தொடர்
Published:Updated:

மேடி, பாடி பில்டிங்!

மேடி, பாடி பில்டிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
மேடி, பாடி பில்டிங்!

ஜிம், டயட்

ரொமான்ஸ் மேடி, இப்போ  முரட்டு பாக்ஸர். திமிறும் தோள்களுடன் செம உடம்புடன் நிற்கிறார் மாதவன். தமிழ் சினிமாவுக்கு நான்கு வருடங்கள் லீவு போட்டவருக்கு ‘இறுதிச்சுற்று’ ரீ-என்ட்ரி.

“ ‘வேட்டை’-க்குப் பிறகு நான் கேட்ட ஸ்கிரிப்ட்களில் பெரிதாக எனக்கு சேலஞ்சே இல்லை.  சாக்லேட் பாய் இமேஜை வெச்சு  ரொம்ப நாளைக்கு வண்டி ஓட்ட முடியாது. அதனால, அடுத்தக் கட்டத்துக்கு எப்படிப் போகலாம்னு யோசிச்சேன். அந்த  சமயத்துலதான் இயக்குநர் சுதா, `பாக்ஸிங் ஸ்க்ரிப்ட் ஒண்ணு இருக்கு’னு சொன்னாங்க. பெண் இயக்குநர்... பாக்ஸிங் ஸ்கிரிப்ட்... கொஞ்சம் ஆச்சர்யமாதான் இருந்தது. வாங்கிப் படிச்சதும் மிரண்டுட்டேன். இந்தக் கதைக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செஞ்சு, பெண் பாக்ஸர்களைச் சந்திச்சு, அவங்க பிரச்னைகளைக் கேட்டு, இந்த ஸ்க்ரிப்ட் பண்ணியிருந்தாங்க. அவங்க செய்த ரிசர்ச் வீடியோக்கள்  பார்த்தேன். படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இவ்வளவு உழைப்பைப் போட்டிருக்காங்கன்னா, நானும் அதைச் செய்யணும்னு நினைச்சேன். அதான், இந்த பில்டப்” என, தனது 17 இன்ச் பைசெப்ஸை ஏற்றிக் காட்டுகிறார்.

மேடி, பாடி பில்டிங்!

“இந்த பாடி பில்டிங் படத்துக்காகவா... இல்லை உங்க பெர்சனல் ஆசையா?”

“ஸ்கிரிப்ட் படிச்சிட்டு, நாம இதைப் பண்ணணும்ன்னா உடலை ஏத்தணும்னு முடிவுசெய்தேன். அதற்காக ஒன்றரை வருஷம் டைம் கேட்டு, என் உடலை பில்ட் பண்ண ஆரம்பித்தேன். அமெரிக்கா போய், இதுக்காக ஸ்பெஷல் ட்ரெயினிங் எடுத்து, ரிட்டயர்ட் ஆன ஒரு பாக்ஸர் மாதிரி என்னை நானே உருவாக்கிக்கிட்டேன். இப்போ, என்னை பார்க்கிறப்ப சந்தோஷமாவும் திருப்தியாவும் இருக்கு. இனி பாடியை இப்படியே மெயின்டெய்ன் பண்ணணும்னு ஆசையா இருக்கு.”

“என்னென்ன வொர்க்அவுட் செஞ்சீங்க?”


“இது முறையா ட்ரெய்னர், டயட்டீஷியன்ஸ் சொன்னதைக் கேட்டுச் செய்த வொர்க்அவுட். பாக்ஸிங் பண்றவங்களுக்கு நரம்பு எல்லாம் தெரியும். ஆனா, கோச்சோட உடல் என்றால், கொஞ்சம் சதைதான் பல்க்கா தெரியணும்; நரம்பு எல்லாம் தெரியக் கூடாது. உடலும் ஸ்ட்ராங்கா தெரியணும். வெயிட்டும் குறைவா தெரியணும். ஆனா, நடந்தா மலைபோல இருக்கணும்... இதுதான் தேவை. இதுக்கு ஏற்ற மாதிரி வொர்க்அவுட் என்னன்னு முதல்ல கண்டுபிடிச் சோம். சிலர், காஸ்மெட்டிக் மஸில் பில்டிங் பண்ணலாம்னு சொன்னாங்க. அப்படின்னா, ஒரு தசையை மட்டும் தேர்ந்தெடுத்து அதுக்கு நிறைய வொர்க்அவுட் தந்தா, அது மட்டும் பெருசா தெரியும். ஆனா, அப்படி செஞ்சா, நடக்கிறப்ப அந்த பலம் தெரியாது. அதனால ஒவ்வொரு தசையா எடுத்துக்கிட்டு, ஸ்பெஷலா கவனம் செலுத்தி பில்ட் பண்ணோம்.”

“சப்ளிமென்ட் எதுவும் சாப்பிட்டீங்களா?”

“எதுவுமே எடுக்கலை. ரொம்ப நேச்சுரலா பண்ண வொர்க்அவுட். அதான் ரொம்ப டைம் எடுத்துச்சு. ஆனா, இதுதான் சரியான முறையும் கூட. பணம் சம்பாதிக்கணும், புகழ் வேணும்கிறதுக்காக மட்டும் குறுக்குவழியில போய் உடலை ஏத்துனா, நிறைய பக்கவிளைவு களால் பின்னாடி அவஸ்தைப்பட வேண்டியதி ருக்கும் என்பதை உணர்ந்தவன் நான்.”

“வொர்க்அவுட் செய்யும் சமயங்களில் உங்க டயட் என்ன?”

“நார்மல் டயட்தான். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்வேன். இரவு ஏழு மணிக்கு மேல எதுவும் சாப்பிட மாட்டேன். தினமும் 45 நிமிஷம்தான் வொர்க்அவுட். ஆனா, கடுமையாக வொர்க்அவுட் செய்வேன். நாம வொர்க்அவுட் பண்ற நேரம் மட்டும்தான் நம்ம உடல் இயங்கும்னு நினைக்கக் கூடாது. 24 மணி நேரமும் அது ஃபிட்னெஸ் மோட்லதான் இருக்கும். சரியா சாப்பிடணும், தூங்கணும், ஓய்வு எடுக்கணும். நம்ம உடலுக்கு பைசெப்ஸ், கால் தசைகள், தோள்பட்டைனு ஒவ்வொரு தசையும் எந்த அளவுக்கு, எந்த விகிதத்தில்  இருக்கணும்கிறதுக்குக் கணக்கு உண்டு. அதன்படி கரெக்ட்டா பில்ட் பண்ண, டயட் ரொம்ப உதவியது.”

மேடி, பாடி பில்டிங்!

“அமெரிக்கா போய் பயிற்சி எடுத்திருக்கீங்க... ஏதாவது ஸ்பெஷல் டிப்ஸ்?”

“எனக்கு 45 வயசு ஆகுது. சட்டுன்னு உடலை ஏத்தி இறக்கினா, வயசானா மாதிரி தெரியும். முடி கொட்டும். அதனால், பொறுமையா பில்ட் பண்ணேன்.பாடி பில்டிங் பண்றதுன்னா வெறும் தசைகள் பில்டிங்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால், வெறும் தசைகளை ஏத்தினா மட்டும் போதாது. நரம்புகள்தான் சக்தியை உடல் முழுக்கக் கடத்துது. அதனால நரம்புகளை வலுவாக்க வேண்டியது அவசியம். நரம்புகளுக்குன்னு ஸ்பெஷலாகப் பயிற்சிகள் இருக்கு. நரம்புகள் பலமா இருந்தாதான், நாம பண்ற வொர்க்அவுட் முழுசா நம்ம உடல்ல தெரியும். நம் ஊரில் பாக்ஸிங், வெயிட் லிஃப்ட்டிங் சீரியஸா பண்றவங்க, அவங்கவங்க ட்ரெய்னர்கிட்ட கேட்டு நரம்புகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளைச் செய்தால், கூடுதல் பலன் கிடைக்கும்.”

“உங்க ஃபோட்டோஸுக்கு ஏகப்பட்ட லைக்ஸ் விழுந்திருக்கே?”

“ஆமாங்க. நானே எதிர்பாக்கலை. ஆனா, அவ்ளோ கஷ்டப்பட்டிருக்கேன். பொதுவா, நாம ஜிம்முல தனியா வொர்க்அவுட் பண்றதைவிட, கூட ஒருத்தரோடு சேர்ந்துக்கிட்டா ஈஸின்னு சொல்வாங்க. அந்த மாதிரி, நாம பண்ற வொர்க்அவுட்டை சோசியல் மீடியால ஷேர் பண்றதும் நல்ல ஐடியா. தொடர்ந்து, செய்ய அது பெரிய உற்சாகமா இருக்கும். லைக்ஸ் வாங்குறதுக்கு ஈஸியான வழி ஃபிட்னெஸ்தான்.”

- கார்க்கிபவா