சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

அழகு ப்ளஸ் ஆரோக்கியம் = 'ஸ்பா'!

ஸ்பா

பியூட்டி பார்லர்களில் மணப்பெண்களுக்கான பிரைடல் பேக்கேஜில், ‘ஸ்பா’ ஆப்ஷனும் இருக்கும். பல பெண்கள் அதில் ஆர்வம் காட்ட மாட்டர்கள். சிலர் அதை விரும்பினாலும், எதற்கு, எப்படி என்று அதைப் பற்றிய விவரங்கள் அறியாது இருப்பார்கள். ‘ஸ்பா’ பற்றிய சந்தேகங்களைக் களையும் விதமாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

அழகு ப்ளஸ் ஆரோக்கியம்  = 'ஸ்பா'!

பாடி ஸ்பா

ஸ்பா என்றால் லத்தீன் மொழியில் ‘சுத்தமான தண்ணீரால் கொடுக்கப்படும் சிகிச்சை’ என்று அர்த்தம். பழங்காலத்தில் ஊற்றுத் தண்ணீரில் குளித்தால், உடலுக்கு புத்துணர்வும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்று நம்பினார்கள். இன்று குளியல் மட்டுமில்லாமல் அதில் ஆயில் மசாஜ், பாடி பாலிஷ், ஸ்டீம் பாத்... இவையெல்லாம் செய்யப்படுவதால், அது `பாடி ஸ்பா’! இது அழகுக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்காகவும் செய்யப்படும் சர்வீஸ்.

மசாஜ்

மசாஜ் செய்வதால் உடம்பில் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு புத்துணர்வு கிடைக்கும் என்பதால்... வேலை, பயணம், இன்னும் பல காரணங்களால் உடல் சோர்வுற்று இருப்பவர்கள், ஸ்டிமுலேட்டிங் மசாஜ் செய்துகொள்ளலாம்.

மன அழுத்தம், வேலைப்பளு காரணமாக தூக்கம் குறைந்து அல்லது தூக்கமின்றி சிரமப்படுபவர்கள், ஆழ்ந்த உறக்கம் தரும் ரிலாக்ஸிங் மசாஜ் செய்துகொள்ளலாம்.

சருமத்தின் தன்மையைப் பொறுத்து, ஆயில் மசாஜ் செய்துகொள்ளலாம். உதாரணமாக, உடலின் சூடு

அழகு ப்ளஸ் ஆரோக்கியம்  = 'ஸ்பா'!

அதிகமாக உள்ளவர்கள் சூட்டைத் தணிக்கக் கூடிய ஆயில்களால் மசாஜ் செய்துகொள்ளலாம்.

உடலில் உள்ள கொழுப்பைக்கூட குறைக்கலாம்... ஆன்டி செல்லுலைட் ஆயிலால், சரியான முறையில் பாடி மஸாஜ் செய்துகொள்ளும்போது!

நவீன பெண்கள் விரும்புவது, க்ரீம் மசாஜ். சருமத்தின் வறட்சியைப் போக்கும் சாக்லேட் க்ரீம் மசாஜ், உடல் எடையைக் குறைக்கவல்ல காபி பீன் மசாஜ் (இதில் உள்ள ‘கெஃபைன்’ உடல் எடையைக் குறைக்க உதவும்) என்று இதில் பல வகைகள் உண்டு. கவனிக்க வேண்டிய விஷயம்... க்ரீம் மசாஜ் முடிந்ததும், உடனடியாக  குளிக்க வேண்டிய அவசியம் இல்லை

பாடி பாலிஷ்

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பொலிவு பெற செய்யப்படுவது, பாடி பாலிஷ். 

ஸ்கிரப்

ஸ்கிரப், சருமத்தில் உள்ள அழுக்கு களை நீக்கும்.

ஸ்டீம் பாத்

ஸ்டீம் பாத், உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்றும். நிபுணர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து செய்தால், உடல் எடையைக் குறைக்கவும் வாய்ப்புண்டு.

குறிப்பு: வெளிநாடுகளில் அவர்களின் வறண்ட சருமத்தன்மையால், முதலில் ஸ்கிரப் செய்யுதுவிட்டு பின்பு ஆயில் மசாஜ் செய்துகொள்வார்கள். எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் முதலில் ஆயில் மசாஜ் செய்துகொண்டு, பிறகு ஸ்கிரப் செய்துகொள்ளலாம்.

பிரபல ஸ்பாக்கள் சில... அறிமுகம்!

கிளியோபாட்ரா ஸோக்

பால், பன்னீர், காய்ந்த ரோஜா இதழ்கள் இவை அனைத்தும் நிரம்பிய தண்ணீர்த் தொட்டியில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை கழுத்துவரை மூழ்கியபடி இருக்கலாம். இதனால் உடலின் ஈரப்பதம் மீட்கப்பட்டு தக்கவைக்கப்படும்.

ஜாவானீஸ் லுலூர் (Javanese Lulur)

டென்ஷன், ஸ்ட்ரெஸ் என்று பரபரப்பில் இருப்பவர்களுக்கு, நல்ல ரிலாக்ஸிங் ஸ்பா இது. ஜாவா நாட்டில் மிகவும் பிரபலமான இந்த ஸ்பாவில், லுலூர் என்னும் மூலிகைப்பொடியால், உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் மசாஜ் செய்யப்படும். இது சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் மாற்றும்.

ஃபுட் அண்ட் ஹேண்ட் ரிஃப்ளெக்ஸாலஜி (Foot & Hand Reflexology)

இந்த ஸ்பாவில் கை, கால்களில் உள்ள பிரஷர் பாயின்ட்களில் மிதமான அழுத்தம் கொடுப்பதன் மூலம் சீரான ரத்தம் ஓட்டம் கிடைக்கப்பெறலாம். அது நரம்பு மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி, உள்ளுறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.
வீட்டிலேயே பாடி ஸ்பா

பார்லர்தான் போகவேண்டும் என்பதில்லை, கொஞ்சம் மெனக்கெட்டால் வீட்டிலும் பாடி ஸ்பா செய்துகொள்ளலாம். அதற்கு...

ஆலிவ் ஆயில்/பாதாம் ஆயில்/தேங்காய் எண்ணை/நல்லெண்ணையை உடல் முழுக்கத் தடவி மசாஜ் செய்யவும்.

மஸ்லின் துணியில் ஓட்ஸ், துளசிப்பொடி, வேப்பிலைப்பொடி தலா 2 ஸ்பூன் எடுத்து, துணியை இறுகக் கட்டவும். அதை நீரில் முக்கி எடுத்து, உடல் முழுவதும் மிதமாக அழுத்தி எடுக்கவும். அல்லது கடலை மாவை தயிரில் கலந்து உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம்.

15 நிமிடங்கள் கழித்து, ஒரு வாளியில் ரோஜா இதழ்கள், 5 சொட்டு ஜாஸ்மின் ஆயில் அல்லது ஏதாவது ஒரு ஃப்ளவர் ஆயில் கலந்து குளித்தால், நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்கலாம். இதை வாரம் ஒருமுறை என்று வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

குறிப்பு: பாடி ஸ்பா எடுக்கும் நாளில், வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உடல் கறுத்துவிடும்.

ஸ்பா செல்லும் வயது

8 வயதுக் குழந்தை முதல், 60 வயது நிரம்பியவர்கள் வரை யாரும் ஸ்பா செய்துகொள்ளலாம். வயது, சருமம், உடல் பிரச்னைகளின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தங்களுக்கான பிரத்யேக ஸ்பாவை தேர்ந்தெடுக்கலாம். மணப்பெண்கள் திருமணத்துக்கு மூன்று மாதங்கள் முன்பிருந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை ஸ்பா செய்துகொண்டால், உடல் முழுக்க பொலிவு பெற்று நல்ல பலன் கிடைக்கும். உடலில் அங்கங்கு இருக்கும் கருமை மறையும்.

ஸ்பாவில் கேமரா?

ஸ்பா பார்லர்களில் கேமரா இருக்குமா, பாதுகாப்பானதா என்பது பலருக்கும் உள்ள கேள்விகள். நீங்கள் வழக்கமாகச் செல்லும் பார்லர் உங்களுக்குத் திருப்தியாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று நம்பினால், அங்கேயே ஸ்பா செய்துகொள்ளலாம். புதிதாகச் செல்லும் ஒரு பார்லர் என்றால், அதன் நம்பகத்தன்மையை அங்கு வாடிக்கை யாளர்களாக இருக்கும் உங்கள் உறவு, நட்பு வட்டத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ள லாம். அல்லது  அங்கேயே ஃபேஷியல், பெடிக்யூர், மெனிக்யூர் என்று சின்ன சின்ன சர்வீஸ்கள் செய்து செய்துபார்த்துவிட்டு, சர்வீஸின் திருப்தி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி முடிவெடுக்கலாம்!’’

- சிந்தூரி