
பரினீதி சோப்ரா
பாலிவுட்டில் 2011-ம் ஆண்டு ‘லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால்’ வெளியாகி சுமாராக ஓடியது. அதில், அழகான, சற்றே குண்டான, பார்த்ததும் எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய ஒரு பெண் அறிமுகம் ஆனார். இரண்டாவது படத்திலேயே தேசிய விருதுக் குழுவின் சிறப்புக் கவனம் அவர் மேல் விழுந்தது. ‘இஷாக்சாதே’ என்ற அந்தப் படம் மல்டிப்ளெக்ஸ் முதல் யூடியூப் வரை தெறி ஹிட். அந்த பப்ளி க்யூட் பரினீதி சோப்ராவின் இன்றைய தோற்றம்தான் இந்திய இளசுகளின் வைரல் டாக்.
“நான் எப்பவும் ஓவர் வெயிட்தான். அப்படியேதான் சினிமாவிலும் அறிமுகம் ஆனேன். பல நல்ல உடைகளை குண்டாக இருந்ததால் போட முடியாமல் தவிச்சிருக்கேன். அதனாலயே நன்றாக நடிக்கத் தெரிந்தும் எனக்கு வாய்ப்புகள் வராமல்போயின. என்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அதனால், என்னை ஸ்லிம்மாக்கி, எனக்கான படத்தை, வாய்ப்பை நானே கண்டுபிடிக்க நினைத்தேன். 12 மாத உழைப்பின் பலன் இது. இப்போ ‘மேரி பியாரி பிந்து’ என்ற படம் என்னைத் தேடி வந்திருக்கிறது” - பரினீதியின் சொற்களில் நம்பிக்கை மின்னுகிறது. தனக்கான பாதையை தானே செதுக்கிய திருப்தியும், ஃபிட்னெஸ் அவருக்குத் தந்திருக்கும் தன்னம்பிக்கையும் தெறிக்கிறது. ஓடி ஓடி, உழைத்து உழைத்து இளைத்த சீக்ரெட்டை இப்போது சந்தோஷத்துடன் சொல்கிறார்...

ஜிம்முக்கு போவதும், ட்ரெட்மில்லில் ஓடிக் களைப்பதும் எனக்கு சரிவராது. வொர்க்அவுட்டை முடிந்தவரை ஜாலியாக வைத்துக்கொண்டேன். வொர்க்அவுட்டில் புதுப்புது எக்சர்சைஸை சேர்க்கும்போது, அது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒரு நாள், இரண்டு மணி நேரம் நடனமாடினால், அடுத்த நாள் பிரேக்ஃபாஸ்ட் முதல் லன்ச் வரை நீச்சல் குளத்தில் கிடப்பேன். எப்போதாவதுதான் ஜிம் போவேன். ஆனால், என் உடற்பயிற்சி தினமும் நடக்கும். அந்தத் தொடர்ச்சிதான் மிக முக்கியம்.
களரிபயட்டு கற்றேன். தற்காப்புக் கலை உடற்பயிற்சியாகவும் இருக்கிறது, ஒரு பெண்ணாக எனக்குத் தைரியத்தையும் தந்தது. தைரியம் வரும்போது தானாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த உலகில் எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் வளரும். அதுதான் மனதுக்கான வொர்க்அவுட். அந்த மனமே உடலையும் சரியாகப் பார்த்துக்கொள்ளும்.
என்னால் சாக்லேட்டையும் பீட்ஸாவையும் சாப்பிடாமல் இருக்க முடியாது. யார் சொன்னாலும் நான் கேட்டது இல்லை. ஒரே வித்தியாசம், நான் சாப்பிடும் அளவு மாறியது. இரண்டு சாக்லேட்கள், ஒன்றானது. தினம் என்பது வாரம் மூன்று நாட்கள் ஆனது. அதே சமயம் நான் சாப்பிடுவதற்கு ஏற்ப பயிற்சிகளை அதிகரித்துக்கொள்வேன். ஆரோக்கியமான உடலுக்கு இந்த டயட்தான் பெஸ்ட்.
என்னுடைய ஃபிட்னெஸ் மந்திரம் எளிமையானது. ஃபிட்னெஸ் என்பது ஒரு மைண்ட் கேம். ``நான் இப்படி இருந்தது போதும். எனக்கு இருக்கும் நேரத்தில் என்னை நானே செதுக்கிக்கொள்ளப் போகிறேன். என்ன ஆனாலும் அதை நிறுத்தப்போவது இல்லை” இந்த எண்ணம் மனதில் பதிந்தால், பாதி வேலை முடிந்தது. மற்றவை தானாக நடக்கும்.

என்ன சொன்னாலும் ஆரம்பம் கடினமானதுதான். அதை முடிந்தவரை எளிமையாக வைத்துக்கொள்வது அவசியம். கடுமையான பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், சில நாட்கள் நான் லேசான உணவுகளை உட்கொண்டேன். அதைத் தொடர்ந்து பயிற்சிகளை ஆரம்பித்தேன்.
கண்ணாடிதான் நமக்கு ஆகச்சிறந்த இன்ஸ்பிரேஷன். தினமும் நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக்கொண்டால், நமக்கு என்ன தேவை என்பது புரிந்துவிடும். அதை நோக்கி ஓட ஆரம்பித்தால் போதும். இது நம் வாழ்க்கை. நம் உடல். நம் ஆரோக்கியம். இதற்கு இன்னொருவர் சொல்ல என்ன இருக்கிறது?
சற்று பருமனாக இருப்பது தவறு அல்ல. ஆரோக்கியமாக இருந்தால் போதும். எல்லோரும் இளைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஃபிட்டாக இருந்தால் போதும். என் வேலைக்கு நான் இளைத்தாக வேண்டும். என்னால் உடல் எடையைக் குறைக்க முடியாது என்றார்கள். முடித்துக் காட்டியிருக்கிறேன். என் வொர்க்அவுட்டும், அதன் முடிவுகளும் எனக்கு மட்டும் அல்ல... நிறையப் பேருக்கு ஒரு மெசெஜ்தானே!
பிடித்த ஃபிட்னெஸ் கேர்ள்: கேத்ரீனா கைஃப். பாலிவுட்டிலேயே மிகச்சரியான உடல்வாகு அவருடையதுதான்.
பிடித்த பாடல்(வொர்க்அவுட்டின் போது கேட்க): `தூம் 3’-ல் கம்லி
பிடித்த வொர்க்அவுட்: நடனம், நீச்சல், களரிபயட்டு.
- கார்க்கிபவா