Election bannerElection banner
Published:Updated:

“1 மணி நேரம்!” - அஜய் ரத்தினத்தின் ஃபிட்னஸ் ரகசியம்

“1 மணி நேரம்!” - அஜய் ரத்தினத்தின் ஃபிட்னஸ் ரகசியம்
“1 மணி நேரம்!” - அஜய் ரத்தினத்தின் ஃபிட்னஸ் ரகசியம்

“1 மணி நேரம்!” - அஜய் ரத்தினத்தின் ஃபிட்னஸ் ரகசியம்

மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம் என்றால், 'எங்கே அஜய் ரத்னம்' என்று தேடும் அளவுக்கு 25 ஆண்டுகளாக 'ஃபிட்னஸ்' மெயின்டைன் செய்து வருபவர் அஜய் ரத்னம். 

"எப்படி சார் இதெல்லாம்" என்று கேட்டால் கலகலவென்று சிரித்தபடி ரகசியம் பகிர்கிறார்.

“ ‘சவுண்ட் மைண்ட் இன் ஏ சவுண்ட் பாடி' னு சொல்லுவாங்க. நம்ம மனம் நல்ல நிலைமையில இருக்கணும்னா,  அதுக்கு அஸ்திவாரமே நம்ம உடல், நல்ல நிலையில இருக்கணும்ங்கிறதுதான். மனம், உடல் இரண்டுமே சமமான  நிலையில் இருந்தால்தான், நம்மால் எதையும் சரியாகச் செய்ய முடியும். எதையும் சரியாகச் செய்தால்தான்  எதிலும் நமக்கு வெற்றி கிடைக்கும். 

மனமும் உடலும்,  நெய்யும்  தொன்னையும் (வாழைமட்டையில் செய்யப்படும் சிறு கோப்பை) மாதிரி,  மனம் நெய்யின்னா  உடல் தொன்னை மாதிரி. தொன்னை கிழிஞ்சுப் போயிருந்தா, நெய்யெல்லாம் வீணாயிடும். எவ்வளவு ஆற்றல் மிக்க உடலாக இருந்தாலும், மனம் நன்றாக இருக்கவேண்டும். எவ்வளவு வலிமை வாய்ந்த மனமாக இருந்தாலும், நம் உடல் நலிவுற்று இருந்தால்,  நமது ஆற்றல் வீணாகப்போய்விடும். அதனால இரண்டையுமே இரண்டு கண் மாதிரி காப்பாற்றணும்.

உடம்பை ஃபிட்டா வச்சுக்கனுன்னா,  24 மணிநேரத்துல தினமும் ஒரு மணி நேரத்தை நமக்கே நமக்குனு ஒதுக்கியே ஆகணும். அப்படி ஒதுக்கினால்தான் நமது உடல், நாம் சொன்னதைக் கேட்கும். அவரவர் வசதிக்கு ஏற்றபடி வீட்டின் அருகாமையில் உள்ள ஜிம்முக்குப் போகலாம். அப்படி போக முடியவிட்டால், கட்டாயம் நடைப்பயிற்சி செய்யனும். இதை நாம் பழக்கத்துக்குக் கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா, சோம்பல், சாக்குப்போக்குகளை ஓரம் கட்டிவிட்டுத் தொடர்ந்து 21 நாட்களுக்கு நடைப்பயிற்சி செய்து விட்டோமானால், அதன் பிறகு இந்த வழக்கம் நமக்கு பழக்கமாகி விடும்.  

நடைப்பயிற்சிப் போகும்போது தினமும் ஒரே மாதிரி செய்யாமல்,  ஜாக்கிங், ஹாஃப் ஸ்பீடு ஜாக்கிங், ஸ்பீடு ஜாக்கிங்,  ரன்னிங், ஸ்பீட் ரன்னிங், ஹாஃப் ஸ்பீட் ரன்னிங் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமா பயிற்சி செய்யனும். அப்படிச் செஞ்சாதான் சலிப்பில்லாமல் நம்மால தொடர்ந்து பயிற்சி செய்ய முடியும். இந்த நடைப்பயிற்சி நமக்கு புதிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். தினமும் நம் உடம்பு, நமக்குப் புதிதாகக் கிடைக்கும்.

பெரும்பாலானவர்கள், இந்த நடைப்பயிற்சியை  தொடர முடியாமல் போவதற்குக் காரணம்,  தினமும் இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்காமல் இருப்பது தான். டி.வி., வாட்ஸ்ஆப், மொபைலில் சினிமா என தூக்கத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள். சீக்கிரம் தூங்கி, சீக்கிரம் எழுவது, நம் ஆரோக்கியத்தின் முதல் படி. இரவு 9.30 மணிக்கு படுக்கப் போனீர்களென்றால், காலை 5.30 மணிக்கு தானாக விழிப்பு வந்துவிடும். நம் உடலே சிறந்த கடிகாரம். அதற்கு எந்த அலராமும் தேவையில்லை.

இப்படி உடம்பை சரியா வெச்சுக்கிறதுக்கு நடைப்பயிற்சி மட்டும் போதாது. நாம் சாப்பிடுற உணவு வகைகளும் உணவு முறைகளும் ரொம்பவும் முக்கியம். என்ன வேண்டுமானாலும், உங்க மனசுக்குப் பிடிச்சதை சாப்பிடுங்க. ஆனா, சாப்பிடும்போது இதைச் சாப்பிடலாமா?  இது நமக்கு சேருமா? சேராதான்னு யோசிக்காதீங்க. அப்படி யோசனை வந்துடுச்சுனா அந்தப்பொருளைச் சாப்பிடாதீங்க. 

எல்லா விஷயத்திலும் நாம் செய்யும் செயல்களுக்கு மனம்தான் பின்புலமா இருக்கும். அதுவும் சாப்பாட்டு விஷயத்துல சந்தேகப்பட்டுக்கிட்டே சாப்பிட்டா அந்த உணவு எதிர்வினை புரியாத்தான் செய்யும்.

அடுத்து, சாப்பிடும் அளவு...  கால் வயிறு காற்று, கால் வயிறு தண்ணீர் அரை வயிறு உணவுனு சாப்பிடுங்க. அப்படிச் சாப்பிட்டால்,  எந்தப் பிரச்னையும் சாப்பாட்டால வராது. 

‘காலை உணவை அரசனைப் போலவும் மதிய உணவை அரசியைப் போலவும் இரவு உணவை பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிட வேண்டும்' -ன்னு உணவு பற்றிய பொன்மொழி ஒன்று உண்டு. ஆனால், நகரம் சார்ந்த அவசர வாழ்க்கையில் இதை தலைகீழாகக் கடைபிடிக்கின்றார்கள். 

காலையில் அவசர அவசரமாக இரண்டு இட்லி... இல்லாவிட்டால் ஒரு ஆப்பிள்... அல்லது மார்னிங் டிபனை ஸ்கிப் செய்துவிட்டுப் போவதென பழகிவிட்டார்கள். இரவு நிதானமாக வயிறு புடைக்க சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கிவிடுகிறார்கள். பிறகு உடல் எடை அதிகமாகாமல் எப்படி இருக்கும்? அப்புறம், 'உடம்பைக் குறைக்கிறேன்' என வயிற்றைக் காயப்போடுவார்கள். ஒரு வாரம், ஒரு மாதம், வரை தாக்குப் பிடிப்பார்கள். அப்புறம் வெறுத்துப்போய் முன்பு இருந்ததைவிட பல மடங்கு சாப்பிடுவார்கள். முன்பு இருந்த எடையைவிட அதிகமாக எடை போட்டுவிட்டு அவதிப்படுவார்கள். இது கூடவே கூடாது. 

இப்படி நாம் சாப்பிடும் உணவுகளால் நம் உடலில் தங்கும்  நச்சுக்கள்தான் நம் உடம்பைக் கெடுக்கின்றன. வாய்வுக் கோளாறு, சர்க்கரை,  ரத்த அழுத்தம் என பல பிரச்னைகள் உருவாகிறது. இதில் மனம் சோர்ந்துப் போய்விடுகிறது. 

ஒரு குட்டிக்கதை 

ஒரு அரசமரத்தடியில் இருந்த சாமியாரிடம்  போய்  ஒருவன் ,'சுவாமி, உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்பட்டு பிரச்னையில சிக்கித் தவிக்கிறேன்'னு சொன்னான்.

உடனே அவர், 'எதிர்த்தாப்ல இருக்கிற கோயிலை 108 முறை சுற்றிவந்து சாமி கும்பிடு'ன்னார். இவனும் அதேமாதிரி செய்தான். உடம்புல உள்ள நச்சுக்கள் எல்லாம் வியர்வையாக வெளியேறிடுச்சு. போய் ஒரு குளியலைப் போட்டான். அவனுக்கே அவன் புதுசா தெரிஞ்சான். மைன்டு ஃப்ரெஸா வேலை பார்க்க ஆரம்பிக்குது. எதை முதல்ல செய்யணும். எதை அப்புறம் பார்த்துக்கலாம்னு செய்ய ஆரம்பிச்சான். எளிதாக தன் பிரச்னையிலிருந்து வெளியில வந்தான்.

நம் உடலில் சேரும் நச்சுக்களை சிறுநீரகத்தால மட்டும் வெளியேத்திட முடியாது. அவற்றை வெளியேற்ற நடைப்பயிற்சி ரொம்பவும் முக்கியம். நம்முடைய தசைகள், செல்கள், மூட்டுக்கள் இவற்றில் தங்கும் நச்சுக்களை, வாயுக்களை வெளியேற்ற நடைப்பயிற்சி பெரிய அளவுல உதவுது. முகம், தோல், எல்லாம் பொலிவு பெற ஆரம்பிக்குது.  13 வயசுல ஸ்கூல் என்.சி.சி யில சேர்ந்தேன். 40 ஆண்டுகளாக, உடற்பயிற்சியும் நடைபயிற்சியும் செஞ்சுக்கிட்டிருக்கேன். அதுதான் என்னோட ஃபிட்னெஸ் ரகசியம்'' - நெஞ்சை நிமிர்த்திச் சொல்லி கைகுலுக்கி விடை கொடுக்கிறார் அஜய் ரத்தினம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு