
உடலினை உறுதிசெய் - 16

திரிகோணாசனா (Trikonasana)
திரிகோணாசானம் என்பது, `உடலை முக்கோண வடிவத்துக்கு வளைத்தல்’ என்பதாகும்.
கால்களை நன்கு அகட்டி நேராக நிற்க வேண்டும். மூச்சை இழுத்தபடி இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தோள்பட்டைக்கு இணையாக உயர்த்த வேண்டும். மூச்சை வெளியேவிட்டபடி, உடலை வளைத்து, வலது கையால் இடது காலைத் தொட வேண்டும். அதேநேரத்தில், இடது கையுடன் சேர்த்து, மேல் உடலை மேலே உயர்த்த வேண்டும். பார்வை மேலே உள்ள கையைப் பார்த்தபடி இருக்கட்டும். மெதுவாக மூச்சை இழுத்து, பழையநிலைக்கு இரண்டு கைகளையும் நேராக நிறுத்த வேண்டும். பின்னர் மூச்சை வெளிவிட்டபடி முதல் நிலைக்குத் திரும்ப வேண்டும். பின்னர், இதேபோல, மற்றொரு பக்கம் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்யலாம்.
கவனிக்க: ஒற்றைத் தலைவலி, வயிற்றுப்போக்கு, ரத்தஅழுத்தம், கழுத்து, முதுகில் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

பலன்கள்
கால், முட்டி, தோள்பட்டை, மார்பகப் பகுதி வலுவாகும்.
கலோரிகளை எரிக்கும். உடல் எடை குறைய சிறந்த பயிற்சி.
செரிமான சக்தியை மேம்படுத்தும்.
இடும்பு, கழுத்து, முதுகெலும்பை உறுதிப்படுத்தும்.
சிறுநீரகம், இரைப்பை உள்ளிட்ட உள் உறுப்புக்களின் செயல்திறன் மேம்படும்.
வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு கரையும். தொடையில் உள்ள சதைப்பகுதி கரைந்து, ஃபிட்டான வடிவத்துக்கு வரும்.
மன அழுத்தம், மனச்சோர்வு ஆகிய மனம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.
உடலில் சமநிலையை (Balance) சீராகவைத்திருக்கும்.
- ஆரோக்கியக் கலை அறிவோம்
- ப்ரீத்தி,
படங்கள்: ச.ஹர்ஷினி
மாடல்: பத்மப்ரியா
உதவி: ட்ரைமெட் மருத்துவமனை

யோகாவுக்குத் தயாராகும் முன்னர் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகள் கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து முடிக்க வேண்டும்.