
“நான் ஒரு சோம்பேறி. ஜிம்முக்குப் போய், கலோரி குறைக்கிறது எனக்கு சரிவராது. ஆனால், டான்ஸ் ஆடியே என் எக்ஸ்ட்ரா கலோரிகளைக் கரைச்சிடுவேன்” என்கிறார் பிரபுதேவா, இந்தியாவின் டாப் டான்ஸர். 42 வயதிலும் “ரப்பர் போல சொன்னபடி துள்ளுது பார்” உடலை மெயின்டெய்ன் செய்கிற இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன்.
ஹெல்த் ரூல்
“நாம் என்ன உட்கொள்கிறோம், எப்போது உட்கொள்கிறோம் என்பது மட்டுமே நமது ஆரோக்கியத்தை முடிவுசெய்யும். மற்ற உடற்பயிற்சிகள் எல்லாம் அதை எளிமையாக்கும் வேலை மட்டுமே.”
டயட்
பிரபுதேவா சுத்த சைவம். அதிலேயே எல்லா சத்துக்களும் கிடைக்கும்படி தனது டயட் சார்ட்டைப் பார்த்துக் கொள்கிறார். ஸ்கிம்டு மில்க், கார்ன் ஃப்ளேக்ஸ் இரண்டும்தான் காலை உணவு. மதியம் இரண்டு சப்பாத்தி, கொஞ்சம் காய்கறிகள். இரவு ஏழு மணிக்குள் மிதமான டிஃபன். ஏழு மணிக்கு மேல் பிரபுவை சாப்பிடவைப்பது சிரமம். படப்பிடிப்பு போன்ற வேலைகள் இருந்தால் மட்டும் ஃப்ரெஷ்ஷான பழங்களை எடுத்துக்கொள்வார்.
மகிழ்ச்சி சீக்ரெட்
“நம்மை மகிழ்ச்சியாக்க வைத்திருப்பதே ஹெல்த்தியான வாழ்க்கைக்கு ஷார்ட் கட். அந்த மகிழ்ச்சியை எனக்கு நடனம் தருகிறது. நான் நடக்கும்போது, சாப்பிடும்போது, தூங்கும்போதுகூட நடனம் ஆடுவதைப் போல உணர்வேன். ஒவ்வொருவரும் தனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியது முக்கியம்.”
ஸ்ட்ரெஸ் தவிர்க்க...
‘‘டயட், உடற்பயிற்சி எல்லாம் நாம் அன்றாட வாழ்வில் நாம் சேர்க்க வேண்டிய ஃபிட்னெஸ் மந்திரங்கள். ஆனால், சிலவற்றைத் தவிர்த்தாலே நமது மனமும் உடலும் ஃபிட்டாக இருக்கும். அதில் ஒன்று ஸ்ட்ரெஸ். எனக்கு, அன்றைய மூடுக்கு ஏற்ற படங்களைப் பார்த்தாலே எல்லா ஸ்ட்ரெஸும் காணாமல் போய்விடும். எந்த சூழலிலும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்க சினிமாதான் காரணம்.’’
உடற்பயிற்சி
பிரபுதேவாவுக்கு தியானம் முக்கியமான விஷயம். தினமும் அதிகாலையில் தியானம் செய்துவிட்டு, இயற்கையை ரசித்தபடி ஒரு குட்டி வாக் செல்வாராம். வாரம் இரண்டு முறையாவது நீச்சல் குளத்தில் பிரபுவைப் பார்க்கலாம். மற்ற எந்த ஜிம் வொர்க்அவுட்டும் கிடையாது. நடனம் நடனம் நடனம் மட்டும்தான்.
- கார்க்கிபவா
