
ஸ்விம்மிங் பலன்கள்

தண்ணீர் என்றாலே ஜாலிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரைக் கண்டாலே குஷியாகிவிடுவார்கள். கடலைப் பார்த்ததும் ஓடிப்போய் அலைகளில் குதிப்பது, குளத்தில் ஆற்றில் முங்கித் திளைப்பது, அருவியைப் பார்த்ததும் ஆனந்தத்தில் துள்ளிக் குதிப்பது எனத் தண்ணீரில் விளையாடப் பிடிக்காதவர்களே கிடையாது. சிலர், இயற்கையான நீர்நிலைகளில் இறங்கப் பயந்து, தீம் பார்க், ஸ்விம்மிங் பூல் போன்ற இடங்களுக்குச் சென்று விளையாடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விளையாட்டில் ஆர்வம் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் பிடித்த விளையாட்டு தண்ணீரில் ஆட்டம்போடும் நீச்சல்தான். கிராமங்களில், சூரியன் சுட்டெரிக்கும் நாட்களில் சிறுவர்கள் கிணற்று மேட்டிலும், வரப்புகளின் நடுவே உள்ள பம்புசெட்களிலுமே நாள் முழுவதையும் கடத்துவர். நீச்சல் ஒரு பொழுதுபோக்கு மட்டும் அல்ல... உடலை ஃபிட்டாகும் சிறந்த பயிற்சியும்கூட.
நடைப்பயிற்சி, நடனம், ஜாகிங், ஜிம் போய் செய்யக்கூடிய வொர்க்அவுட்... என அனைத்தையும்விட எளிதாகவும் விரைவாகவும் கலோரியை எரிக்க நீச்சலைத் தவிர வேறு சிறந்த பயிற்சி இருக்க முடியாது. அரை மணி நேர நீச்சல் பயிற்சியில், அதிகப்படியாக 370 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. நீச்சலில் பட்டர்ஃப்ளை, பிரெஸ்ட்ஸ்ட்ரோக், ஃப்ரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக் என சில வகைகள் உள்ளன. அனைவராலும் எல்லா ஸ்ட்ரோக்குகளையும் செய்ய முடியும்.

நீச்சலால் ஏற்படும் நன்மைகள்
நீச்சல் அடிப்பதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
உடல் முழுவதும் இயக்கப்படுவதால், அனைத்து முக்கியத் தசைகளுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்.
இதயம் மற்றும் நுரையீரலை நன்கு வேலை செய்யவைக்கிறது. இது நல்ல கார்டியோ பயிற்சியாகிறது.
மனஅழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கை அதிகரிப்பதில் நீச்சல் பயிற்சியின் பங்கு அதிகம்.
தினமும் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை நீச்சல் பயிற்சி செய்வதால், உடல் மற்றும் மனம் அமைதி பெறுகிறது. யோகா, உடற்பயிற்சி போன்று இதுவும் மனதை சாந்தப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக்குகிறது.
காற்றின் அடர்த்தியைவிட நீரின் அடர்த்தி பல மடங்கு அதிகம். எனவே, அதைக் கடக்க நம் உடல் அதிக வேலை செய்ய வேண்டி உள்ளது. இதனால், அதிகப்படியான கலோரி எரிக்கப்படுகிறது.
கருவிகளைப் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வதைப்போன்று, நீச்சலும் கடுமையான பயிற்சியே. இதனால், உடலில் உள்ள அனைத்துத் தசைகளும் இறுகி, பலமாகும்.
நீச்சல் பயிற்சியில் எலும்புகள், மூட்டுகள், தசைகள் அனைத்துக்கும் நல்ல நெகிழ்வுத்தன்மை கிடைக்கிறது.
நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் (NSF) ஆய்வு, ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களைவிட தினமும் நன்கு நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கு இரவு நல்ல தூக்கம் கிடைப்பதாகக் கூறுகிறது. இது இன்சோம்னியா உள்ளிட்ட தூக்க நோய்களையும் சரி செய்கிறது.
நீச்சல் பயிற்சி, கார்டியோ வாஸ்குலர் பயிற்சியாக இருந்து இதயத்துக்கு மட்டும் நன்மை செய்யாமல், ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை அளவாக வைத்திருக்க உதவுகிறது. இதனால், சர்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம் போன்றவற்றை நெருங்கவிடாமல் தடுக்கிறது.
ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, இதய செயல்திறன், மைய நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம், காக்னிடிவ் செயல்திறன், தசை வலிமை, ரத்த அளவு என எல்லாவற்றிலும் செயல்படுவதால் இயல்பான வயதைவிட 10 வயது குறைவாக அவர்களது தோற்றம் இருக்கும். எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பார்கள்.
நீச்சல் வீரரிடம் நல்ல ஞாபகத்திறன், தன்னம்பிக்கை, பொறுமை, நேர்மறை எண்ணங்கள், ஒழுக்கம், கூட்டு முயற்சி, விளையாட்டுத் திறன், பணி நெறிமுறைகள், கால நிர்வாகம், அர்ப்பணிப்பு, திறன் முன்னேற்றம், இலக்கு நிர்ணயம், தைரியம், சமூகத் தொடர்பு மேலோங்கும்.
பெண்களுக்கு மெனோபாஸின்போது ஏற்படும் எலும்பு அடர்த்திக் குறைவைத் தடுக்கிறது. அதேபோல் கர்ப்பிணிகளும் நீச்சல் பயிற்சி செய்யலாம். இது, சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
மன மகிழ்ச்சியுடன் ஃபிட்னெஸையும் தரும் நீச்சலை முயற்சிக்கலாமே!
- பி.கமலா
பாதுகாப்பு விதிமுறைகள்
முறையாகப் பயிற்சி பெற்ற பிறகே தண்ணீரில் இறங்க வேண்டும். குழந்தைகளுக்கு நான்கு வயதில் இருந்தே நீச்சல் கற்றுக்கொடுக்கலாம். நீச்சல் பயிற்சி செய்வதற்கு வயது தடை இல்லை.
குழந்தைகள், பெரியவர்களின் கவனம் இல்லாமல் கண்டிப்பாக நீச்சல் குளத்துக்குச் செல்லக் கூடாது. நீச்சல் பழகும் குழந்தை, பார்வையில் இருந்து விலகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தனியாக நீந்தச் செல்லக் கூடாது. பெரியவர்களாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருந்தாலும், நல்ல நீச்சல் வீரராக இருந்தாலும்கூட கடல், ஆறு என எந்தவித நீர்நிலைக்கும் தனியாகச் செல்லவே கூடாது. விபத்து எப்படி வேண்டுமானாலும் எதிர்பாராமல் ஏற்படும் என்பதால், நண்பர்களுடனோ குடும்பத்தினருடனோதான் செல்ல வேண்டும்.
இடியோ, மின்னலோ இருந்தால், நிச்சயம் தண்ணீரில் இருந்து வெளியேறிவிட வேண்டும். தண்ணீர் மின்னலை ஈர்ப்பதோடு, மின்சாரம் எளிதில் பரவுவதாகவும் இருப்பதால் ஆபத்து அதிகம்.
காற்று நிரப்பப்பட்ட பொம்மைகள், விமான மெத்தைகள், பிளாஸ்டிக் படகு, நீர் இறக்கைகள் போன்ற மிதக்கும் பொருட்களை நம்பி தண்ணீரில் இறங்கக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட சரியான மிதத்தல் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நீச்சல் இயக்கும் தசைகள்
நீச்சல் அடிக்கும்போது, கை, தோள்பட்டை, முழங்கை, வயிறு, முதுகுத் தண்டுவடத்தைச் சுற்றி உள்ள தசைகள், வயிற்றில் உள்ள தசைகள், காஃப் மசில் என அனைத்துத் தசைகளும் வேலை செய்கின்றன. இவ்வாறு, அனைத்துத் தசைகளுக்கும் பயிற்சி கிடைப்பதால், உடலுக்கு நல்ல அமைப்பு கிடைக்கிறது.
இளம் வீராங்கனை ஜெயவீனா ஓர் உதாரணம்

நீச்சல் பயிற்சியாளர் கிரிஷிடம், சிறு வயதில் இருந்து நீச்சல் பயிற்சி பெற்று வரும் ஜெயவீனா சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். ஜெயவீனா, பிரபல நடிகர் தலைவாசல் விஜயின் மகள்.
“நான் மூணு வயசுலயே நீச்சல் அடிக்க ஆரம்பிச்சுட்டேன். என் அப்பா ஸ்டேட் லெவல் ஜிம்னாஸ்டிக் பிளேயர் என்பதால், அவர் என்னையும் என்னோட அண்ணனையும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். நான் நீச்சலைத் தேர்வு செய்தேன்.
விளையாட்டில் இருந்தாலும், எப்படிப் படித்து வெற்றிபெற வேண்டும் என்று என் அப்பா சொல்லிக்கொடுத்தார். தினமும் காலை 5 மணியில் இருந்து 8 மணி வரை நீச்சல் பயிற்சி செய்வேன். பிறகு, அரைமணி நேரம் ஓய்வு எடுப்பேன். 8:30 முதல் 11 மணி வரை ஜிம்முக்குச் சென்று வொர்க்அவுட் செய்வேன். வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவேன். அதேபோல் மாலை 4 மணியில் இருந்து 8 மணி வரை பயிற்சி செய்வேன். இதனால்தான் தேசிய அளவில் பதக்கம் பெற முடிந்தது. அடுத்து என்னுடைய இலக்கு சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்வதுதான்” என்றார்.