
ட்ரையத்லான் என்றதும் ஏதோ அத்லெட்கள் மட்டுமே பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி என்று நினைக்க வேண்டாம். இன்று, ஆயிரக் கணக்கானவர்கள் தங்கள் உடலை, மனதை உறுதிப்படுத்தும் அன்றாடப் பயிற்சியாக இதைச் செய்கின்றனர். ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங் என மூன்றுவிதமான பயிற்சிகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து செய்யும்போது, ஃபிட்னெஸ் முதல் தன்னம்பிக்கை வரை பல நன்மைகள் கிடைக்கின்றன.
முழு உடலுக்கான பயிற்சி
மூன்று பயிற்சிகளையும் செய்யும்போது, உடலின் அனைத்துத் தசைகளும் இயங்குகின்றன. நீச்சல் செய்யும்போது உடலின் மேல் பகுதி அதிக அளவில் இயக்கப்படுகிறது. சைக்கிளிங், ரன்னிங் கால்கள், இடுப்பு என உடலின் கீழ்ப் பகுதித் தசைகளை உறுதிப்படுத்துகிறது. மொத்தத்தில், உடல் முழுவதும் உள்ள தசைகளை இயக்கி, வலிமைப்படுத்தி, உடலை ஃபிட்டாக்குகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடல் எடை குறைகிறது
மூன்று பயிற்சிகளுமே உடல் எடையைக் குறைக்க உதவக்கூடியவைதான். இவற்றை ஒருங்கிணைத்துச் செய்யும்போது, உடல் எடை மிக விரைவில் குறைகிறது. உடலில் அனைத்துப் பகுதியிலும் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடலை ஃபிட்டாக்குகிறது.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம்
ட்ரையத்லான் பயிற்சி பெறும்போது அதிகப்படியான ஆற்றல் எரிக்கப்படும். எனவே, உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெற சத்தான உணவை எடுக்க வேண்டும். இதனால், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஏற்படுகிறது.
உடல் நலத்தை மேம்படுத்துகிறது
தொடர்ந்து இந்தப் பயிற்சிகள் செய்யும்போது, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகின்றன. இதனால், உடல் பருமன், இதய நோய்கள், புற்றுநோய், எலும்பு அடர்த்திக் குறைதல் போன்ற உடல்நலக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைகின்றன.

இளமையை உணர முடியும்
உடல் ஸ்லிம்மாக ஃபிட்டாக மாறும்போது, அது வயது குறைந்த உணர்வை, வாழ்வுக்குப் புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறது. இது உடலுக்குப் புத்துணர்ச்சி, ஆற்றல், வலிமை மற்றும் இளமையைத் தருகிறது. ரன்னிங் பயிற்சி கொழுப்பைக் கரைத்து, ஃபிட்டான தசை அமைப்பை உருவாக்குகிறது; சைக்கிள் ஓட்டுதல் தசைகளை வலிமையானதாக உருவாக்குகிறது. நீச்சல் பயிற்சி, தசைகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இவை மூன்றும் உடலை கட்டுக்கோப்பானதாக மாற்றுகின்றன.
காயங்களுக்கான வாய்ப்புக் குறைகிறது
வெறும் ஓட்டப் பயிற்சி மட்டும் செய்யும்போது, அது உடலின் குறிப்பிட்ட பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, குறிப்பிட்ட பகுதியில் உள்ள தசைகள் பாதிப்பு, மூட்டு வலி உள்ளிட்ட பிரச்னை ஏற்படலாம். இதுவே, மூன்று வெவ்வேறு பயிற்சிகளை செய்யும்போது, உடலின் எல்லா பகுதிகளுக்கும் சரிவிகிதத்தில் அழுத்தம் கொண்டு செல்லப்பட்டு, தசைகள் ஃபிட்டாகின்றன. இதனால், மூட்டுவலி, தசை வலிக்கான வாய்ப்புக் குறைவதுடன், உடலும் உறுதியாகிறது.

ஆற்றல் மிக்கவர்களாக மாற்றுகிறது
ட்ரையத்லான் பயிற்சி செய்வது மனதைத் தெளிவுபடுத்தி, ஒருமுகப்படுத்தி, இலக்கை நோக்கிப் பயணிக்க உதவுகிறது. புத்துணர்வுடன், மகிழ்ச்சியுடன் இருக்கச்செய்கிறது. மனதளவில் வலிமையானவர்களாக்குகிறது.
மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது
தொடர் பயிற்சி செய்யும்போது கார்டிசோல் என்கிற மனஅழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன் அளவு குறைகிறது. மனஅழுத்தமான சூழலிலும் எப்படிச் செயல்பட வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
உணவுகள்
ட்ரையத்லானில் பங்கேற்க முதலில், ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்த்து, சத்தான உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும். காலையில் ஃப்ரெஷ் ஜூஸ் அருந்தலாம்.
ட்ரையத்லானில் இருப்பவர்களுக்கு அதிகப் பசி எடுக்கும்போது, பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
உடலுக்கு ஏற்ற உணவுகளை டாக்டர் அல்லது டயட்டீஷியன் அறிவுரைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள வேண்டும்.
பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம்
அதிகாலையில் 4 முதல் 7 மணி வரை பயிற்சி எடுக்க வேண்டும்.
இந்த நேரத்தில்தான் நமது உடல் சுறுசுறுப்பாகவும் எனர்ஜியுடனும் இருக்கும்.
இதைத் தினமும் மேற்கொண்டால், நமது உடல் நாம் சொல்வதைக் கேட்கும்.
தினமும் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியை, ஒரு நாள் தவறினால் அன்றைய நாள் ஏதோ ஒன்று இழந்ததைப் போல் இருக்கும்.
இதன் மூலம் நேரத்தைப் பின்பற்றும் பழக்கம் நமக்குக் கிடைக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எப்பொழுதும் இருக்கும்.
- ஆ.சுசேந்திரி
ட்ரையத்லான் வகைகள்

ஸ்பிரின்ட் (Sprint)
ஸ்பிரின்ட் என்பது ட்ரையத்லான் வெற்றியின் ஆரம்பநிலை. நீச்சலில் 750 மீட்டர், சைக்கிளிங்கில் 20 கி.மீ, ஓட்டத்தில் 5 கி.மீ பங்கேற்று வெற்றி பெற வேண்டும்.
ஒலிம்பிக் (Olympic)
ஒலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ தூரம் இது. இந்த நிலையில், நீச்சல் 1.5 கி.மீ, சைக்கிளிங் 40 கி.மீ, ரன்னிங் 10 கி.மீ மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும். நல்ல உடல்நிலை இருந்தால் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.
ஹாஃப் ஐயன் மேன் (Half Iron Man)
சற்று சவாலானது. இதற்கான தூரங்கள் முறையே நீச்சல் 1.9 கி.மீ, சைக்கிளிங் 99 கி.மீ, ரன்னிங் 21 கி.மீ. ஸ்பிரின்ட், ஒலிம்பிக் முடிக்காமல் இதை முயற்சிக்கக் கூடாது.
ஃபுல் ஐயன் மேன் (Full Iron Man)
இதுதான் ட்ரையத்லானின் கடைசிப் பகுதி. மேற்கூறிய மூன்றிலும் வெற்றி பெற்றவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இதற்கான தூரங்கள் முறையே, ஸ்விம்மிங் 3.8 கி.மீ, சைக்கிளிங் 180 கி.மீ, ரன்னிங் 42 கி.மீ (மராத்தான் தூரம்). இதில் வெற்றி பெற்றவர்களை ஃபுல் ஐயன் மேன் அல்லது ஐயன் மேன் (Iron Man) என்பார்கள்.

“ஆஸ்துமா பிரச்னை சரியாக, மருத்துவசிகிச்சையுடன் ட்ரையத்லான் பயிற்சியும் உதவும்” என்று நண்பர்கள் கூறவே, ஈஸ்வரி ஆண்டியப்பன் தன் மகனை நீச்சல் பழக அழைத்துச் சென்றார். மகனின் வற்புறுத்துதலால் ஈஸ்வரியும் நீச்சல் பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தார். நீச்சல் கற்றுக்கொண்டு இருவரும் ட்ரையத்லான் பயிற்சிசெய்ய ஆரம்பித்தனர். தற்போது, அவரது மகனுக்கு ஆஸ்துமா பிரச்னை கட்டுக்குள் வந்திருக்கிறது. ஈஸ்வரியோ ஸ்பிரின்ட், ஒலிம்பிக், ஆஃப் ஐயர்ன் மேன் என்ற நிலைகளைத் தாண்டி முழு இரும்புப் பெண்ணாக (ஃபுல் ஐயர்ன் மேன்) உருவெடுத்திருக்கிறார்.