தினமும் வொர்க்அவுட் செய்வதைத் தவிர்க்கும் பலரும் சொல்லும் காரணம் `நேரம் இல்லை.’ ஆனால், அது உண்மையா? `இவரு பெரிய அமெரிக்க ஜனாதிபதி... எப்பவும் பிஸி’ என்று கிண்டலுக்காகச் சொல்லப்படுவதைக் கவனித்து இருப்போம். உண்மையில், அமெரிக்க அதிபர் தினமும் உடற்பயிற்சி செய்கிறார்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

• `இளம் வயதிலேயே உடற்பயிற்சியை என் வாழ்வின் ஓர் அங்கமாக்கிக்கொண்டேன். எனக்காகவும் சரி, நாட்டுக்காகவும் சரி... உடல்நலம் முக்கியம் என்பதை அப்போதே நான் அறிந்திருந்தேன். அதனால்தான் சொல்கிறேன், இளைஞர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறைகொள்ள வேண்டும்’ என்கிறார்.

• 22 வயதில் இருந்தே புகையிலை, மது இரண்டையும் ஒபாமா தொடுவது இல்லை. `நம் உடலுக்குள் செலுத்தும் அசுத்தங்களைக் குறைப்பதுதான் எளிதான உடற்பயிற்சி’ என்பது ஒபாமா ஸ்டைல்.

• ஒபாமா இளம் வயதில் தனது உடற்பயிற்சிகளைத் தொடங்கிய காலத்தில், தினமும் மூன்று மைல் ஓடுவார். இன்று வரை அந்தப் பழக்கம் மாறவில்லை. `உடற்பயிற்சி என்பது அன்றாட விஷயம். அது நம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்’ என்பது ஒபாமாவின் ஹெல்த் ரூல்.

• விளையாட்டின் மீது ஒபாமாவுக்கு ஆர்வம் அதிகம். வாரம் நான்கு நாட்கள் வொர்க்அவுட். கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகள் இரண்டு நாட்கள். `விளையாட்டும் உடற்பயிற்சிதான். ஆனால், உடற்பயிற்சியை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்பது ஒபாமா பன்ச்.

• ஆர்கானிக் உணவுகள் மீது ஒபாமாவுக்கு நம்பிக்கை அதிகம். அமெரிக்கா முழுவதும் பிரபலமான ஜங்க் ஃபுட்கள் அவருக்கு அலர்ஜி. நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவு வகைகள் எல்லாமே ஒபாமாவின் ஃபேவரிட்’ என ரகசியம் சொல்கிறது வெள்ளை மாளிகை கிச்சன்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

• ஒபாமாவைவிட அவர் மனைவி மிஷல் ஒபாமா உடல்நலனில் அதிக அக்கறை கொண்டவர். தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு அமெரிக்கர்களை ‘ஓடு... ஓடு’ என முடுக்குபவர் இவர்தான்.

• ‘`உண்மை அறிவோம்’ என்பது முதல் பாயின்ட். உடற்பயிற்சிகளைத் தொடங்கும் முன், என்ன செய்தால் நம் உடல் எப்படி ரியாக்ட் செய்யும் என்பதை அறிவது அவசியம்’ என்கிறார் மிஷல். அதனால், முறையான ஆலோசகரை நாடி, அவரிடம் கேட்டுப் பயிற்சிபெறச் சொல்கிறார்.

• `ஆரோக்கிய உணவே போதுமானது. நாம் உண்ணும் அதிகப்படியான உணவைச் செரிக்கத்தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. எனவே, தேவையானவற்றை, அளவாக உண்பதும் ஒருவித உடற்பயிற்சிதான்’ என்கிறார்.

• `நாம் சொல்வதை உடல் கேட்டால்தான், மனமும் கேட்கும். எனவே, உங்கள் உடலை நீங்கள் விரும்பும்வண்ணம் பராமரிக்கப் பழகுங்கள். மற்றவை தானாக நிகழும்’ என்பது ஒபாமா தம்பதி கண்ட உண்மை.

• `குழந்தைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டிய மிக முக்கியமான விஷயம், உடற்பயிற்சிதான். எனவே, அதில் உங்கள் செல்லத்தைக் காட்டாதீர்கள்’ என்கிறார்.

•  கடந்த ஐந்து ஆண்டுகளாக  ‘லெட்ஸ் மூவ்’ என்ற உடற்பயிற்சி சார்ந்த பிரசாரத்தை மேற்கொள்கிறார் மிஷல். `அமெரிக்கர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையே எனது லட்சியம்’ என்கிறார் ஃபர்ஸ்ட் லேடி.

- கார்க்கிபவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு