மும்பையில், அழகு சாதன க்ரீமால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது சரும நிறத்தை அதிகரிக்க விரும்பி தனக்குத் தெரிந்த அழகு நிலையத்தில் முகத்துக்குப் பூசும் க்ரீம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த க்ரீம் தடவிய சில நாள்களிலேயே முகம் நன்றாக பொலிவடைவதையும், சரும நிறம் கூடியதையும் உணர்ந்துள்ளார். இதனால் அதே க்ரீமை வாங்கி, அந்தப் பெண்ணின் சகோதரி மற்றும் தாயார் இருவரும் பயன்படுத்தி உள்ளனர். அவர்களுக்கும் சரும நிறம் சிவப்பாக மாறியுள்ளது.

அதேநேரம், இந்த அழகு சாதன க்ரீமை பயன்படுத்தத் தொடங்கிய நான்கே மாதங்களில் மூவருக்கும் அடுத்தடுத்து சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு, `Glomerulonephritis' எனும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னை இருப்பது தெரிய வந்தது. இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு சிறுநீரகத்தின் சின்னஞ்சிறிய வடிகால்கள் பாதிப்படையும். இதற்கான சிகிச்சை எடுக்கத் தொடங்கிய போது மூவருக்கும் ஒன்றாக இந்த பாதிப்பு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என ஆராயத் தொடங்கினர்.
அப்போது தான் மூவரும் பயன்படுத்திய அழகு சாதனப்பொருள் ஏதாவது காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தோன்றியது. இதையடுத்து, அவர்கள் மூவரும் பயன்படுத்திய அனைத்து அழகு சாதனப் பொருள்கள், KEM மருத்துவமனை ஆய்வுக்க்கூடத்தில் சோதிக்கப்பட்டன. அதில் சரும நிறத்துக்காக அவர்கள் பயன்படுத்திய சிவப்பழகு க்ரீம்தான் காரணம் என்ற உண்மை வெளியானது.
சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான துக்காராம் ஜமால் கூறுகையில், `` குறிப்பிட்ட அந்த க்ரீமில் மெர்குரியின் அளவு மிக அதிகமாக இருந்தது. அது அந்தப் பெண்களின் ரத்தத்திலும் மெர்குரி அளவை அதிகமாக்கி இருக்கிறது. சாதாரணமாக ஒருவரின் உடலில் 7ppm என்ற அளவில் இருக்க வேண்டிய மெர்குரி அளவு, அவர்களின் உடலில் 46 வரை இருந்தது. மெர்குரி சருமத்தில் உள்ள செல்களில் செயலாற்றி சருமம் கருமை அடைவதைத் தடுத்து சிவப்பாகச் செய்யும். ஆனால் அத்துடன் சேர்த்து இவர்களின் சிறுநீரகத்துக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அழகு சாதனப் பொருள்களில் இருக்கும் மெர்குரி பற்றி சரும மருத்துவர் மாயாவிடம் கேட்டோம், ``மெர்குரி என்பது ஒரு ஹெவி மெட்டல். இதை உள்ளடக்கிய அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தும்போது சருமம் வெண்மையாக மாறுவதாகத் தோன்றலாம். ஆனால் மெர்குரி உள்ள பொருள்களைப் பயன்படுத்துவது உடலுக்கு பல தீமைகளைத் தரும். சிறுநீரக பாதிப்பு மட்டுமல்லாமல் உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கும்.
தற்போது அழகு சாதனங்களில் மெர்குரி பயன்பாடு தடை செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கிரீம்களில் மெர்குரி பயன்படுத்துவது இல்லை. அழகு சாதன பொருள்களின் பின்குறிப்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருள்களின் விவரங்களில் மெர்குரியை பார்க்க முடியாது. அதை மீறி குறிப்பிட்ட க்ரீமில் மெர்குரி இருக்கிறது என்றால் அதை ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்து மட்டுமே கண்டுபிடிக்க முடியும். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க நினைத்து, பாதுகாப்பற்ற, முறையற்ற க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தும்போது அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்" என்றார்.