Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

பிரபாஸ்

எல்லா மொழிகளிலும் சில்வர் ஜூப்ளி கொண்டாடிய படம், 1980-ம் ஆண்டில் வெளியான `பில்லா’. அது மீண்டும் ரீமேக் செய்யப்பட,  இந்தியில் ஷாரூக் கான், தமிழில் அஜித், தெலுங்கில் பிரபாஸ் நடித்தார்கள். இதில், அந்த பவர்ஃபுல் டான் கேரக்டர் யாருக்குப் பொருந்தியது என நடந்த ஒரு கருத்துக்கணிப்பில் வென்றது யார் தெரியுமா? ஆறடி (ஆக்சுவலி 6.2) உயரம், அழகிய உருவம் பிரபாஸ். ஷாரூக்கையும் அஜித்தையும் பின்னுக்குத் தள்ளிய பிரபாஸின் ஸ்பெஷல், அந்த முரட்டு உடல்வாகுதான். அப்படி என்ன பயிற்சி செய்கிறார் பாகுபலி ஹீரோ?

“நடிகனுக்கு அவன் உடல்தான் மூலதனம்” என்கிறார் பிரபாஸ். தினமும் ஆறு மணி நேரம் அண்ணன் ஜிம்மில்தான் கிடப்பார். வருத்தி எடுக்கும் அந்தப் பயிற்சிகளை ரசித்துச் செய்வது சிறப்பு.

ஸ்டார் ஃபிட்னெஸ்

காலை ஒன்றரை மணி நேரம் கார்டியோ. ஒரு நாளும் இது தவறுவது இல்லை. மாலை ஒரு மணி நேரம் வெயிட் லிஃப்ட்டிங். ஒவ்வொரு தசையாக, ஸ்பெஷல் கேர் எடுத்து, தனிப்பயிற்சிகள். “ஒவ்வொரு தசையும், ஒவ்வொரு நரம்பும் நானா செதுக்குனதுடா” என பன்ச்சே பேசலாம் பிரபாஸ்.

யாருக்குமே இன்ஸ்பிரேஷன் என்பது அவசியம். அதுவும் கடுமையான பயிற்சிகளை எடுக்கும்போது அது தரும் உற்சாகம் பெரிது. பிரபாஸ் பயிற்சி செய்யும்போது ரெஸ்லிங் வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும். அவர்களைப் பார்க்கும்போது எல்லாம் கண்கள் சிவக்க, எக்ஸ்ட்ரா கலோரிகளை எரிப்பது பிரபாஸ் ஸ்டைல்.

அரிசிக்குப் பெயர் பெற்றது ஆந்திரா. ஆனால், அந்த ஊர் சூப்பர் ஸ்டார் பிரபாஸின் டயட்டில் அரிசியே கிடையாது. மீன், பாதாம், நட்ஸ், முட்டையின் வெள்ளைப்பகுதிதான் அவரது முக்கிய உணவு வகைகள்.

இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடும் பிரபாஸ், மொத்தம் 3,000 கலோரிகள் உட்கொள்கிறார். ஆனால், அவை அன்றே எரிக்கப்படுவதுதான் அவரது கட்டுமஸ்து உடலுக்குக் காரணம். “இதை எல்லாம் தாண்டி, உடற்பயிற்சியைக் கொண்டாடும் மனநிலைதான் முக்கியம்” என்பது பிரபாஸின் ஃபைனல் டச்.

ராணா

பாகுபலியைவிட ஒரு இன்ச் உயரம் அதிகம் இந்த பல்வாள்தேவன்... எடையும்கூட. சாப்பிடுவதில் மன்னன். இவர் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதுதான் உண்மையாகவே பெரிய சவால்.

‘உங்கள் உடலுக்கு... உங்கள் பயிற்சிகள்’ என்பது ராணாவின் ஃபிட்னெஸ் மந்திரம். “அவரவர் உடலுக்கு ஏற்ற, தேவைக்கு ஏற்ற பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். அப்படி இல்லாமல், எல்லா பயிற்சிகளையும் செய்வது போகாத ஊருக்கு வழி தேடுவதுபோல” என்கிறார் ராணா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்டார் ஃபிட்னெஸ்

நடிக்க வரும் முன்பு ராணாவின் எடை 125 கிலோ. இப்போது, அதை 100-க்கு கொண்டுவந்திருக்கிறார். இதற்காக, டயட்டில் கை வைத்தது குறைவு. ஜிம்மில் கை வைத்ததுதான் அதிகம்.

கார்போ என்றாலே அலர்ஜி பிரபாஸூக்கு. ஆனால், தினமும் காலை உணவிலே கார்போ வேணும் ராணாவுக்கு. மாலை ஆறு மணிக்கு மேல் மட்டும் கார்போவுக்குத் தடை போடுகிறார்.

முன்னாள் `மிஸ்டர் இந்தியா’ லக்‌ஷ்மண் என்பவர்தான், ராணாவின் ஸ்பெஷன் ட்ரெய்னர். “அவர் வந்த பின்தான் என்னால் எல்லாம் செய்ய முடிந்தது” என்கிறார். வெற்றிகரமான வொர்க்அவுட்டுக்கு நல்ல ட்ரெய்னரும் அவசியம் என்பது ராணாவின் டிப்ஸ்.

ராணாவுக்கு மது, புகைப்பழக்கம் எப்போதும் கிடையாது. “ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு வொர்க்அவுட், டயட்டைவிட இது ரொம்ப முக்கியம்’’ என்கிறார். நிஜம்தானே!

- கார்க்கிபவா