்டு அனுபவப் பெட்டகங்களை வைத்திருக்கின்றோம். இங்கு இப்போதைய தேவை, வீண் ஜம்பங்களும் மேலாதிக்க மனோபாவமும் அல்ல. எளிய எம் மண்ணின் மானுட உயிர்மீது நேசம் கொண்ட, எங்கள் தெய்வநாயகம் போன்ற நவீன மருத்துவர்களும், விரைந்து ஆய்வு நடத்தும் அடிப்படை அறிவியல் அறிஞர்களின் ஒருங்கிணைப்பும்தான்.
தேவையெல்லாம் மருத்துவ முறைகள்மீது பாரபட்சமில்லாப் பார்வை, ‘தான் படித்த அறிவியல்தான் தலைசிறந்தது, கேள்விக்கப்பாற்பட்டது’ என்கிற மதம் பிடிக்காத, அறிவார்ந்த மருத்துவ யானைகள் (‘என் மதமே பெரிது’ எனக் கொக்கரிக்கும் மதவாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல அறிவியல் மதவாதிகள்), எல்லாவற்றிற்கும் மேலாக ஒருங்கிணைந்த ஆய்வுகளை முடுக்கிவிடும் பெரும் அரசியல் நிலைப்பாடும்.