உடலினை உறுதி செய் - 6

நிற்பது, நடப்பது, உட்காருவது என சாதாரண செயல்களிலேயே சிலரது உடல் அசைவுகள் அழகாக வெளிப்படும். இந்த அழகான உடல் அமைப்பும் வலுவும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் மட்டும் வராது. நாம் எப்படி நிற்கிறோம், நடக்கிறோம், அமர்கிறோம் என உடலின் நிலையை (Posture) சரியாக மாற்றிக்கொண்டால் உடல் உறுதி அடையும். இதற்கான பயிற்சிகள் உடலைக் கட்டுடலாக வடிவமைக்கும்.
நவ்காசனம் (Naukasana)
விரிப்பின் மீது மல்லாந்து படுக்க வேண்டும். கைகளை உடலுக்கு அருகில் வைத்து, உள்ளங்கையை தரையில் பதிக்க வேண்டும். மூச்சை நன்கு இழுத்து, மூச்சைப் பிடித்தபடி, கைகளையும் கால்களையும் ஒன்றாக உயர்த்த வேண்டும். இந்த நிலையில், பார்க்க ‘படகு’ வடிவத்தில் உடல் இருக்கும். கண்கள் நேராகப் பார்த்தபடி இருக்கட்டும். பிறகு மூச்சை விட்டபடி உடலைத் தளர்த்தி, பழைய நிலைக்கு வர வேண்டும். இந்தப் பயிற்சி செய்யும்போது, சின்ன உடல்நடுக்கம் இருக்கும். விரிப்பின் மீது அப்படியே படுத்து ஓய்வு எடுப்பதன் மூலம் நடுக்கம் சரியாகிவிடும். இதை, மூன்று முறை செய்யலாம்.
கவனிக்க: கர்ப்பிணிகள், உயர் ரத்த அழுத்தம், அடி வயிறு இறக்கம், வலிப்பு நோய், மூல நோய் உள்ளவர்கள் இதைச் செய்ய வேண்டாம்.

பலன்கள்
• அடிவயிற்று உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும்.
• வயிற்றுத் தசைகள் உறுதியாகும். தொப்பை கரையும்.
• கால் மற்றும் தோள்பட்டை, புஜம் ஆகியவற்றின் வலிமை அதிகரிக்கும்.
• குழந்தையின்மை பிரச்னை தீர உதவும். பி.சி.ஓ.டி குணமாகும். சீரற்ற மாதவிலக்கு சரியாகும்.
• வடிவான கட்டுடல் கிடைக்கும்.
• சிறுநீரகம், ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பியின் செயல்திறன் மேம்படும்.
• சர்க்கரை நோயாளிகள் செய்துவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
சேது பந்தாசனம் (Sethu Bandhasana)
விரிப்பின் மீது மல்லாந்து படுக்க வேண்டும். கைகளை உடலுக்கு அருகில் வைத்து, உள்ளங்கையை தரையில் பதிக்க வேண்டும். இப்போது, கால்களை மடக்கி, பாதங்களை தரையில் பதிக்க வேண்டும். மூச்சை இழுத்துக்கொண்டே, உடலை மட்டும் மேலே உயர்த்த வேண்டும். முடிந்த அளவுக்கு தாடை, நெஞ்சுப் பகுதியைத் தொடுவதுபோல... அதாவது பாலம் போல உடலை உயர்த்த வேண்டும். இந்த நிலையில், பின் கழுத்து, தோள்பட்டை தரையில் இருக்க வேண்டும். பின் மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதை, மூன்று முறை செய்ய வேண்டும்.
கவனிக்க: அசிடிட்டி, தலைவலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

பலன்கள்
• மார்பகம், கழுத்து, முதுகு ஆகியவற்றுக்கு, சிறந்த ஸ்ட்ரெச்சிங் பயிற்சி.
• நுரையீரல் வலுவடைந்து, தைராய்டு பிரச்னை குணமாக உதவும்.
• முதுகுப்புறத் தசைகள் வலுவடையும்.
• உடல்சோர்வு நீங்கும்.
• அடி முதுகுவலி, முதுகுவலிப் பிரச்னை சரியாகும்.
• செரிமான சக்தி சீராகும்.
• அடிவயிற்று வலி, மெனோபாஸ் தொந்தரவுகள் குணமாகும்.
அர்த்த உஷ்ட்ராசனம் (Ardha Ustrasana)
கால்களை மடக்கி, பாதங்கள் மீது உட்கார வேண்டும். கைகள் தொடையின் மீது வைக்க வேண்டும். இது வஜ்ராசனம் நிலை. இந்த நிலையில் இருந்து, முட்டி போட்டு நிற்க வேண்டும். கைகள் சாதாரணமாக தொங்கிய நிலையில் இருக்கட்டும். இப்போது, இடது கையால் இடது காலைத் தொட வேண்டும். வலது கையை எதிர் திசையில் மேலே உயர்த்த வேண்டும். பழைய நிலைக்கு வந்து, வலது கையால் வலது காலைத் தொட்டபடி, இடது கையை மேலே உயர்த்த வேண்டும். இதேபோல, மூன்று முறை செய்துவிட்டு, வஜ்ராசனம் நிலைக்கு வர வேண்டும்.
கவனிக்க: உயர் ரத்த அழுத்தம், எலும்பு அடர்த்தி குறைதல் பிரச்னை, வெர்ட்டிகோ, தலைசுற்றல் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

பலன்கள்
• சீரான ரத்த ஓட்டம் மூளைக்குச் செல்லும்.
• அடி முதுகில் வரக்கூடிய பிரச்னைகள் சரியாகும்.
• சுவாசப் பிரச்னைகள் சரியாகும்.
• தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் அவசியம் செய்ய, பலன்கள் கிடைக்கும்.
• சர்க்கரை நோயாளிகள் செய்ய, நோய் கட்டுக்குள் வரும்.
• நடக்கும்போது கூன்போட்டு நடப்பவர்கள், இதைச் செய்துவர, உடலின் அமைப்பு நேராகும்.
• வயதானவர்களும் செய்யலாம். ஆனால், பாதுகாப்பாக பக்கத்தில் தலையணையை வைத்துக்கொள்வது நல்லது.
• முதுகுத்தண்டு நேராகும். முதுகுத்தண்டு வலி நீங்கும்.
- ஆரோக்கியக் கலை அறிவோம்
- ப்ரீத்தி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
மாடல்: வந்தனா
உதவி: ட்ரைமெட் மருத்துவமனை