ஹெல்த்
Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

சல்மான் கான்

சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் ஹீரோ அர்ஜூன் கபூரின் எடை 140 கிலோ. அவரின் அப்பா போனி கபூர், பெரிய தயாரிப்பாளர். அதனால், பையன் ஹீரோ ஆவது எளிது. ஆனால், எடையைக் குறைக்காமல் என்ன செய்ய முடியும்? அப்போது உதவ முன்வந்தார் சல்மான்கான். அவரின் வழிகாட்டுதலில் அர்ஜூன் பயிற்சி செய்ய, 70 கிலோவாகக் குறைந்தது எடை. இப்போது, சிக்ஸ்பேக்கில் லைக்ஸ் அள்ளுகிறார் அர்ஜூன். ஃபிட்னெஸ் என்றதும் பாலிவுட் திரும்புவது சல்லுபாய் திசை நோக்கித்தான். சல்மான் தரும் ஃபிட்னெஸ் டிப்ஸ்...

ஸ்டார் ஃபிட்னெஸ்

• வொர்க்அவுட்டை, காலுக்கான பயிற்சிகள் ஒரு பகுதி, தோள்பட்டை கைகள் அடுத்து என மூன்று நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு செஷன் முடிந்ததும் ஓய்வு எடுங்கள். இந்த முறைப்படி தசைகளைச் சீராகத் தயார் செய்யலாம்.

• வாரத்தில் ஏழு நாட்களும் உடற்பயிற்சி அவசியம்தான். ஆனால், அதை ஜிம்மில்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. இரண்டு நாட்கள் விளையாட்டு, நான்கு நாட்கள் ஜிம், ஒரு நாள் வீட்டுப்பயிற்சிகள் எனச் செய்யலாம்.

• உடலை வருத்திப் பயிற்சி செய்யும்போது, மூச்சை வெளியேவிட வேண்டும். அப்படி இல்லாமல், அடக்கிவைப்பது சிக்கலில் முடியலாம்.

• மாதத்துக்கு ஒரு முறை பயிற்சிகளை மாற்றுங்கள். செய்த பயிற்சிகளையே திரும்பச் செய்யும்போது, உடல் அதற்கு ட்யூனாகி, பலன்கள் கிடைப்பது குறைந்து விடலாம்.

• எல்லாவற்றுக்கும் ஊக்கம் என்பது முக்கியம். அதனால், வொர்க்அவுட், எடை போன்றவற்றைத் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும். பாசிட்டிவோ, நெகட்டிவோ அது நம்மை ஊக்கப்படுத்தும்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

சோனம் கபூர்

யற்கையிலே ஒல்லி உடல்வாகு இல்லை சோனம் கபூருக்கு. நடிக்க வரும் முன் எடை 85 கிலோ. நடிப்பது என முடிவெடுத்த பின், அதற்காகப் பிரத்யேகமாக அட்டவணை போட்டு பின்பற்றிவருகிறார்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

• பெரும்பாலான நடிகைகள்போல சோனமும் யோகா பக்தை. தினமும் காலையில் 30 நிமிடங்கள் யோகா தான் சோனாமின் அலாரம். ‘இயற்கையான அழகு சாதனம் யோகா’ என்பது சோனம் பன்ச்.

• பிரவுன் பிரெட்டும், முட்டையின் வெள்ளைப் பகுதியும், உடன் கொஞ்சம் புரோட்டின் ஷேக்கும்தான் சோனமின் காலை உணவு. சிங்கப்பூரில் மாணவியாக இருந்தபோது, சோனம் குண்டாக இருந்தார். ‘அதற்குக் காரணம் காலையில் அதிகம் சாப்பிட்டதும், சில நாட்கள் சாப்பிடாமல் இருந்ததுமே’ என்கிறார்.

• ‘தொடர்ந்து உடற்பயிற்சி செய்தும் எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை என்றால், உடனே மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஹார்மோன் குறைபாடு இருந்தால், எல்லா முயற்சிகளும் வீணாகக்கூடிய சாத்தியங்கள் உண்டு’ என்கிறார்.

• ‘உடற்பயிற்சியின் முக்கிய நோக்கம் ஆரோக்கியமாக இருப்பதுதான். உடலின் வடிவம் இரண்டாம்பட்சம்தான். பயிற்சிகளையும், உடற்பயிற்சி நேரத்தையும் ஆரோக்கியத்தை மனதில்வைத்தே முடிவு செய்ய வேண்டும்’ என்பது இவரின் ஸ்ட்ராங் அட்வைஸ்.

• ‘ஒன்றை இழக்காமல் இன்னொன்றைப் பெற முடியாது. உடற்பயிற்சி என்பது நம் வாழ்க்கையை அழகாக்கும் ஒன்று. எனவே, சிரமம் பார்க்காமல் தினம் ஒரு மணி நேரம் செய்தால், மற்ற 23 மணி நேரமும் சந்தோஷம் நிச்சயம்’ என்கிறார் இந்த பாலிவுட் ஏஞ்சல்.

- கார்க்கிபவா