
ஸ்டார் ஃபிட்னெஸ்

“சீனாக்காரங்க ஏமாத்துறாங்க. அந்தப் பையன் உடம்புல இருக்குற எலும்பை எல்லாம் ரப்பரா ஆக்கிட்டாங்களாம். அதான் இப்படி ஈஸியா ஜம்ப் பண்றான்...”
“அதெல்லாம் இல்லப்பா. அவங்க ஊருல இதுக்குன்னு ஒரு மாத்திரை இருக்காம். அதைச் சாப்பிட்டா அவ்ளோ சக்தி வந்திடுமாம். ஆனா, 40 வயசுல கிழவன் ஆயிடுவாங்களாம்...”
80-களில் ஜாக்கி சானின் படங்கள் இந்தியாவில் சக்கைப்போடு போட்டபோது பலரும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். அப்போது, அவருக்கு வயது 30. இன்று, 62 வயதிலும் அதே துடிப்போடும் எனர்ஜியோடும் எகிறி அடிக்கிறார் சான். அப்படி என்ன ஜாக்கி மேஜிக்?
*மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளியில் ஜாக்கி சேர்க்கப்பட்டபோது, அவருக்கு வயது எட்டு. அன்று ஆரம்பித்த ஒழுக்கம், 50 ஆண்டுகள் கடந்தும் அப்படியே இருக்கிறது ஜாக்கியிடம். தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சிக்கு என ஒதுக்குகிறார். “எதற்கு வேண்டுமானாலும் லீவுவிடலாம். உடற்பயிற்சிக்கு ம்ஹூம்” என்கிறார் ஜாக்கி.

*“என்னைத் தூக்கத்தில் எழுப்பினால்கூட, என்னால் சம்மர் சால்ட் அடிக்க முடியும்” என்றார் ஜாக்கி. எப்படி எனக் கேட்டபோது, ஜாக்கி தன் சிக்னேச்சர் சிரிப்புடன் சொன்னார்... “என்னால் முடியும் என நம்புகிறேன், முடிகிறது... எந்த சாதனைக்கும் தொடக்கப்புள்ளி நம்மை நாம் நம்புவதுதான். அது நடந்தால், மற்ற எல்லாமே தானே நடக்கும்” என்கிறார் இந்த சூப்பர் ஹீரோ.
*கிட்டத்தட்ட 45 வருடங்களாக ஜாக்கி நடித்துவருகிறார். பலமுறை விபத்தில் சிக்கியிருக்கிறார். அதனால், தனது உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. அப்போதும் பயிற்சிகளை மாற்றினாரே தவிர, செய்யாமல் விடவில்லை. அதற்குக் காரணம், “விபத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடிந்ததே உடற்பயிற்சிகளால்தான். அது என் மனதில் நன்றாகப் பதிந்திருக்கிறது” என்கிறார். “நாம் நமக்காகச் செய்துகொள்ளும் சலுகை அல்ல, உடற்பயிற்சி. அது வாழும்முறை” என்பதை அழுத்திச் சொல்கிறார்.
*ஜாக்கிக்கு பாக்ஸிங் பிடிக்கும். மற்றவர்களுக்கு பாக்ஸிங் சொல்லிக்கொடுப்பதும் பிடிக்கும். தீவிர உடற்பயிற்சிகளைச் செய்வதோடு, இப்படி மனதுக்குப் பிடித்த சில விஷயங்களையும் வொர்க்அவுட் லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்கிறார். அதனால், கொழுப்பை, தன் விருப்பப்படி கரைக்க முடிவதை ரசிக்கிறார் ஜாக்கி. எல்லோரின் வொர்க்அவுட் லிஸ்ட்டிலும் இப்படி ஒரு விஷயம் நிச்சயம் இருக்க வேண்டும்.
*உணவில் தடா போட்டால், ஜாக்கிக்குப் பிடிக்காது. “நமக்கு சக்தி அளிப்பது உணவுதான். அதை ஏன் நிறுத்த வேண்டும்?” என்பார். “இரண்டு கப் ஐஸ்கிரீம் சாப்பிட்டால், 20 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா ஓடுங்கள்” என்பது ஜாக்கி ரூல். “நல்ல டயட் என்பது, சாப்பிடுவதிலும், அதற்கு ஏற்ற உடற்பயிற்சி செய்வதிலும் இருக்கிறது. வெறும் உணவுக் கட்டுப்பாட்டில் இல்லை” என்கிறார் ஜாக்கி.
- கார்க்கிபவா