Election bannerElection banner
Published:Updated:

“சந்தோஷமா இருந்தாலும் ஆடுவேன். சந்தோஷமா இருக்கவும் ஆடுவேன்!”

‘மலர் டீச்சர்’ ஃபிட்னெஸ் சீக்ரெட்

‘பிரேமம்’ படம் மொழிகளைத் தாண்டி ஹிட் அடிக்க முக்கியக் காரணம் மலர் டீச்சர் கதாபாத்திரம். இன்று தென் இந்தியாவே ‘மலர் டீச்சர்... மலர் டீச்சர்’ என மயங்கிப்போய் பொக்கே நீட்டுகிறது. தென்னிந்திய சினிமாவே  வலைவீசித் தேடிக்கொண்டிருக்க, நடிப்புக்கு சின்ன பிரேக்விட்டு ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ் படிக்கப் போய்விட்டார் சாய். மலர் டீச்சரின் ஃபிட்னெஸ், பியூட்டி ரகசியம் என்ன..?

“எம்.பி.பி.எஸ் கடைசி வருஷம் படிக்கிறேன். ப்ராக்டிக்கல், எக்ஸாம்னு பரபரப்பா இருக்கேன். அடிப்படையில் நான் ஒரு டான்ஸர். டான்ஸ்செய்ய உடம்பில் நல்ல ஃப்ளெக்சிபிளிட்டி இருக்கணும். அதனால்,  எப்பவுமே என்னோட ஃபிட்னெஸுக்குத்தான் முதல் இடம். நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கும்போது, டான்ஸ் ஆடிப் பரிசு வாங்கினேன். அப்போ ஆரம்பிச்சதுதான் இந்தப் பயணம். பரிசுக்காக இல்லாவிட்டாலும், என் சந்தோஷத்துக்காக ஆட ஆரம்பிச்சுட்டேன். 

வீட்ல ஒரு டயட்டீஷியனுக்கு நிகரா என்னோட அம்மா, நிறைய தால், ராஜ்மா, போன்ற புரதம் நிறைந்த உணவுகளைக் கொடுப்பாங்க. அதுதான் என் எனர்ஜிக்குக் காரணம். நிறைய டான்ஸ் ஆடுவேன் என்பதால், பசியும் அதிகமா இருக்கும். ஆனா, எவ்வளவு டான்ஸ் ஆடினாலும் சோர்வடைய மாட்டேன். என் உணவில், பழங்களுக்கு மிக முக்கிய இடம் இருக்கு. சாப்பாடுகூட சாப்பிடாம இருந்திடுவேன். ஆனா, பழங்கள் இல்லைன்னா ரொம்பக் கஷ்டம். இன்னும் சொல்லணும்னா, என்னோட சாப்பாடே ஃப்ரூட்ஸ்தான். தண்ணீர், ஜூஸ், இளநீர், மோர்னு நிறைய எடுத்துப்பேன். 

“சந்தோஷமா இருந்தாலும் ஆடுவேன். சந்தோஷமா இருக்கவும் ஆடுவேன்!”

`அசைவ உணவில் சத்து நிறைவாக இருக்கு’னு சொல்வாங்க. ஆனா, நான் அசைவம் தொடவே மாட்டேன். இருந்தாலும், அதைச் சாப்பிட்டு வளர்ந்தவங்களுக்கு சரிசமமா எனக்கு எனர்ஜி இருக்கும். 

 சின்ன வயசுல இருந்தே நான், அம்மா, தங்கச்சினு வீட்டுல எல்லாரும் ஒண்ணா யோகா செய்வோம்.  தினமும் காலையில் ஒரு லிட்டர் தண்ணீரும், நிறையப் பழங்களும் சாப்பிடுவேன்.  கிரீன் டீயில் ஆரம்பிச்சு, நேரம் தவறாம, உணவு உட்கொள்வது என்னோட குட் ஹெல்த்துக்குக் காரணம்னு நினைக்கிறேன். உணவிலும் எண்ணெயில் பொரித்தது, வதக்கியதைத் தவிர்த்து,  ஆரோக்கியமான ஆர்கானிக் ஃபுட்ஸ் சாப்பிடுவேன்.

 அழகுக்கு ரொம்ப மெனக்கெடுவது இல்லை. கெமிக்கல் ரசாயனங்கள் நிறைந்த சோப் போடுவது இல்லை. பயத்தம் பருப்பு மாவுதான் என்னோட சோப். தலைமுடிக்கு எந்த ரசாயனமும் பயன்படுத்துவது இல்லை. முடிக்குத் தேவையான, சத்தான உணவை மட்டுமே சேர்த்துக்கொள்வேன். கீரை, பழங்கள், பச்சைக் காய்கறிகள் அதிகம் எடுத்துப்பேன்.

நான் முறையாக எந்த நடனமும் கற்றுக்கொள்ளவில்லை. இன்டர்நேஷனல் டான்ஸ் ஷோஸ் பார்த்துத்தான் நானும் அம்மாவும் எப்படி ஆடலாம்னு டிஸ்கஸ் செய்வோம். அப்படித்தான் டான்ஸ் ஆடக் கத்துக்கிட்டேன். இதுவே என்னுடைய ஃபிட்னெஸுக்கு உதவியாக இருக்கு. இப்போ, டெய்லி டான்ஸ்தான். நான் சந்தோஷமா இருந்தாலும் ஆடுவேன். சந்தோஷமா இருப்பதற்காகவும் ஆடுவேன். நான் பாட்மின்டன் பிளேயர். தினமும் விளையாடுவேன். எந்த ஒரு விளையாட்டையும் பொழுது போக்குக்காக எப்போதாவது ஒருமுறை ஆடுறதைவிட, தினமும் விளையாடினாலே போதும், ஃபிட்டாக இருக்கலாம். ஜார்ஜியாவில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ‘லாங் வாக்’ செல்வேன். என் தாத்தா ஒரு துளசி மாலையைத் தந்தார். அதைவெச்சு தினமும் ஒரு மணி நேரம், 100 முறை காயத்ரி மந்திரம் சொல்லி தியானம் செய்வேன். இது என்னோட கான்சன்ட்ரேஷனுக்கும் ஸ்ட்ரெஸ் ரிலீஃப்க்கும் உதவியாக இருக்கு.

நம் உடல், நமக்காக எவ்வளவோ செய்கிறது. அதற்கு, முதலில் கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கணும். அதை நேசிக்கப் பழகணும். ஒரு நோய் வந்தபிறகு சரிசெய்வதைவிட, இதை எல்லாம் செய்யக் கூடாது, இதனால்தான் உடல்நலக் குறைபாடு வருகிறது என்று விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என்னோட ஆசை” எனப் புன்னகைக்கிறார் மருத்துவம் படிக்கும் மலர் டீச்சர்! 

- பி.கமலா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு