Published:Updated:

Doubt of common man: ரூட் கேனல் சிகிச்சை முறை எப்படி செய்யப்படுகிறது? - முழுமையான விளக்கம்

ரூட் கேனல் சிகிச்சை
News
ரூட் கேனல் சிகிச்சை

வேர் சிகிச்சைக்குப் பிறகு பற்களைப் பராமரிப்பது எப்படி, ஒரே நேரத்தில் எத்தனை பற்களுக்கு வேர் சிகிச்சை செய்ய முடியும் என்பது போன்ற ரூட் கேனல் சிகிச்சை முறை குறித்துப் பார்ப்போம்.

Published:Updated:

Doubt of common man: ரூட் கேனல் சிகிச்சை முறை எப்படி செய்யப்படுகிறது? - முழுமையான விளக்கம்

வேர் சிகிச்சைக்குப் பிறகு பற்களைப் பராமரிப்பது எப்படி, ஒரே நேரத்தில் எத்தனை பற்களுக்கு வேர் சிகிச்சை செய்ய முடியும் என்பது போன்ற ரூட் கேனல் சிகிச்சை முறை குறித்துப் பார்ப்போம்.

ரூட் கேனல் சிகிச்சை
News
ரூட் கேனல் சிகிச்சை
விகடனின் `Doubt of common man' பக்கத்தில் ரூட் கேனல் சிகிச்சை முறை பற்றி விகடன் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of Common man
Doubt of Common man

ரூட் கேனல் சிகிச்சை முறை பற்றிய வாசகர்களின் பல்வேறு சந்தேகங்கள் குறித்து பல் மருத்துவர் கார்த்திக் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறிய பதில் பின்வருமாறு:

பல்
பல்

”பற்களில் பிரச்னை இரண்டு விதமாக ஏற்படும். 

1. சொத்தை – பல் சொத்தையால் வரும் பிரச்னை.

2. ஈறு - ஈறுகளினால் ஏற்படும் பிரச்னை.

இதில் சொத்தையால் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்வதற்கான சிகிச்சை முறையை வேர் சிகிச்சை (ரூட்‌கேனல்) என்கிறோம்.

ரூட் கேனல் சிகிச்சை செய்தால் மட்டுமே பற்களின் வலி குறையும். மேலும் வேர் சிகிச்சை முறையில் இயற்கையாக இருக்கும் பற்களை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. என்னதான் பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்களும், தரமான விலையுயர்ந்த செயற்கை பற்களும் இருந்தாலும் அவை நம் இயற்கையான பற்களுக்கு ஈடானவையாக மாறிவிட முடியாது.”

வேர் சிகிச்சை செய்யும் முறை:

”சேதம் அடைந்த பற்களைக் காப்பாற்றவே ரூட் கேனல் சிகிச்சை முறை. பொதுவாக முன்பற்களில் ஒரு வேரும், கடைவாய்ப் பற்களில் இரண்டிலிருந்து நான்கு வேர்களும் இருக்கும். சேதம் அடைந்த பல்லின் வேரில் இருக்கும் சதைகளைச் சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் கிருமிகள் உள்ளே செல்லாமல்  இருக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்படும். பற்களின் நடுவே துளையிட்டு வேரின் கடைசி வரை சென்று, அந்தப் பல்லை சரி செய்வர்.

இதைச் செய்துகொள்வதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். குழந்தைகளுக்குப் பால் பற்கள் விழுந்து மீண்டும் பற்கள் முளைக்க வேண்டும். இருப்பினும் பால் பற்களுக்கான வேர் சிகிச்சை முறையும் உள்ளது. பெரியவர்கள் செய்துகொள்வதற்கான வேர் சிகிச்சை முறையும் உள்ளது. பெரியவர்களிலும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இருப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் வேர் சிகிச்சை செய்து கொள்ளலாம். பற்களை எடுப்பதற்குத்தான் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு எல்லாம் சரி பார்க்க வேண்டும். இதற்கு அவசியமில்லை.

பல் சிகிச்சை | மாதிரி படம்
பல் சிகிச்சை | மாதிரி படம்

இந்த சிகிச்சைக்கான கட்டணம் நகரங்களைப் பொறுத்து மாறுபடலாம். மதுரை போன்ற நகரங்களில் ரூ.2,500 முதல் ரூ.5,000 வரையிலும், சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ரூ.3,000 முதல் ரூ.10,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. வேர் ‌சிகிச்சை ‌முறை முன்பைவிட இப்போது மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்பு கருவிகள் இல்லாமல் கையால்தான் இந்த சிகிச்சை செய்துகொண்டிருந்தார்கள். இப்போது நிறைய நவீனக் கருவிகள் வந்துவிட்டன. எக்ஸ்ரே எடுக்காமலேயே பற்களில் வேரின் அளவைக்கூடக் கணக்கிடக் கருவி, பல்லைத் துளையிடுவதற்கு ஏற்ற டிரில்லிங் கருவி என நவீனத்துவம் அடைந்திருக்கிறது. இதனால் விரைவாகவும் பாதுகாப்பான முறையிலும் சிகிச்சை செய்ய முடியும்.

வேர் சிகிச்சை முறையில் எந்த ஒரு பக்க விளைவும் இல்லை. செயற்கையாக எதையும் இந்தச் சிகிச்சை முறையில் சேர்ப்பதில்லை. வேர் சிகிச்சை செய்த பல்லில் சரியான முறையில் சிகிச்சை செய்திருந்தால் மீண்டும் அந்தப் பல்லில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் வேர் சிகிச்சை செய்த பல்லாகவே இருந்தாலும்கூட, அந்தப் பல்லின் ஈறுகளில் பிரச்னை ஏற்பட்டு, வலியோ அல்லது பல் ஆடும் பிரச்னை வந்தாலோ அதைச் சரிசெய்ய முடியாது.”

“வேர் சிகிச்சை செய்த பிறகு, தெரியாமல் எங்காவது இடித்துகொண்டால், பற்களில் ஏதோ ஊர்வது போன்றோ, ரத்தக்கசிவு ஏற்பட்டது போன்றோ உணர்வு இருக்கிறது. இதற்குத் தீர்வு என்ன?”

”பெரும்பாலும் சிகிச்சையைச் சரியான முறையில் செய்திருந்தால் இதுபோன்ற பிரச்னை வராது. அவ்வாறு தோன்றினால் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் எக்ஸ்ரே எடுப்பார்கள். அதுவே போதுமானதாகத்தான் இருக்கும். ஏதேனும் அசௌகர்யமாக உணர்ந்தால் மருத்துவரை அணுகலாம்.”

Doubt of Common man
Doubt of Common man

வேர் சிகிச்சைக்குப் பிறகு பற்களைப் பராமரிப்பது எப்படி?

”வேர் சிகிச்சைக்குப் பிறகு பற்களைப் பராமரிக்க தனியாக எந்த ஒரு மெனக்கெடலும் தேவையில்லை. ஆனால் சிகிச்சைக்குப் பிறகு, கேப் போடுவது அவசியம். இல்லையென்றால் பற்களில் சின்னச் சின்னப் பிளவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வலியும் ஏற்படலாம். எனவே கேப் போடுவது மிகவும் அவசியம். பாதுகாப்பானதும்கூட. மேலும் இது எந்தவித அசௌகரியத்தையும் உங்களுக்குத் தராது‌. இயற்கையான பற்களைப் போலவே இருக்கும்.”

ஒரே நேரத்தில் எத்தனை பற்களுக்கு வேர் சிகிச்சை செய்ய முடியும்..? 

ரொம்ப சின்னக் குழந்தைகளுக்கு மயக்க மருந்து செலுத்தி வேர் சிகிச்சை செய்வதாக இருந்தால், ஒரே சமயத்தில் எல்லாப் பற்களுக்கும்கூட செய்ய முடியும். ஏனென்றால் அவர்களுக்கு அவ்வப்போது பலமுறை மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை செய்வது சரியாக இருக்காது. பெரியவர்களுக்கு மரத்துப்போக ஊசி போட்டு பின் சிகிச்சை செய்வார்கள். 

இவர்களுக்கு ஒரே நேரத்தில் நான்கு முதல் ஆறு பற்கள் வரை சிகிச்சை செய்யலாம். ஒரு பல்லுக்கு வேர் சிகிச்சை செய்ய சராசரியாக 20 முதல் 40 நிமிடம் வரை ஆகலாம். அது பற்கள் மற்றும் வேர்களைப் பொறுத்தது. இரண்டு வேர் இருக்கும் பற்களுக்கு குறைந்தபட்ச நேரமும், நான்கு வேர் இருக்கும் பற்களுக்கு அதைவிட சற்று அதிக நேரமும் ஆகும். 

ரூட் கேனல் சிகிச்சை
ரூட் கேனல் சிகிச்சை

சிகிச்சை செய்து 24 மணி நேரம் வரை கடினமான உணவுப் பொருள்கள் எதையும் கடிக்காமல் இருக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்தும் கேப் போடும் வரை சற்று கவனமாக இருப்பது நல்லது. மீண்டும் கறை படியாமல் பார்த்துக்கொண்டாலே பற்களில் எந்தவித பிரச்னையும் மீண்டும் வராது.

பிறந்து 1 முதல் 10 வயது வரை சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துகளும் கால்சியமும் மட்டுமே பல்லுக்கு போய்ச் சேரும். அதன் பிறகு எந்தச் சத்துகளும் பெரிதாக பற்களைச் சென்றடைவதில்லை. 10 வயதுக்குப் பிறகு கரையின்றி சொத்தை பிடிக்காமல் மட்டுமே நம்மால் பராமரிக்க முடியும். பால், முட்டை, தயிர் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் பற்களை வலுப்படுத்த முடியும்” என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்கள்!