ஹெல்த்
Published:Updated:

நலம் தரும் யோகா!

நலம் தரும் யோகா!
பிரீமியம் ஸ்டோரி
News
நலம் தரும் யோகா!

ஜூன் 21 சர்வதேச யோகா தினம்

நலம் தரும் யோகா!

ஃபிட் தோற்றம், எடைக் குறைப்பு, பொலிவான சருமம், மன அமைதி, ஆரோக்கியம், உடல் வலிமை, உடலின் நிலைத்தன்மை, வளைந்துகொடுக்கும் தன்மை என இத்தனையும் வேண்டும், அதுவும் ஒரே பயிற்சியின் மூலம் வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி யோகா. மிகப்பழமையான நம் கலை யோகா. இது, உடலுக்கும் மனதுக்குமான பயிற்சி. இதைத் தொடர்ந்து செய்துவருவதன் மூலம், மேலே சொன்ன அத்தனை பலன்களும் கிடைக்கும். அஷ்டாங்க யோகம் என்ற பிரிவில் எட்டு நிலைகளை உள்ளடக்கியது யோகாசனம். இயமம் (தீயவைத் தவிர்ப்பது), நியமம் (தன்னை நெறிப்படுத்தி ஒழுக்கம் பெறுதல்), ஆசனம் (யோகாசனம்), பிராணயாமம் (மூச்சைக் கட்டுப்படுத்துதல்), பிரத்தியாகாரம் (புலனடக்கம்), தாரணை (உணர்வுகளை நெறிப்படுத்துதல்), தியானம் (கண் மூடி மனதை ஒருநிலைப்படுத்துதல்), சமாதி (ஆழ்தியான நிலை) ஆகியவைதான் இந்த எட்டுப் படிக்கட்டுகள்.

யோகாசனம், மதம் சார்ந்தது இல்லை. ஆரோக்கிய வாழ்வுக்குப் பல மருத்துவர்கள் பரிந்துரைப்பது தினசரி யோகா பயிற்சியைத்தான். ஒரு சில நாட்கள் மட்டும் யோகா செய்துவிட்டு, உடனடியாகப் பலனை எதிர்பார்க்க முடியாது. குளிப்பது, தூங்குவதுபோல அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக யோகாவைச் செய்துவந்தால், பலன்களை முழுமையாகப் பெற முடியும். ‘இதற்காக, தலைகீழாய் நிக்கணுமா, உடலை வளைக்கணுமா?’ என யாரும் பயப்பட வேண்டும். 5-10 நிமிடங்களில் செய்யக்கூடிய எளிமையான யோகாசனங்கள் உண்டு. வயதுக்கு ஏற்ற, உடல் நிலைக்கு ஏற்ற ஆசனங்கள் நிறைய உள்ளன. இவற்றைத் தொடர்ந்து செய்துவர, உடல் மற்றும் மனதில் நல்லமாற்றங்கள் வருவது உறுதி.

நலம் தரும் யோகா!

யோகா துளிகள்

பிரம்மமுகூர்த்தமான காலை நேரம் 4-6 மணிக்குள் செய்வது சிறப்பு. மற்ற நேரங்களிலும் செய்யலாம். ஆனால், வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

சாப்பிட்ட, மூன்று நான்கு மணி நேரத்துக்குப் பிறகு, யோகாசனங்களைச் செய்யலாம்.

உடலில் உள்ள உள்ளுறுப்புகள் கசக்கிப் பிழியப்படுவதால் கழிவுகள் வெளியேறி புத்துணர்வுடன் ஆரோக்கியமாக வாழலாம். ஆதலால், வெறும் வயிற்றில் இருந்து செய்வதால் யோகாசனங்களின் வேலை சிறப்பாக நடக்கும். பலன்களும் விரைவில் கிடைக்கும்.

ஆசனங்கள் செய்த 15 நிமிடங்கள் கழித்துத்தான், தண்ணீரோ உணவுகளோ எடுத்துக்கொள்ளலாம்.

மாதவிலக்கு சமயத்தில் ஆசனங்கள் செய்வதைத் தவிர்க்கலாம். ஆனால், பிராணயாமா (மூச்சுப் பயிற்சி) செய்யலாம். இந்த சமயத்தில் எனர்ஜி தேவைப்படும், அது, மூச்சுப் பயிற்சிகளின் மூலமாகக் கிடைக்கும்.

கர்ப்பிணிகளுக்கு, மூன்று முதல் ஒன்பது மாதங்கள் வரை செய்வதற்கு என சில யோகா உள்ளன. மருத்துவர் பரிந்துரைத்தால் அதைச் செய்யலாம். இதனால், சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும், பிரசவ வலியை எதிர்கொள்ளும் மன, உடல் உறுதியை அளிக்கும்.

சுயமாக முயற்சிக்காமல், பயிற்சி பெற்ற நிபுணர்களிடம் யோகா பயின்று, அவர் முன்னிலையில் பயிற்சி பெற்ற பிறகு, வீட்டில் செய்வது நல்லது.

நலம் தரும் யோகா!

யோகாவின் 8 பலன்கள்

ஒவ்வொரு யோகாவும் ஒவ்வொரு பலனைத் தரக்கூடியது. அவரவர் உடல் தேவைக்கு ஏற்ப யோகாசனம் செய்யலாம். யோகாவின் பொதுவான எட்டு பலன்கள் என்னென்ன?

இதயத்துடிப்பைச் சீராக்குகிறது. இதன் மூலம் உடல் முழுக்கச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கிறது. இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

உடலை ஓய்வுபெறச் செய்கிறது. தொடர்ந்து யோகா செய்துவந்தால், உடலில் ரத்த ஓட்டம் சீரடைகிறது. உடலில் உள்ள உறுப்புக்களுக்கு ஆக்சிஜன் ஓட்டம் நன்றாக நடப்பதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது.

யோகாவின் மிக முக்கியப் பலன், உடலின் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகரிப்பதுதான். முதல்நாள் பயிற்சியின்போது பெரும்பாலானவர்களால் உடலை வளைத்து கால் விரல்களைத் தொடக்கூட முடிவது இல்லை. ஆனால், தொடர்ந்து பயிற்சி செய்துவரும்போது, முடியாது என்று நினைத்த ஆசனங்கள்கூட எளிதில் செய்யக்கூடிய அளவுக்கு உடலின் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகரிப்பதை உணரலாம்.

தொடர்ந்து யோகா செய்யும்போது, சர்க்கரை அளவு மற்றும் கெட்ட கொழுப்பின் அளவு கட்டுக்குள்வருகின்றன. நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இன்சுலின் செயல்திறன் குறைய மனஅழுத்தமும் ஒரு காரணம். அதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

நலம் தரும் யோகா!

யோகா, தசைகளின் வலிமையை அதிகரிக்கச்செய்கிறது. தசைகள் உறுதியாக இருந்தால்தான் நம்மால் இயங்கவே முடியும். மூட்டுவலி, முதுகுவலி, தடுமாறி விழுவது போன்றவற்றைத் தவிர்க்க முடியும். யோகா செய்வதன் மூலம் வலிமையான மற்றும் வளைந்துகொடுக்கக்கூடிய தசைகளைப் பெறலாம். உடலின் சமநிலை மேம்படும்.

மனஅழுத்தத்துக்குக் காரணமான கார்டிசோல் என்கிற ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், கோபம், ஸ்ட்ரெஸ் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன. மகிழ்ச்சியான மனநிலை உருவாகிறது.

உடல் உழைப்பதாலும் மனஅழுத்தத்தைப் போக்குவதாலும் மூளை நரம்பு மண்டலம் சீராகி, நல்ல ஆழ்ந்த தூக்கம் வருவதற்கான வாய்ப்பு  உருவாகிறது.

தன்னம்பிக்கை குறைந்து, மனஅழுத்தம் அதிகரிக்கும்போது மருந்துகள் எடுத்துக்கொள்வது, அதிகமாகச் சாப்பிடுவது, தூக்கமின்மை என்று பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுவர். யோகா செய்வதன் மூலம், ஃபிட்னெஸ், ஆரோக்கியம் என அனைத்தும் வசப்படும்போது, நம் மீது அதிக நம்பிக்கை ஏற்படும். எதையும் துணிவுடன் செய்யும் மனநிலையை, மன வலிமையை யோகா தருகிறது.

- ப்ரீத்தி, படங்கள்: வீ.சக்திஅருணகிரி