நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவை டீ மற்றும் காபி. காலையில் எழுந்ததும் அந்த நாளை டீ, காபி அருந்திவிட்டுத்தான் தொடங்குகிறோம் பலரும். அதுவும் சுடச்சுட டீ, காபி இல்லையென்றால், குடித்த மாதிரியே இருக்காது என்று கருதுபவர்கள் நம்மில் பலர் உண்டு. ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஆய்வு முடிவு, சூடாக டீ, காபி, வெந்நீர் போன்றவற்றை அருந்துபவர்களுக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறது.
இதற்கு முன்பு, 2016-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம், சூடான திரவங்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்று ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. அந்த எச்சரிக்கை, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையைக் குறிப்பிட்டது. குறிப்பாக 60 டிகிரி C அல்லது 140 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பமாக எந்த பானத்தையும் அருந்தக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தது.

அந்த ஆய்வு முடிவுகள் ஒருபக்கம் இருக்க, சில ஆராய்ச்சி யாளர்கள், `சூடான பானங்களை அருந்துவதால் மட்டுமே உணவுக்குழாயில் புற்றுநோய் வராது’ என்று கூறுகின்றனர். புகைப்பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல், புகையிலை மெல்லுதல், ஆரோக்கியமற்ற உணவுமுறை, காற்று மாசு ஆகியவையும் இதற்குக் காரணம் என்கின்றனர்.
உணவுக்குழாய் என்பது நம் தொண்டை முதல் வயிற்றுப் பகுதி வரை உணவை செரிமானத்துக்கு எடுத்துச் செல்லும் குழாய். இதுகுறித்து சுகாதார நிபுணர்கள், ``உணவுக்குழாய் புற்றுநோய் பொதுவாக உணவுக்குழாயின் உள்ளே வரிசையாக இருக்கும் செல்களில்தான் பரவத் தொடங்குகிறது. இதில் புற்றுநோயானது உணவுக்குழாயில் எங்கும் ஏற்படலாம். மேலும், பெண்களைவிட ஆண்களை இது அதிகம் பாதிக்கிறது.
உலக அளவில் உணவுக்குழாய் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு மிகவும் அதிகம். அதாவது, புற்றுநோய் மரணங்களில் இது 6-வது இடத்தில் இருக்கிறது. உணவை விழுங்குவதில் சிரமம், எடை இழப்பு, மார்புப் பகுதியில் கடுமையான வலி, அசீரணம், நாள்பட்ட இருமல் ஆகியன உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறிகள்’’ என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும், `ஹார்வர்ட் ஹெல்த்' கருத்துப்படி, ``உணவுக்குழாய் புற்றுநோயானது உணவுக்குழாய் திசுக்களில் உள்ள புற்றுநோய் செல்கள் பெருகத் தொடங்கும்போது கட்டியை உருவாக்குகிறது. கட்டி வளரும்போது, அது உணவுக்குழாய் திறப்பதைத் தடுக்கத் தொடங்குகிறது. இதனால் உணவை விழுங்குவதில் சிக்கல் இருக்கலாம் அல்லது விழுங்கும்போது வலி ஏற்படலாம்.
அதோடு, இந்த உணவுக்குழாய் புற்றுநோயில் இரண்டு வகை உள்ளன. ஒன்று, அடினோகார்சினோமா. இது உணவை விழுங்க உதவும் நீர்ப்படலத்தை உருவாக்கும் திசுக்களில் ஏற்படும் புற்றுநோய். இன்னொன்று, ஸ்குவாமஸ் செல் கார்சினோமா. இது உணவுக்குழாயில் வரிசையாக இருக்கும் செதிள் உயிரணுக்களில் உருவாகும் புற்றுநோய். செதிள் உயிரணு உணவுக்குழாய் புற்றுநோய் என்பது, பொதுவாக உணவுக்குழாயின் மேல் மற்றும் நடுப் பகுதிகளை பாதிக்கிறது" என்கின்றனர்.

இதுகுறித்து காஸ்ட்ரோ என்டாலஜி மருத்துவர் மகாதேவனிடம் கேட்டோம்... ``இது குறித்து இரண்டு விதமான ஆய்வுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று இரானில் செய்யப்பட்ட ஆய்வு, மற்றொன்று சீனாவில் செய்யப்பட்ட ஆய்வு. இரானில் செய்யப்பட்ட ஆய்வைத்தான் நாம் அதிகமாக மேற்கோள் காட்டுகிறோம். அதன்படி ஒருவர் ஒருநாளைக்கு 700 மி.லி-க்கும் அதிகமாக, 60 C வெப்பநிலைக்கும் மேல் சூடான டீ அல்லது காபியைக் குடிக்கும் பட்சத்தில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கிறது. ஆனால், அதில் நேர இடைவெளி குறித்துக் குறிப்பிடவில்லை.
மேலும், இது குறித்து இரண்டு குழுவாகப் பிரித்து ஆய்வு செய்துள்ளனர். ஒன்று, 60 C வெப்பநிலைக்கு மேல் சூடான தேநீரை அது தயாரிக்கப்பட்ட 2 நிமிடங்கள் கழித்துப் பருகுவது. மற்றொன்று, 6 நிமிடங்கள் கழித்துப் பருகுவது. அதன்படி, தயாரிக்கப்பட்ட இரண்டு நிமிடங்களில் பருகுபவர்களுக்கு புற்றுநோய் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர். இதற்குக் காரணம் அதிக வெப்பத்தால் உணவுக்குழாயில் ஏற்படுகின்ற காயம்தான். இது இரானில் செய்யப்பட்ட ஆய்வு.

சீனாவின் ஆய்வுப்படி, 60 C வெப்பநிலைக்கு மேல் சூடாக்கிய டீ அல்லது காபியைக் குடிப்பதோடு, அந்த நபருக்கு புகைபிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட பழக்கங்கள் இருந்தால் அவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகள் அனைத்தும் புற்றுநோய் குறித்த மருத்துவ பத்திரிகையில் வெளிவந்தவை. அதோடு இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்ட உண்மைத்தன்மை கொண்டவை. ஆனால், நாம் அந்தளவுக்கு வெப்பநிலையில உள்ள காபி, தேநீரை பொதுவாகக் குடிப்பதில்லை. அதனால் பயம் தேவை இல்லை" என்றார்.