
“நாம் புழங்கும் இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது சமையலறை.
- அதை, `ஒரு குட்டித் தொழிற்சாலை’ என்று சொல்லலாம். கொதிக்கும் கலன்கள், அமிலங்களின் பயன்பாடு, கத்தி, முள்கரண்டி போன்ற கூர்மையான பொருள்கள் என அங்கே உள்ள பொருள்களை கவனமாகக் கையாளாவிட்டால் கண்கள் பாதிக்கப்படலாம்” என்கிறார் கண் மருத்துவர் திரிவேணி.
சமையலறை உபகரணங்களால் கண்ணில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தால், தண்ணீர்விட்டுக் கழுவக் கூடாது. சுத்தமான துணியால் முகத்தை லேசாக மூடி, உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

பாத்திரங்களைச் சுத்தப்படுத்தும் பொருள்கள் கண்களில்பட்டால் உடனே கண்களைக் கழுவ வேண்டும். இதை முதலுதவியாகச் செய்துவிட்டு, பிறகு கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். மிளகுத்தூள், மசாலாதூள் போன்ற காரம் அதிகமுள்ள மசால் பொடிகளைப் பாத்திரத்தில் கொட்டும்போது அவை காற்றில் பறந்து கண்களில் படுவதாலோ, அவற்றைப் பயன்படுத்திவிட்டு அதே கைகளால் கண்களைத் தொடுவதாலோ கண்களில் எரிச்சல் உண்டாகும். எனவே, இந்தப் பொடிகளை காற்றில் பறக்காத வண்ணம் பாத்திரத்தின் வாய்ப்பகுதிக்கு அருகேவைத்துக் கொட்ட வேண்டும். இந்தப் பொடிகளைப் பயன்படுத்தியதும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
தாளிக்கும்போதும், காய்கறிகளை வதக்கும்போதும் கண்களில் தெறிக்கலாம்.

எனவே, மிக நெருக்கமாக நிற்கக் கூடாது அல்லது நீளமான கரண்டியைப் பயன்படுத்துவது நல்லது. வெங்காயத்திலுள்ள `ஆலினேஸ்’ (Allinases) என்ற நொதி, நறுக்கும்போது சல்ஃபினிக் அமிலமாக (Sulfinic Acid) மாறுகிறது. எரிச்சல் கொடுக்கும் தன்மைகொண்ட இந்த அமிலம், காற்றில் ஆவியாகி கண்களில்படுவதால் கண்ணீர் வருகிறது. வெங்காயத்தை நறுக்குவதற்கு முன் குளிர்ந்த நீரில் போட்டுவைக்கலாம் அல்லது பத்து நிமிடங்களுக்கு ஃப்ரீஸரில்வைத்து நறுக்கினால் கண் எரிச்சல் ஏற்படுவது குறையும்.

சமைக்கும்போது அடுப்பிலிருந்து வெளியாகும் புகை, குழம்பு கொதிக்கும்போது வெளியாகும் நீராவி போன்றவை கண்களில் படுவதாலும் எரிச்சல் உண்டாகலாம். எனவே, புகை வெளியேறும்விதமாக ‘எக்சாஸ்ட் ஃபேன்’ (Exhaust Fan) அமைக்க வேண்டும் அல்லது சமையலறை காற்றோட்டமாக இருக்குமாறு ஜன்னல்கள் இருக்க வேண்டும். கண்களில் அடிபட்டாலோ அல்லது கண்கள் சிவந்து போனாலோ சிலர் மருந்துக்கடையில் ஏதாவது சொட்டு மருந்தை வாங்கிப் பயன்படுத்துவார்கள். அது ஆபத்து. கண்களில் தீக்காயம்பட்டால் மஞ்சள்தூள், களிம்பு, பேனா மை போன்றவற்றைப் போடக் கூடாது. அவற்றைப் பயன்படுத்தினால் காயத்தின் தீவிரத்தைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாது. மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படும். தொற்று ஏற்படும்.

கண்களில் எண்ணெய்விடுவது, தாய்ப்பால்விடுவது போன்ற சுய மருத்துவத்தைச் செய்யக் கூடாது.

முக்கியமாக, கண்களில் வலி, எரிச்சல், சிவந்துபோவது, கண்களைத் திறந்துவைத்திருக்க முடியாதது, தொடர்ச்சியான உறுத்தல், இமைகளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்..